மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 16 | மு. நியாஸ் அகமது

9 views

“மதியாதார் தலைவாசல் மிதியாதே…!” – இது ஒளவை பாட்டி சொன்னது. சரிதான்… நம்மைப் புறக்கணிப்பவர்களை, நம் இருப்பை விரும்பாதவர்களை, நம்மைப் புழுவாக நினைப்பவர்களை… நாம் கண்டுகொள்ளாமல், அவர்கள் வாசலை மிதியாமல் இருப்பதுதான் சரி. மறுப்பதற்கில்லை. ஒளவையை ஒப்புக்கொள்ள வேண்டியதுதான். ஆனால், நம்மை மதியாதார் வாசலில்தான், நம் எதிர்காலம் இருந்தால்…. நம் வாழ்வு இருந்தால்… எப்படி மிதிக்காமல் இருக்க முடியும்? சரி, வாசலை மிதிக்காமல் இருந்துவிட்டுப் போவோம்…. ஆனால், வீட்டைக் கைப்பற்றலாம் அல்லவா…? ஆம், இதை… இதைத்தான் செய்தார் ஜெயலலிதா. அவரை புழுவாக மதித்தார்கள், அப்போதைய அ.தி.மு.க-வின் முன்னணித் தலைவர்கள். புழுதான் கடுமையான நிலத்தையும் ஊடுருவும் என்பது அவர்களுக்கு ஏனோ தெரியாமல் போனது. அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டவர்… பொறுத்துப் பார்த்தார், கெஞ்சிப் பார்த்தார், அழுதும் பார்த்தார். இனி இது எதுவும் உதவாது என்ற முடிவுக்கு வந்தார். ‘சிவாஜி’ பட ரஜினி பாணியில் சொல்ல வேண்டுமென்றால்… இனி ‘பூ’ பாதை உதவாது. ‘சிங்க’ப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார். வெகுண்டெழுந்தார்.

Jayalalithaa 002_12464‘வெகுண்டெழுந்த ஜெ…!’

இதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. ஜெயலலிதா தன் அம்மா ஸ்தானத்தில் வைத்து மதித்த இந்திரா காந்தியின் மரணமும், அவரை மிகவும் கவலையுறச் செய்தது. இந்திரா காந்திதான் அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவுக்கு இருந்த நம்பிக்கை. இந்திராவுக்கும் பிடித்தமான இளம் தலைவராக ஜெயலலிதா இருந்தார். அதனால்தான் அப்போதைய யூகோஸ்லாவியா நாட்டு அதிபருக்குக் கொடுத்த விருந்தில், ஜெயலலிதாவையும் அழைத்தார். அந்த விருந்தில் மொத்தம் 16 பேர்தான் அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஜெயாவும் ஒருவர். விருந்துக்கு அழைத்தது மட்டுமல்லாமல், அவரை தனிப்பட்ட முறையில் அதிபருக்கும் அறிமுகப்படுத்திவைத்தார். இதுவெல்லாம், ஜெயலலிதா மனதில் பெரும் நம்பிக்கையை விதைத்திருந்தது. இக்கட்டான சூழலில் நம்மை அவர் காப்பார் என்று நம்பினார். ஆனால், அதிலும் பேரிடி விழுந்தது. இனி தன் இருப்பைக் காக்க எந்தத் தேவ தூதனும் வரமாட்டான்… நம்மை நாம்தான் காத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்.

பத்திரிகையாளர்களும் ஜெயலலிதாவைக் கட்சியிலிருந்து ஒதுக்குவதைக் கவனித்தே வந்தனர். தமிழக ஊடகவியலாளர்கள் மட்டும் அல்ல… டெல்லியிலும்தான். ஏனெனில், எம்.ஜி.ஆர் உடல்நிலை சரியில்லாமல், அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட பின், ஜெயாவின் நாடாளுமன்றத் துணைத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது. அது மட்டும் இல்லாமல், டெல்லியில் தமிழ்நாடு இல்லத்தில் அவருக்கு ஒதுக்கப்பட்ட வி.ஐ.பி அறையிலும் அனுமதி மறுக்கப்பட்டது. இதற்கெல்லாம் என்ன காரணம்…? ஏன் ஜெயலலிதா ஒதுக்கப்படுகிறார் என்று தெரிந்துகொள்ள டெல்லி பத்திரிகையாளர்கள் ஆர்வமாக இருந்தனர். அவர்கள் எல்லோரையும் அழைத்தார்…  ஓர் அதிர்ச்சிகரமான பேட்டியைச் சர்வ சாதாரணமாக டெல்லியில் அளித்தார். அந்த பேட்டி இதுதான்,
“நான் என்ன சந்தேகிக்கிறேன் என்றால்….  எம்.ஜி.ஆரின் மனத்திறன் சரியாக இல்லை என்று. அது மட்டுமல்ல… கட்சியில் உள்ள சில சுயநலவாதிகளால் எம்.ஜி.ஆர் சிறைவைக்கப்பட்டிருக்கிறார் என்றும் சந்தேகிக்கிறேன்…” என்று திரியைக் கொளுத்திப் போட்டார்.

டெல்லியில் கொளுத்திப் போட்ட திரி… தமிழகத்தில் வெடித்தது. தலைவர்கள் கோபமுற்றார்கள். அவரது பேச்சை அப்படியே புரூக்லினுக்கு ஃபேக்ஸ் செய்தார்கள். அவர்கள் ஜெயாவை வீழ்த்த மும்முரமாக இருந்தபோது… ஜெயாவும் தன் மீட்சிக்காக டெல்லியில் கடுமையாக உழைத்துக்கொண்டிருந்தார். காங்கிரஸின் அனைத்துத் தலைவர்களையும் சந்தித்தார். ‘‘தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது’’ என்றார். இது, நன்கு வேலை செய்யத் தொடங்கியது. காங்கிரஸ் தலைவர்கள் சிலர் இவருக்கு ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கினார்கள்.

‘தலைவர் நலமாக இருக்கிறார்!’

இந்திரா காந்தி மரணத்துக்குப் பின், நாடாளுமன்றத் தேர்தலும்… தமிழக சட்டமன்றத் தேர்தலும் ஒன்றாக வருகிறது. அந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வும், காங்கிரஸும் கூட்டணி. நிச்சயம் ஜெயித்துவிடுவோம் என்பது இரண்டு கட்சிகளுக்கும் நன்கு தெரியும். இந்திரா இறந்தது மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவமனையில் இருப்பது… இந்த இரண்டும் அனுதாப அலைகளை உண்டாக்கும். நாம் அறுதிப்பெரும்பான்மையைக் கைப்பற்றலாம் என்று அ.தி.மு.க தலைவர்கள் நினைத்தார்கள். ஹூம்… அவர்கள் இன்னொன்றுக்கும் திட்டமிட்டார்கள். எந்தக் காரணத்தைக் கொண்டும் ஜெயலலிதாவை பிரசார கூட்டத்துக்கு அழைக்கக் கூடாது. இந்தத் தேர்தலோடு அவர் அரசியல் வாழ்வை அஸ்தமிக்க செய்ய வேண்டும் என்பதுதான் அந்தத் திட்டம்.

ஆனால் காங்கிரஸ், தி.மு.க-வை எதிர்கொள்ள கடுமையான பிரசாரம் வேண்டும் என்று நினைத்தது. ராஜிவ் காந்தி அந்தப் பிரசாரத்தை மேற்கொள்ள ஜெயலலிதா வேண்டும் என்று நினைத்தார். தமிழக அ.தி.மு.க தலைவர்களுடன் பேசினார். அதற்குப் பின்தான் ஜெயலலிதா தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதாவைப் பார்க்க கூட்டம் அலைமோதியது. உண்மையில், அந்த எளிய தொண்டர்கள் கூடியது ஜெயலலிதாவைப் பார்க்க அல்ல… அவர், எம்.ஜி.ஆர் குறித்து என்ன சொல்லப்போகிறார் என்று அறிந்துகொள்வதற்காக. ஜெயலலிதாவும் அதை நன்கு உணர்ந்திருந்தார். டெல்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசியதுபோல் எல்லாம் பேசவில்லை… அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கும்விதமாக… “தலைவர் நலமாக இருக்கிறார்… மீண்டும் வருவார்” என்றார் கம்பீரமான தொனியில். இந்த ஒரு வாக்கியத்தைக் கேட்க… ஜெயலலிதா சென்ற இடமெல்லாம் கூட்டம் கூடியது. தேர்தலில் மகத்தான வெற்றியும் கிடைத்தது.

தேர்தல் முடிந்த ஏறத்தாழ ஒன்றரை மாதங்களுக்குப் பின் எம்.ஜி.ஆர் அமெரிக்காவிலிருந்து வருகிறார். அவரைச் சந்திக்க மீனம்பாக்கம் விமானநிலையத்தில் ஜெயலலிதா காத்துக்கொண்டிருந்தார். ஆனால், அங்கு எந்த முன்னணித் தலைவர்களும் இல்லை… இது, ஜெயலலிதாவுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. ஆம்… ஜெயலலிதா மீனம்பாக்கத்தில் காத்துக்கொண்டிருக்க… செயின்ட் தாமஸ் ராணுவப் பயிற்சி மைய ரன்வேயில் வந்து இறங்கினார் எம்.ஜி.ஆர்.

 

 

தொடரும்)

 

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + ten =