மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 19 | மு. நியாஸ் அகமது

7 views

“உன்னை மதிப்பிடுகிறார்களா…? கொட்டாவி விடு
உன்னை தவறாக நினைக்கிறார்களா…? புன்னகைத்து விடு
உன்னை குறைவாக எடை போடுகிறார்களா…? பலமாக சிரித்து விடு
உன் மீது குற்றம் சுமத்துகிறார்களா…? புறந்தள்
உன் மீது பொறாமை கொள்கிறார்களா…? உற்சாகம் கொள்
உனக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்களா…? முன்னேறிச்  செல்”
–  தத்துவஞானி மத்ஷோனா
.

இவ்வரிகளில் உள்ளவாறே ஜெயலலிதா செய்தார். அவரைக் குறைவாக மதிப்பிட்டபோது, குற்றம் சுமத்தியபோது, பொறாமை கொண்ட போது… தன் நடவடிக்கைகளின் மூலம், தன்னை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது என்று புரியவைத்தார்.  எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர்,  முன் எப்போதும் இல்லாததை விட கட்சிக்குள் பலமான எதிர்ப்பு. ஜெயலலிதாவின் இருப்பை  இல்லாமல் ஆக்கிவிட வேண்டும் என்ற அளவுக்கு எதிர்ப்பு.  ஆயிரம் சண்டைகள் இருந்தாலும் ஆபத்பாந்தவனாக இருந்த எம்.ஜி. ஆர் இப்போது இல்லை. என்ன செய்தார்… இந்த எதிர்ப்புகளுக்கு என்ன பரிசளித்தார்…?  மத்ஷோனா சொல்லியதை தான் ஜெயலலிதா செய்தார்..  ‘முன்னேறிச் சென்றார்..!’

‘அவமானப்படுத்தப்பட்ட ஜெ!’

1987, டிசம்பர் 25. தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் அதிமுகவினர், எம்.ஜி. ஆர் ரசிகர்கள், ஏழை, பணக்காரர்கள், சாமானிய மக்கள் என்ற பேதமில்லாமல் எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்னையில் முற்றுகையிட்டு இருந்தனர். ராஜாஜி அரங்கத்திலிருந்து எம்.ஜி.ஆரின் உடல்  ராணுவ வண்டியில் முழு அரசு மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. வழி நெடுகிலும் லட்சக்கணக்கானோர் திரண்டுள்ள கூட்டம். காணும் இடமெங்கும் மனித தலைகள்… அழுகை சத்தம். இது எதையும் ஜெயலலிதா உள்வாங்கவில்லை. அழுகையின் அதிர்வுகளை உடலெங்கும் பரவவிட்டு… அமைதியாக அந்த ஊர்வல வண்டியில் அமர்ந்து இருக்கிறார். அன்று மட்டும் அவரை அமைதியாக அந்த ஊர்வலத்தில் செல்ல அனுமதித்து இருந்தார்கள் என்றால்… சொல்ல முடியாது தமிழகத்தின் அரசியல் வரலாறு முற்றாக மாறி இருந்தாலும், மாறி இருக்கும்…!   ஆனால், அதிமுகவின் அப்போதைய முன்னணி தலைவர்கள் அதற்கு இடம் தரவில்லை. காலமும், இடமும் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது என்கிறது தொல்காப்பியம்… பெளதீகமும் இதை வழிமொழிகிறது. அன்று அந்த தலைவர்கள் தொல்காப்பியத்தையும் நினைக்கவில்லை… பெளதீகத்தையும் நினைக்கவில்லை. ஆம், சூழல் தெரியாமல் ஜெயலலிதாவை வண்டியிலிருந்து கீழே தள்ளிவிட்டனர்… அதோடு விடவில்லை ஜானகியின் உறவினர்கள் அவரை தாக்கவும் செய்தனர். மோசமான வார்த்தைகளால் வசைமாரி பொழிந்தனர்.

அன்று அவர்களின் நாட்குறிப்பில் இரண்டு நிகழ்ச்சி நிரல் இருந்தது. ஒன்று எம்.ஜி. ஆரை மெரினா கடற்கரையில் புதைக்க வேண்டும், அத்தோடு சேர்த்து ஜெயலலிதாவின் அரசியல் அபிலாஷைகளையும்! அப்போது அவருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை? சில ராணுவ வீரர்கள் உதவி செய்தனர்… அவரை அங்கிருந்து மீட்டு… பத்திரமாக அவர் வீடு வரை சென்று விட்டனர்.

ஜெயலலிதா வீட்டுக்குச் செல்வதற்கு முன் அந்த செய்தி காட்டுத்தீயாக தமிழகம் முழுவதும் எல்லோரிடமும் போய்ச் சேர்ந்திருந்தது. அப்பாவி அதிமுக தொண்டனுக்கு, இந்த அரசியல் உள்சண்டைகள் எதுவும் தெரியாது தானே… அவன் ஜெயலலிதாவை அண்ணியாகத் தான் பார்த்தான்…! அவன் துடிதுடித்துப் போனான். எம்.ஜி.ஆர் வேண்டுமானால், தனக்குப் பின் அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா தான் என்பதைச் சொல்லாமல் சென்றிருக்கலாம். ஆனால், அவன் அடுத்த தலைமையாக ஜெயலலிதாவைத் தான் பார்த்தான். தொண்டர்களின் மனநிலையைப் புரிந்த சில எம்.எல்.ஏக்களும், எம்.பி-க்களும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்றனர். அடுத்து என்ன செய்வது? என்று புரியாமல் துடிதுடித்த ஜெயலலிதாவுக்கு தொண்டர்கள் நீட்டிய கரம், புதிய தெம்பைக் கொடுத்தது. அவர்களின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டார். ஆனால், உடனடியாக இப்போது எதுவும் செய்ய முடியாது. அதிமுகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருந்தது.

‘களேபரமான சட்டமன்றம்!’

ஜானகிக்கு 97 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து ஆளுநர் குரானாவிடம் மனு அளித்தனர். அவர் ஜானகியை அரசமைக்க அழைத்தார். ஜானகி தமிழக முதல்வராக ஜனவரி 7, 1988 – ல் பதவியேற்றார். ஜனவரி 28-ம் தேதி அவர் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், அப்போது யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை… தமிழக சட்டமன்ற வரலாறு இந்த நாளை ஒரு கருப்பு தினமாகக் குறித்துக் கொள்ளப் போகிறது என்று. ஆம், அந்த நாள் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் எல்லாம் அரங்கேறின.

ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்த சில அதிமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள், அவைத் தலைவர் பாரபட்சத்துடன் நடந்து கொள்கிறார். அவர் நடுநிலையுடன் இல்லாமல் ஜானகிக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று ஆட்சேபம் தெரிவித்தனர். சிலர் சட்டமன்றத்துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் செய்தனர். யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் சில குண்டர்கள் சட்டமன்றத்துக்குள் புகுந்து ஜெயலலிதா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களை தாக்கத் துவங்கினர். அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற வரலாற்றில் முதன்முதலில் பேரவை வளாகத்துக்குள் போலீஸ் புகுந்தது… லத்திகள் கொண்டு எம்.எல்.ஏக்களை தாக்கியது… ஆனால், இது எதையும் அவைத் தலைவர் கண்டுகொள்ளவில்லை… சட்டமன்றம் கலவரச் சூழலில் இருக்கும்போது… அவர், “ஜானகி அணி, பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று விட்டது” என்று அறிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு தகவல் போகிறது. அவர் தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு விட்டது. உடனடியாக ஆளுநர் ஜானகி, அரசாங்கத்தை கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். அவருக்கு காங்கிரசும் ஆதரவளிக்கிறது. ஜெ ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆளுநரைச் சந்தித்து, அன்று என்ன நிகழ்ந்தது என்று விளக்குகிறார்கள். மத்திய அரசாங்கத்துக்கு தமிழகத்தில் நடந்ததை ஆளுநர், ஒரு அறிக்கையாக அனுப்புகிறார். அத்துடன் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும், குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்.

மத்திய அரசு, ஆளுநரின் அறிக்கையை ஏற்றுக் கொள்கிறது. இதை உண்மையில் ஜெயலலிதா எதிர்பார்த்தாரா என்று தெரியவில்லை….? இந்த களேபரங்கள் நிகழாமல் போயிருந்தால்… அவர் கட்சியை… அதன் பின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு வேறு ஏதாவது பெருந்திட்டம் தேவைப்பட்டிருக்கும். ஆனால், இந்த களேபரங்கள் அனைத்தும் ஜெயலலிதாவுக்கு சாதகமாக்கியது… இலகுவாக்கியது…!

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =