மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 28 | மு. நியாஸ் அகமது


“அதிகாரம் மக்களைக் கெடுப்பதில்லை… மக்கள்தான் அதிகாரத்தை மாசாக்குகிறார்கள்” என்றார் அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் காடீஸ்.  கட்டுக்கடங்காத அதிகாரம் ஜெயலலிதாவை மாசாக்கியதா… இல்லை, அவர் அதிகாரத்தை மாசாக்கினாரா என்று தெரியவில்லை. ஆனால், ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டுகால ஆட்சியில் ஏகப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.  கருணாநிதி தன் தேர்தல் பிரசாரத்தின்போது, “ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்திருந்தார். இப்போது அவரின் கையில் ஆட்சி, நிர்வாகம்… சொன்ன வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். மற்ற வாக்குறுதிகளாக இருந்தால்கூட பரவாயில்லை… வசதியாக மறந்துவிடலாம். ஆனால், இது தன் அரசியல் எதிரியின் மீதான  ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக அளித்த வாக்குறுதி. இதை எப்படி நிறைவேற்றாமல் இருக்க முடியும்? ஆனால், அதே நேரம் கருணாநிதிக்கு இன்னொரு அச்சமும் இருந்தது.

ஜெயலலிதா மீது எடுக்கப்படும் நடவடிக்கை… அவருக்கு அனுதாப அலையை உண்டாக்கினால்… இந்தக் கைதே மீண்டும் அவர் அரசியலில் முக்கியத்துவம் பெற காரணமாக அமைந்தால்…? ஹூம்.. இந்த விஷயத்தை  கவனமாகக் கையாள வேண்டும்.  டிசம்பர் – 5, 1996-ம் நாள், கருணாநிதி தன் அமைச்சர்களுடன் இதுகுறித்து தீவிரமாக விவாதித்தார். அதில் உள்ள சாதக, பாதகங்களை அமைச்சர்கள் எடுத்துவைத்தனர். ஓர் இளைய அமைச்சர் அந்தக் கூட்டத்தில், “இன்னும் ஏன் ஜெயலலிதா மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்று, மக்கள் எல்லாம் கொதிப்புடன் இருக்கிறார்கள்” என்றார். இந்தக் கூட்டம் நடக்கும் சில தினங்களுக்கு  முன்பு ஜெயலலிதா, உயர் நீதிமன்றத்தை முன்ஜாமீனுக்காக அணுகி இருந்தார். டிசம்பர் 6, மதியம்  நீதிபதி சி.சிவப்பா, அந்த முன்ஜாமீன் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தார்.

 

 ‘அப்பாவின் மகள்!’

 

ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டவுடனே ஜெயலலிதாவுக்குப் புரிந்துவிட்டது… தாம் எந்த நேரத்திலும், கைது செய்யப்படுவோமென்று. அதற்குத் தயாரானார். பின்னாளில் ஜெயலலிதா ஒரு பேட்டியில் கூறினார், “என் அப்பா மட்டும், தாத்தா சேர்த்துவைத்திருந்த செல்வத்தைச் சரியாக நிர்வகித்திருந்தால்… நிச்சயம் என் வாழ்வில் பல துயரங்களை அனுபவித்திருக்க மாட்டேன்”.  கைதுக்காகக் காத்திருந்த அன்றும், இவர் அவ்வாறாகத்தான் யோசித்தார். ஆனால், அவர் அப்பா செய்த அதே தவற்றைத்தான் அவரும் செய்தார் என்பதை நினைத்தாரா என்று தெரியவில்லை. ஆம், ஜெயராமிடம் அவர் அப்பா சேர்த்துவைத்திருந்த செல்வங்கள் குவிந்திருந்தன… ஆனால், அதைச் சரியாக நிர்வகிக்காமல், ராஜாவீட்டு கன்றுகுட்டியாக, விட்டோத்தியாக இருந்து அனைத்தையும் இழந்தார். இப்போது அதே தவற்றைத்தான் ஜெயலலிதாவும் செய்திருக்கிறார். அதிகாரத்தைச் சரியாக பயன்படுத்தவில்லை; ஆடம்பரமாக வாழ்ந்தார். இந்த விஷயத்தில்… ஜெயலலிதா ‘அப்பாவின் மகள்’தான்.

டிசம்பர் 7, அரக்கு வண்ணப்புடவை அணிந்திருந்தார். சிறிது நேரம், பூஜை அறையில்  செலவிட்டார். பின் சிறைவாசத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துவைத்துவிட்டு, வீட்டு பால்கனிக்குச் சென்று, அவருடைய வாசலில் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தார். அப்போது புன்னகைக்கச் சிரமப்பட்டுத்தான் போனார்.

அதே சமயம், காவலர்கள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தார்கள்.  “நாளை நமதே” என்று தொண்டர்களைப் பார்த்துச் சொன்னபடியே ஜெயலலிதா போலீஸ் ஜீப்பில் ஏறினார்.  அவர் முதன்மை அமர்வு நீதிபதி அ.ராமமூர்த்தி வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து சென்னை மத்திய சிறைக்கு. சிறையில் அவருடைய எண் 2529.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைதுசெய்யப்படுவதற்கு முன்பே,  தமிழகமெங்கும் 2,500 அ.தி.மு.க நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டனர்.  அப்போதும் அங்கொன்றும், இங்கொன்றுமாக சிறு அசாம்பாவிதங்கள் நடக்கத்தான் செய்தன. பேருந்துகள் கொளுத்தப்பட்டன. ஓட்டுமொத்தமாகப் பார்த்தால், தமிழகம் தழுவிய பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லை. அந்த அளவில் கருணாநிதிக்கு முதல் வெற்றி. அரசியல் எதிரியை பெரிய எதிர்ப்பு எதுவும் இல்லாமல் கைதுசெய்தாகிவிட்டது…  அடுத்து எந்த அனுதாப அலையும் ஏற்பட்டுவிடாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். என்ன செய்யலாம்…? அவர் கைதுசெய்யப்பட்ட சில தினங்களில், போலீஸ் போயஸ் கார்டனுக்கு சோதனை செய்வதற்காகச் சென்றது.  ஏராளமான பொருட்களை அங்கிருந்து கைப்பற்றியது.  300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டதாக ’இந்தியா டுடே’ இதழ் செய்தி வெளியிட்டது.

இந்தப் பொருட்கள் மீண்டும் மீண்டும் தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டன…. மக்கள் வாயடைத்துத்தான் போனார்கள்… கருணாநிதி வெற்றிகரமாக ஜெயலலிதாவுக்கு எதிராக ஒரு கருத்தை உருவாக்கினார். இத்துடன் ஜெயலலிதாவின் அரசியல் சகாப்தம் முடிந்தது என்று நினைத்தார். அவர் மட்டும் அல்ல… அனைத்து அரசியல் கட்சிகளும். ஏன்… அ.தி.மு.க-விலே பலர் அவ்வாறாகத்தான் நினைத்தார்கள். அ.தி.மு.க கட்சியே முடங்கிப்போனது… அந்தச் சமயத்தில் சோ மட்டும்தான் சரியாகக் கணித்தார்… “இல்லை… ஜெயலலிதாவின் அரசியல் இதனுடன் முடியவில்லை” என்று. ஆம், இறுதியில் அதுதான் சரியாக இருந்தது.

‘இனி சசிகலாவுடன் எந்த உறவுமில்லை!’

28 நாட்கள் சிறை வாழ்க்கை முடிந்து ஜெயலலிதா வெளியே வந்தார். அப்போது, அவர் சிந்தனையில் ஒன்றே ஒன்றுதான் இருந்தது. “யாரை எதிர்த்து எம்.ஜி.ஆர் புது கட்சியைத் தோற்றுவித்தாரோ… அவரிடம் ஜெயலலிதா தோற்று, அ.தி.மு.க-வை இல்லாமல் செய்துவிட்டார்” என்று வரலாறு பதிவு செய்துவிடக் கூடாது. ஆம்… மீண்டும் எழ வேண்டும்… கட்சியைத் தூக்கி நிறுத்த வேண்டும். ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, அ.தி.மு.க சுணங்கி இருந்தது… ஜெயலலிதாவுக்கு புது தெம்பை தந்தது. என்ன முரணாக இருக்கிறதா…? ஆனால், அதுதான் உண்மை. ஜெயலலிதா இல்லாமல் கட்சி இயங்காது என்ற தோற்றம் பொதுவெளியில் ஏற்பட்டது. மக்களிடம் மட்டும் அல்ல… கட்சியிலும்தான். இதன்பின்தான் ஜெயலலிதா கட்சியில் அசைக்கமுடியாத மனிதர் ஆனார்.

தினம் தினம் கட்சி அலுவலகத்துக்குச் சென்றார். மாற்றுக்கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். குண்டுமணி அளவு தங்கத்தைக்கூட அணிவதைத் தவிர்த்தார். முத்தாய்ப்பாக இனி எனக்கும், சசிகலாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை… என்று அறிவித்துவிட்டு, சசிகலாவின் மன்னார்குடி உறவுகளை போயஸ் கார்டனிலிருந்து வெளியே அனுப்பினார்.  கொஞ்சம் கொஞ்சமாக இழந்த செல்வாக்கை மீட்டுக்கொண்டிருந்தார்.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + fifteen =