மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 26 | மு. நியாஸ் அகமது


நான் பதவியை, செல்வத்தை விரும்புபவள் அல்ல. பதவியை அடைய நான் திருட்டுத்தனமாக எதுவும் செய்யமாட்டேன். ஆனால், அதே நேரம் என்னை நோக்கி பொறுப்பும், கடமையும் வந்தால், நான் பின்வாங்கமாட்டேன். அதை என் தோள்களில் சுமப்பேன் – இது ஜெயலலிதா 1988-ம் ஆண்டு, ஜனவரி மாதம் சொன்னது. இந்த வார்த்தைகளின்படியே அவர் முதன்முதலாக முதல்வராகப் பொறுப்பேற்றபோது நின்றிருப்பாரானால், நிச்சயம் அவர் பல சங்கடங்களைச் சந்தித்து இருக்கமாட்டார்.  காந்தி சொல்வார், “மனிதர்களில் மிகப் பெரியவர்கள் மிகச் சாதாரணமான நிலையில் தன்னை வைத்துக்கொள்வதன்மூலம் மிகச் சிறந்தவர்களாக நீடிக்கிறார்கள்” என்பார். சத்தியமான வார்த்தைகள்தானே…? ஒருவனிடம் கட்டுக்கடங்காத அதிகாரம் குவிந்துக்கிடக்கும்போது, அதை அவன் எவ்வாறு பயன்படுத்துகிறான் என்பதை வைத்துத்தான் அவன் மதிப்பிடப்படுகிறான். ஜெயலலிதாவின் முதல் ஐந்து ஆண்டுகால ஆட்சியை அவ்வாறாக மதிப்பிட்டால், நிச்சயம் அவர் மிக மோசமான மதிப்பெண்களைத்தான் எடுப்பார்.

ஆம், 1991 தேர்தலில் அ.தி.மு.க அடைந்த இமாலய வெற்றியை தன் வெற்றியாகப் பார்த்தார்… தன் வெற்றியாக மட்டுமே பார்த்தார். இப்போது இது அவரின் வாய்ப்பு… யார் யார் தன்னைக் கிண்டல் செய்தார்கள்… யார் யார் தன்னை அவமானப்படுத்தினார்கள்… யார் யார் தன் இருப்பே இருக்கக் கூடாது என்று விரும்பினார்கள்…? அவர்கள் அனைவரையும் தன்  காலில் விழவைத்தார். தன்னை நிந்தித்தவர்களை, துதி பாடவைத்தார். கொஞ்சம் கொஞ்சமா அ.தி.மு.க-வில் உள்ள  ‘அ’ வை மறக்கும்படி செய்துவிட்டு…

 

ஜெ.தி.மு.க-வாக்கினார். மறக்கமுடியாமல் கஷ்டப்பட்டவர்களைக் கட்சியில் இருந்து நீக்கினார். இது அவர் கட்சியுடன் நின்றிருக்குமாயின், நிச்சயம் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இருந்து இருக்காது. ஆனால், இது எல்லை மீறியது… ஆட்சி அதிகாரத்திலும் தலைகாட்டியது. தமிழக அரசு…  ‘ஜெ’ அரசாக மாறியது. அப்படியானால், அவரது முதல் பதவிக்காலத்தில் நன்மைகள் எதையுமே தமிழகத்துக்குச் செய்யவில்லையா…? செய்தார்… நிச்சயம் செய்தார்.

 

 ‘புகழ்பாடும் சபாவான சட்டமன்றம்!’

 

 

ஜெயலலிதாவை, பெண்கள் அதிகம் விரும்பினார்கள். பொதுவாக நமக்கென்று ஆழ்மனதில் சில விருப்பங்கள் இருக்கும்தானே … அநியாயத்தைத் தட்டிக் கேட்க வேண்டும்… தீயவர்களை அடிக்க வேண்டுமென்று. ஆனால், பயம் நம்மைத் தடுக்கும். நம்மால் செய்யமுடியாததையெல்லாம் திரையில் செய்பவர்களை நாம், நன்நாயகர்களாக விரித்துக்கொள்கிறோம். பெண்களுக்கு அதுபோலத்தான் ஜெயலலிதா இருந்தார். ஆண்வயப்பட்ட சமூகத்தில் இருக்கும் பெண்கள், தங்களது ஆழ்மனது ஆசைகளின் உருவகமாகத்தான் ஜெயலலிதாவைக் கருதினார்கள். பெண்கள்தான், தன் பலம் என்பதை ஜெயலலிதாவும்  உணர்ந்தே இருந்தார். அதனால்தான்  முதல்வரானதும் முதலில் மலிவு விலை மதுவை ஒழிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார். அதனுடன் நிற்கவில்லை,  நிர்வாகரீதியாக பல சீர்திருத்தங்களைச் செய்தார். மாவட்ட எல்லைகளை மாற்றியமைத்து, புதுப்புது மாவட்டங்களை உருவாக்கினார்.

ஜெயலலிதா இவ்வளவு நுட்பமாகச் செயல்படுவார் என்று முதலில் அதிகாரிகள் எதிர்பார்க்கவேயில்லை. “என்ன ராஜ்ய சபா உறுப்பினராக இருந்திருக்கிறார்… அவ்வளவுதானே…? டெல்லி சூழல் வேறு, தமிழகச் சூழல் வேறு… இங்கு இவர் என்ன செய்துவிடப்போகிறார்…?” என்பதாகத்தான் முதலில் அவர்கள் எண்ணம் இருந்தது. ஆனால், அவர்களுக்குத் தங்கள் எண்ணம் எவ்வளவு தவறு என்பது சில தினங்களிலேயே புரிந்தது. ஆம், அவருடைய பார்வை, அவருடைய ஆங்கிலப் புலமை… பிரச்னைகளைக் கையாள்வதில் அவரின் மதிநுட்பம்… இது எல்லாம் அவர்களை வியக்கவைத்தது. பணக்காரச்சூழலில் பிறந்து, கான்வென்ட்டில் படித்ததால் என்னவோ… ஜெயலலிதாவும் எப்போதும் அமைச்சர்களைவிட, அதிகாரிகளுக்குத்தான் அதிக இடம்கொடுத்தார்.

ஜெயலலிதா அரசின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர். அவர், சட்டமன்றத்துக்கு வருவதே விழாபோல மாறியது. அவரை வரவேற்க கோட்டையில் ஏகப்பட்ட ஏற்பாடுகள்… கட்சிக்காரர்கள், எம்.எல்.ஏ-க்கள், அமைச்சர்கள் மட்டும் அல்ல… அப்போது சபாநாயகராக இருந்த சேடப்பட்டி முத்தையாவே ஜெயலலிதாவுக்காக சட்டமன்ற வாசலில் காத்திருந்தார். அவர் வந்ததும்,மிகப் பணிவாக அவரைச் சட்டமன்றத்துக்குள் அழைத்துச் சென்றார். சட்டமன்றம் கொஞ்சம் கொஞ்சமாக ஜெயலலிதா புகழ்பாடும் சபாவாக மாற்றப்பட்டது.  ஒரு நிகழ்வின்போது, ஜெயலலிதா சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததாகவும், சட்டமன்றத்துக்கே தேர்ந்தெடுக்கப்படாத சசிகலா, துணை சபாநாயகர் இருக்கையில் அமர்ந்ததாகவும் சர்ச்சை எழுந்தது.

தமிழக அரசியல் இவ்வாறாகச் சென்று கொண்டிருக்கும்போதுதான், தமிழகத்தையே புரட்டிப்போட்ட அந்த  நிகழ்வு நிகழ்ந்தது.

‘அமங்கலமான தொடக்கம்!’

ஜெயலலிதாவுக்கு அவரின் ஜோதிடர்கள் கணித்துக் கொடுத்து இருந்தார்கள்… “நீங்கள் மகாமக குளத்தில் குளித்தீர்கள் என்றால், உங்களது எதிர்காலம் சுபிட்சமாக இருக்கும்” என்று. பிப்ரவரி 18, 1992. ஜெயலலிதா கும்பகோணம் வருகிறார். அந்த நகரமே அல்லோலப்பட்டது. எப்போதுமே மகாமகம் என்றால், அந்தச் சிறு நகரத்தில் லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். இதில் முதல்வரும் வருகிறார் என்றால் கேட்க வேண்டுமா என்ன…? கட்சிக்காரர்கள், பக்தர்கள், காவலர்கள் என அந்த ஊரே அல்லோலப்பட்டது.

அவருக்காக மேற்குக்கரையில் குண்டு துளைக்காத கண்ணாடியிலான குளியல் அறை தயாராக இருந்தது. அங்கு ஜெயலலிதா அமர, சசிகலா தண்ணீர் ஊற்றிக்கொண்டிருக்க… இன்னொரு பக்கம் கூட்டம் முந்தியடித்துக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் வடக்குக்கரையில் இருந்த தர்மசாலாவின் தடுப்புச் சுவர் உடைந்து விழுந்தது.
சரியாக அந்தச் சமயத்தில் ஜெயலலிதாவும் நீராடிவிட்டுக் கிளம்பினார். அவருடன் பெரும்கூட்டம் கிளம்பவே நெரிசல் மேலும் மேலும் அதிகமாகியது. ஜெயலலிதா ஏதோ அசாம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை கணித்தார். ஆனால், இது இவ்வளவு மோசமாக இருக்கும் என்று அவர் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. ஆம், 48 பக்தர்கள் இறந்து இருந்தார்கள்.

சுபிட்சம் வேண்டித்தான் அவர் மகாமக குளத்துக்கு வந்தார். ஆனால், கெடுவாய்ப்பாக, அதுவே அவருக்கு அமங்கலமான தொடக்கமாக மாறியது.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − eleven =