மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 21 | மு. நியாஸ் அகமது


 ‘அம்மாவின் ஆசி பெற்ற வேட்பாளர் ஹிலரி’. சில தினங்களுக்கு முன் சென்னையில் அனைவரையும் புருவம் உயர்த்த வைத்த போஸ்டர் இது. ஹிலரி தோற்று விட்டார். அப்போலோவில்  சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவுக்கு இது தெரியுமா? இல்லை தெரியாதா ? என்று நமக்குத் தெரியாது. தெரிந்திருந்தால் வருந்தி இருப்பார்.  அமெரிக்காவின் அரசியல் மாற்றத்துக்கு…ஹிலரி தோற்றதற்கு ஏன் ஜெயலலிதா வருந்த வேண்டும்…? ஹிலரிக்கும், ஜெயாவுக்கும் அவ்வளவு சிநேகமா…? இல்லை ஹிலரி என்ன ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியா…? இல்லைதான். எந்த தனிப்பட்ட பந்தமும் இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் இயல்பு அது. அவர் எல்லாவற்றிலும் பெண்கள் முட்டி மோதி முன்னேற வேண்டும் என்று விரும்பினார். தலைமைப் பொறுப்பில் பெண்கள் இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் தான் ஜெயலலிதாவை இந்திரா காந்தி ஈர்த்தார்.

‘இற்றுப்போன இதயங்கள்’

அரசியல் வாழ்வின் துவக்க காலத்திலேயே பெண்கள் பல மேடைகளில் சமத்துவம், முன்னேற்றம் குறித்து பேசவும் செய்திருக்கிறார். அதில் ஒன்று அவர் ‘திரு.வி.க ஒரு பல்கலைக் கழகம்’ நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரை.

“பெண்கள் சமத்துவம் என்பதை ஏற்காத இற்றுப்போன இதயங்கள் இன்றும் இருக்கின்றன. மனிதர்கள் நாடோடியாக வாழ்ந்து குடும்பமாகக் கூடியபோது, தலைவி தான் இருந்தாள்; தலைவன் இல்லை. இதை தாய் வழிச் சமுதாயமென்று மனித இன வரலாறு கூறுகிறது. இன்றைக்கும் கிராமங்களில் காளியம்மன், மாரியம்மன், காமாட்சியம்மன் போன்ற பெண் தெய்வங்கள் உண்டு. இவர்கள் தாய் வழிச் சமுதாய காலத்து குலத் தலைவிகள்.

பூமி மாதா பொதுவுடமையாக இருந்தாள். இவளுக்கு எல்லாக் குழந்தைகளும் சொந்தக் குழந்தைகள்தான். ஆனால், இந்த நிலை மாறி சொத்துடமை, தனியுடைமை என எப்போது ஏற்பட்டதோ, அன்று ஆணுக்குப் பெண் அடிமை என்ற முரட்டுத் தத்துவம் எழுந்தது” என்று அவர் அந்த விழாவில் பொதுவுடமையும், பெண்ணியத்தையும் கலந்து பேசினார்.

ஆனால்,  பெண்களுக்கான சமஉரிமை கோரிய ஜெயலலிதா ஆட்சியில்தான், முழுமையான மதுவிலக்கு கோரியதற்காக, மதுரை நந்தினி மீது காவல்துறை வன்முறையை கட்டவிழ்த்து விட்டது.  தத்துவங்கள் நிர்வாகத்திற்கு பொருந்தாது என்று நினைத்து இருப்பாரோ என்னவோ…?

 ‘படுதோல்வி அடைந்த ஜானகி அணி’

சரி, வாருங்கள். சென்ற அத்தியாயத்தில் விட்ட இடத்திலிருந்து துவங்குவோம்.

அதிமுக ஜெயலலிதா அணி, 1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நான்குமுனைப் போட்டி, அ.தி.மு.க. ஜானகி அணி,  தி.மு.க, காங்கிரஸ்,  மூன்றையும் வீழ்த்த வேண்டும்  காங்கிரஸையும், திமுகவையும், வீழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை… குறைந்தபட்சம்  ஜானகி அணியை வீழ்த்தியே ஆக வேண்டும். அப்போது தான் அரசியலில் எதிர்காலம். ஆனால், அது துவக்கத்தில் சுலபமான ஒன்றாக இருக்கவில்லைதான். அந்த அணியில்தான் மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல 1988- ம் ஆண்டு, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் துவங்கிய தமிழக முன்னேற்ற முன்னணி என்ற கட்சியும் ஜானகி அணியைத் தான் ஆதரித்தது. ஆம், “நீ தங்கச் சிலைபோல் இருக்கிறாய்… எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாய்” என்று ஜெயலலிதாவின் 12-வது வயதில், அவரின் நாட்டிய அரங்கேற்றத்தில் தலைமை தாங்கிப் பேசிய சிவாஜி… இப்போது, தேர்தல் களத்தில் அவருக்கு எதிர் அணியில் இருக்கிறார். அது மட்டுமல்ல,  ஜெயலலிதாவை வீழ்த்த அவருக்கு எதிராக போடிநாயக்கனூர் தொகுதியில் நிறுத்தப்பட்டவர், ஜெயலலிதாவுடன் சேர்ந்து தமிழில் அறிமுகமான நடிகை ‘வெண்ணிற ஆடை’ நிர்மலா. காலம் எல்லாவற்றையும் எதிர் எதிர் திசையில் நிறுத்தி இருந்தது.

இத்தனை தடங்கல்களையும் தாண்டி ஜெயலலிதா வெற்றி பெற்றார். போடியநாயக்கனூர் தொகுதியிலிருந்து முதல்முறையாகச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த தேர்தலில் ஜெயலலிதா அணிக்கு 27 இடங்கள் கிடைத்தன. ஜானகி அணி படுதோல்வி அடைந்தது. எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் சில காலம் இடைக்கால முதல்வராக பதவி வகித்த ஜானகியே, ஆண்டிப்பட்டி தொகுதியில் படுதோல்வி அடைந்தார். திருவையாற்றில் போட்டியிட்ட சிவாஜியும் மோசமான தோல்வியை அடைந்தார்.  தி.மு.க. மகத்தான வெற்றி பெற்றது. ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்குப் பின்  ஆட்சியைப் பிடித்தது.

மனதுக்கு நெருக்கமான தலைவர் இறந்து விட்டார். தலைவனாக மட்டும் அவரை ரசிகர்கள் பார்க்கவில்லை. தங்கள் கடவுளாகத் தான் பார்த்தார்கள். அத்தகைய தலைவன் இறந்த பின் எத்தகைய அனுதாப அலையை உண்டாக்கி இருக்க வேண்டும்…? அனுதாப அலையெல்லாம் உண்டாகத்தான் செய்தது. ஆனால், அந்த பாமர ரசிகன் தன் தலைவன் உண்டாக்கிய கட்சி இரண்டாகப் பிரிந்து தேர்தலைச் சந்திப்பதை ரசிக்கவில்லை.  எல்லோரும் பிரிந்து நின்றதால்,  ஓட்டுகளும் சிதறியது… உதயசூரியன் வென்றது.

சொல்லப்போனால், அப்போது திமுக வெற்றி பெற்றதற்கு, அதிமுக  ‘ஜா’ அணியாகவும், ‘ஜெ’ அணியாகவும் உடைந்திருந்ததும் ஒரு காரணம். ஆம், 12 ஆண்டுகளுக்கு பின் உதயசூரியன் ஆட்சியைப் பிடித்ததற்கு ஜெயலலிதாவும் ஒரு முக்கிய காரணம்.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *