மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 18 | மு. நியாஸ் அகமது


ல்லோருக்கும் சில விருப்பங்கள் இருக்கும்… அது, நிகழவே நிகழாது. அதை, நிகழ்த்த முடியாது என்று நமக்கு நன்கு தெரியும். இருந்தாலும் அதற்காக நாம் ஏங்குவோம். அதுபோல ஓர் ஏக்கம், ஜெயலலிதாவுக்கு தன் சிறுவயது முதலே இருந்தது. அது, ‘தான் ஆணாகப் பிறக்கவில்லையே…’ என்பதுதான். இதுகுறித்து அவர் எழுதியும் இருக்கிறார். “எனக்கு விவரம் புரியத்தொடங்கிய நாள் முதலே, என் உள்ளத்தின் அடித்தளத்தில் நீங்காமல் இருந்துவரும் பெரிய மனக்குறை – நான் ஆணாகப் பிறக்கவில்லையே என்பதே ஆகும். கூடுமானவரையில் பிள்ளைப்பிராயத்திலேயே ஓர் ஆண் பிள்ளையைப்போலவே நடந்துகொள்ள முயல்வேன். திரைப்படத் துறையில் பணியாற்றத் தொடங்கிய ஆரம்ப காலத்திலும் அதே உணர்வு தொடர்ந்து இருந்தது…” என்று பின்னாளில் எழுதி இருக்கிறார். இனி ஆண் பிள்ளையாக மாற முடியாது. ஆனால், ஆண் பிள்ளை போன்ற வேஷத்தில் நடக்க முடியும்தானே…?  Tom – Boy போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஏங்கியவருக்கு, தன் விருப்பத்தைப் பூர்த்தி செய்துகொள்ள ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ‘ரகசிய போலீஸ் 115’ படத்தில் அப்படியான வேஷம்.

‘கடிந்துகொண்ட எம்.ஜி.ஆர்!’

‘ரகசிய போலீஸ் 115’ திரைப்படத்தில் ஜெயலலிதாவுக்கு டாம் பாய் மாதிரி ரவுடித்தனமாக அட்டகாசம் செய்து நடிக்கும் வேஷம். அந்தப் படத்தின் இயக்குநர் பந்தலுவுக்கு, ஒருநாள் உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதனால், அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர் இயக்கி இருக்கிறார். அன்று, ஜெயலலிதாவின் நடவடிக்கைகள் ஏறத்தாழ ஆண் பிள்ளையைப்போலவே இருந்திருக்கின்றன. இதைக்கண்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவைத் தனியாக அழைத்து, “அம்மு… ஒரு விஷயத்தை மறந்துவிடாதே! நீ அணிந்திருக்கும் உடை மட்டுமே ஆணின் உடையே தவிர, நீ ஏற்றி இருக்கும் வேஷம் கதாநாயகியின் வேஷம்தான்….” என்று அறிவுறித்தி உள்ளார். இதைப் பின்னாளில் பகிர்ந்த ஜெயலலிதா, ‘‘ஆண் பிள்ளையாக பிறக்க வேண்டும் என்ற ஆசையை, நான் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம், இவ்வாறாக வெளிப்படுத்தி இருக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

இதுபோல இன்னொரு சம்பவமும் அவருக்குத் திரைத்துறையில் நிகழ்ந்திருக்கிறது. அந்தச் சம்பவத்தின் பின்தான் தன் துடுக்குத்தனம் மாறியதாக ஜெயலலிதாவே குறிப்பிடுகிறார். அது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆருக்கு மிகுந்த கோபம் வரும் என்பதையும் அந்தச் சம்பவம்தான் தனக்கு உணர்த்தியது என்று பின்னாளில், ‘எனக்குப் பிடித்த வாத்தியார்’ என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதான் அந்தச் சம்பவம். அது, ‘முகராசி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு. அதன் இயக்குநர் எம்.ஏ.திருமுகம், ஏதோ சில காரணங்களால் ஒரு நாள் படப்பிடிப்புக்கு வரவில்லை. அந்தக் காட்சியை எம்.ஜி.ஆர் இயக்கி இருக்கிறார். அன்றைய காட்சியில், எம்.ஜி.ஆர் கோபமாக நடந்துசெல்ல, ஜெயலலிதா அவர் பின்னால், ‘அத்தான்… நில்லுங்கள்! போகாதீர்கள்…’ என்று அழுதவாறே அவரைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் அந்தக் காட்சியை இயக்க ஆயத்தமாகிறார். அந்தக் காட்சிக்கான ஒத்திகை நடக்கிறது. மாரிமுத்து என்ற உதவி இயக்குநர் எம்.ஜி.ஆராக ஒத்திகையில் நடிக்க… அவர் பின்னால் ஜெயலலிதா வசனங்களை உச்சரித்துக்கொண்டு போக வேண்டும். ஆனால், ஜெயலலிதா, விளையாட்டாகச்  சிரித்துக்கொண்டே அந்த ஒத்திகையில் நடித்துள்ளார். இதைக் கண்ட எம்.ஜி.ஆர் மிகவும் கோபமாக, “என்ன சிரித்தாகிவிட்டதா… விளையாட்டெல்லாம் முடிந்துவிட்டதா… இனிமேல் ஒழுங்காக ஒத்திகை பார்க்கலாமா… இங்கே வேலை பார்க்க வந்தோமா, இல்லை விளையாட வந்தோமா…” என்று கடிந்துகொண்டிருக்கிறார்.

முதன்முதலாக எம்.ஜி.ஆர், இந்த அளவுக்குக் கோபப்பட்டது ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. அன்று படப்பிடிப்பு முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் ஜெயலலிதாவிடம், “கோபமா பேசிட்டேன்லே…? எனக்குத் தெரியும் வேணும்னு நீ அப்படி நடந்துக்கலை. நீ சின்னப் பொண்ணு… காலேஜ்ல தோழியரோடு சிரித்து விளையாட வேண்டிய வயசுல இங்க வந்து கஷ்டப்படுற” என்று ஆறுதல் சொல்லி இருக்கிறார்.

இதை ஏன் இந்த அத்தியாயத்தில் குறிப்பிடுகிறேன் என்றால்… ஜெயலலிதாவுக்கும் எம்.ஜி.ஆருக்குமான உறவு இத்தகையானதாகத்தான் இருந்திருக்கிறது. மற்றவர்களிடம் கோபப்படுவதுபோல, அவரால் முழுமையாக ஜெயலலிதாவிடம் கடிந்துகொள்ள முடியவில்லை. ஜெயலலிதாவே தவறு செய்திருந்தாலும், இவர் இறங்கி வந்திருக்கிறார். இல்லை, ஜெயலலிதா கண்ணீர்விட்டால் துடித்துப்போய் இருக்கிறார். ஒவ்வொரு முறையும் இதுதான் நிகழ்ந்திருக்கிறது.

சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்தானே…? ஜெயலலிதா மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதினார் என்று. அதன் பின்னால் எம்.ஜி.ஆரின் மனம் கரைந்திருக்கிறது. ஜெயலலிதாவிடம் சகஜமாகப் பேசத் தொடங்கி இருக்கிறார். ஆனால், ஜெயாவுக்கு கட்சியில் எந்தப் பெரிய பொறுப்பையும் வழங்கவில்லை.

இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க… அ.தி.மு.க-வில் தனக்குப் பின்னால் யார் என்று குறிப்பிடாமலேயே டிசம்பர் 24, 1987 எம்.ஜி.ஆர் மரணிக்கிறார்.

‘அவமானங்களை சந்தித்த ஜெ.!’

 

தகவலறிந்த ஜெயலலிதா ராமாவரத் தோட்டத்துக்கு விரைகிறார். ஆனால், அவர் வாசலைத் தாண்டி உள்ளே வர அனுமதிக்கப்படவில்லை. அதற்குள் எம்.ஜி.ஆரின் உடல், மக்களின் பார்வைக்காக ராஜாஜி ஹாலுக்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. அவர், உடனே அங்கு விரைகிறார். அங்கும் இதே நிலைதான். எப்படியோ… உள்ளே  நுழைகிறார். எம்.ஜி.ஆர் உடலுக்கு அருகே அமர்ந்துகொள்கிறார். ஏறத்தாழ 21 மணி நேரம் எங்கும் நகராமல், அங்கேயே அமர்ந்துகொள்கிறார். எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கும் மனவருத்தங்கள் இருந்தது எதுவும் ரசிகர்களுக்குப் பெரிதாகத் தெரியாது. தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்று காட்டிக்கொள்ள வேண்டிய தேவை ஜெயலலிதாவுக்கு இருந்தது. அதனால், எம்.ஜி.ஆரின் தலைமாட்டிலேயே உட்கார்ந்துகொள்கிறார்.

ஆனால், அவரை அங்கிருந்து வெளியே அனுப்பச் சிலர் தங்களால் ஆன அனைத்து கைங்கர்யங்களையும் கட்டவிழ்த்துவிடுகிறார்கள். ஜெயலலிதாவைக் கிள்ளுகிறார்கள்; அவர், பாதங்களை கீறுகிறார்கள். ஆனால், ஜெ கொஞ்சமும் அசைந்துகொடுக்கவில்லை. அவர், எம்.ஜி.ஆரையே வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். இனி தன் நிலை என்ன… என்பது மட்டும் அவர் சிந்தனையாக அப்போது இருந்திருக்க வேண்டும்.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =