மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 32 | மு. நியாஸ் அகமது


“காலத்துக்கு ஏற்றவாறு என்னை வடிவமைத்துக் கொண்டிருக்கிறேன். நான் முதிர்ச்சி அடைந்திருக்கிறேன். என் வாழ்க்கையில், பல இன்னல்களை சந்தித்து இருக்கிறேன்; அதனைக் கடந்து வந்திருக்கிறேன். யோசித்துப்பார்த்தால், அந்தப் பிரச்னைகள்தான் என் ஆளுமையை வடிவமைத்து இருக்கிறது.” –  இது நம்பிக்கை வாக்கெடுப்பில் வாஜ்பாய் அரசு தோல்வியுற்ற சமயத்தில், ஜெயலலிதா ஒரு ஆங்கில இணைய இதழுக்கு கொடுத்த நேர்காணல். இதன் ஒரு பகுதி நிச்சயம் உண்மைதான். சந்தோஷ தருணங்களால் மட்டுமே ஒரு மனிதனின் ஆளுமை வடிவமைக்கப்படுவதில்லைதானே? ஒரு மனிதன் தான் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகம், புரிந்துகொண்ட அரசியல்… இதைத்தானே தன் மொழியில் வெளிப்படுத்துகிறான். ஜெயலலிதாவும் அப்படித்தான்… தான் சந்தித்த துரோகங்களை, அவமானங்களை தன் மொழியில் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவின் செயல்களை விமர்சிக்கலாம். ஆனால், உண்மையாக அவரைப் புரிந்துகொள்ள விரும்பினால், அவரது செயல்களை ஆய்வுக்கு உட்படுத்துவது மட்டும் போதாது. அவரது வாழ்க்கை அனுபவத்தையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இது ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல… எல்லா மனிதர்களுக்கும்  பொருந்தும்.

சரி, நாம் விஷயத்துக்கு வருவோம்.   தமிழக சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கட்சியைக் கைப்பற்றியது… 10-வது சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்றது… மத்தியில் சில காலம் சர்வ அதிகாரத்துடன் இருந்தது… இப்போது 10  எம்.பி-க்களை வைத்திருப்பது என எதுவும் முக்கியம் அல்ல. இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ‘இப்போது விழுந்தால், பின் எப்போதும் எழவே முடியாது’ என்பதை நன்கு உணர்ந்திருந்தார் ஜெயலலிதா. ‘கட்சி உயிர்பெற வெற்றி வேண்டும். நான் இன்னும் வலிமையுடன் தான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்க வெற்றி வேண்டும்’ என்று யோசித்த ஜெயலலிதா அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்தார். கூட்டணி அமைத்தார். காங்கிரஸ், தமிழ் மாநிலக் காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள்… என மாபெரும் கூட்டணி அது.  கருணாநிதி கூட்டணியில் அப்போது பா.ஜ.க-வைத் தவிர இருந்தவை எல்லாம் சிறு கட்சிகள். பெரும்பாலான மக்களுக்கு பெரிதாக அறிமுகமாகாத கட்சிகள்.  கூட்டணி எல்லாம் ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்துவிட்டதுதான்… ஆனால், டான்சி வழக்கின் தீர்ப்பு இருக்கிறதே? ‘இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற ஒருவர் தேர்தலில் நிற்க முடியாது’ என்கிறது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்.  டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு மூன்று ஆண்டுகள் தண்டனை. இதன் காரணமாக அவர் போட்டியிட முடியுமா, முடியாதா? என்ற சந்தேகம் நிலவியது. சூழ்நிலை இப்படியாக இருக்க… ஆண்டிபட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி என நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் ஜெயலலிதா.  ஆனால், தேர்தல் அதிகாரிகள் ஒவ்வொரு வேட்புமனுவாக நிராகரித்தனர்.

“நான் உங்களிடம் பிச்சை  கேட்கிறேன்”

 

ஜெயலலிதா இதுகுறித்து கவலைப்பட்டாரா இல்லையா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால், வெற்றிகரமாக இதையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஊர் ஊராக சென்றார். மக்களை சந்தித்தார்.  அவர் தன் கட்சியின் கொள்கைகள் குறித்துப் பேசவில்லை. தான் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன செய்வோம் என்பது குறித்துப் பேசவில்லை… தமிழகத்தில், தற்போது நிலவும் பிரச்னைகள் குறித்தும் பேசவில்லை… தன்னைப் பற்றி மட்டும் தான் பேசினார். முழுக்க முழுக்க தன்னை மட்டுமே பிரதானப்படுத்தினார். கருணாநிதி தன்னை அழிக்கத் திட்டமிடுகிறார் என்றார். தன் மீது போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் புனையப்பட்ட வழக்குகள் என்றார். அரசியல் சூழ்ச்சியால் தன் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றார். தனக்கு அநீதி இழைக்கப்படுகிறது; நியாயம் வேண்டும் என்றார். முத்தாய்ப்பாக அவர், “மற்ற தீர்ப்புகள் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப்போகட்டும். எனக்கு உங்கள் தீர்ப்புதான் முக்கியம். நீங்கள் சரியான தீர்ப்பை வழங்குவீர்களா? நான் உங்களிடம் பிச்சை கேட்கிறேன். நீங்கள் சரியான தீர்ப்பை வழங்குவீர்களா.?” என்றார். கூட்டம் சில நொடிகள் நிசப்தம் ஆனது. பின் கண்ணீருடன் கரகோஷம் எழுப்பியது.

சொல்லப்போனால்… அப்போது கருணாநிதி ஆட்சியில், பெரிய அதிருப்தி எல்லாம் இல்லை. பெரிதாக எந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலும் சிக்கவும் இல்லை. ஆனால், இது எதுவும் கருணாநிதிக்கு கை கொடுக்கவில்லை.  ஆம், ஜெயலலிதா அமைத்த பெருங்கூட்டணி மற்றும் ஜெயலலிதாவின் பிரசாரம் முன் ஈடுகொடுக்க முடியாமல் திணறிய  தி.மு.க., இறுதியில் படுதோல்வி அடைந்தது. அ.தி.மு.க மட்டும் 132 இடங்களைக் கைப்பற்றியது. தி.மு.க கூட்டணி மொத்தமாகக் கைப்பற்றிய இடங்கள் 37. இது உண்மையில், ஜெயலலிதாவே எதிர்பாராத வெற்றி தான்.

 

வழக்கம் போல் அ.தி.மு.க கூட்டணியின் வெற்றியை, ஜெயலலிதா தன் வெற்றியாக மட்டுமே பார்த்தார். தான் அரசாள மக்கள் விரும்புகிறார்கள். அதனால்தான் இத்தகைய அமோக வெற்றியை மக்கள் பரிசளித்திருக்கிறார்கள் என்று நம்பினார். அப்போது ஆளுநராக இருந்த ஃபாத்திமா பீவி, ஜெயலலிதாவை அரசமைக்க அழைத்தார். இது அந்த சமயத்தில், சர்ச்சையைக் கிளப்பியது. ‘சட்டமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரை, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற ஒருவரை எப்படி ஆட்சி அமைக்க அழைக்கலாம்?’ என்ற எதிர்ப்புக் குரல் எழுந்தது. ஃபாத்திமா பீவி இதனையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. யாரை வேண்டுமானாலும் அரசமைக்க அழைக்கும் அதிகாரத்தை அரசியலமைப்புச் சட்டம் அங்கம் 164 ஆளுநருக்கு வழங்கி இருக்கிறது. அவர் ஜெயலலிதாவை அழைத்தார்… ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார்!

 

‘பழிவாங்கும் படலம்’

இது ஜெயலலிதாவின் முறை. இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தார். தேர்தல் பிரசாரத்தின்போதே, தன்னை முதன்மைப்படுத்தியவருக்கு… ஆட்சி, அதிகாரங்கள் கிடைத்ததும் வேறு ஏதாவது முதன்மையாக இருக்குமா என்ன? ஆட்சி பொறுப்பேற்ற ஒரு மாத காலத்துக்குள் தன் ஆட்டத்தைத் தொடங்கினார்.  ஜூன் 30, 2001 நள்ளிரவு கருணாநிதியை மேம்பால ஊழல் வழக்கில் கைது செய்ய காவல் துறையினர்  அவர் இல்லத்துக்கு வந்தனர். அப்போது மணி நள்ளிரவைத் தாண்டிவிட்டது. கருணாநிதி தகவல் அறிந்ததும் முரசொலி மாறனுக்கு தொலைபேசியில் பேசினார்.  சில நிமிடங்களில் மாறன், கருணாநிதி வீட்டுக்கு வந்தார்; கூடவே தொலைக்காட்சி நிருபர்களும். கருணாநிதி மிக மோசமான முறையில் கைது செய்யப்பட்டார்.

“78 வயதான மூத்த அரசியல்வாதியை  ஆடை மாற்றக்கூட அனுமதிக்கவில்லை. வயதானவர் என்று கூட பார்க்காமல், மிகவும் மோசமான முறையில் காவல் துறை அவரைக் கையாண்டது” என்று அடுத்த நாள் அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டது. குறிப்பாக “அய்யோ…என்னைக் கொலை செய்யுறாங்க… கொலை செய்யுறாங்க…” என கருணாநிதி கதறும் காட்சி தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்பட்டது.

இந்தக் கைது நடவடிக்கையை அப்போது அ.தி.மு.க கூட்டணியில் இருந்த கட்சிகளே ரசிக்கவில்லை. தேர்தலுக்குப் பின், அதிகரித்துப்போன ஜெயலலிதாவின் எதேச்சதிகாரம், கூட்டணித் தலைவர்களை மதிக்காத போக்கினால் அதிருப்தியில் இருந்தனர் அவர்கள். எனவே, அவர்களும் இந்தக் கைது நடவடிக்கையைக்  கண்டித்தனர்.

ஜெயலலிதா இதுகுறித்தெல்லாம் அணு அளவும் கவலை கொள்ளவில்லை. தமிழகமே அல்லோலப்பட்டுக் கொண்டிருக்க… ஜூலை 7-ம் தேதி, சசிகலாவுடன் குருவாயூர் பயணமானார். அங்கு ஏறத்தாழ 40 நிமிடங்கள் கலங்கிய கண்களுடன் குருவாயூரப்பனைத் தரிசித்துவிட்டு ஹெலிகாப்டரில் சென்னை திரும்பினார்.

நாட்கள் நகர்ந்தன… ஆனால், கருணாநிதி கைது அல்லது அவரை கைது செய்த விதம் ஏற்படுத்திய அதிர்வலை சில நாட்களுக்கு அப்படியேதான் இருந்தன. இது மட்டும்தான் தமிழகத்தின் பேசு பொருளாக இருந்தது. ஆனால், இது குறித்தெல்லாம் ஜெயலலிதா கவலை கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு பின் அவர் அளித்தப் பேட்டி ஒன்றில், கருணாநிதி கைது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,  அவர் இவ்வாறாகப் பதில் அளித்தார், “ஊழல் செய்தவருக்கு வயது வித்தியாசம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஊழல் செய்திருக்கிறார். குற்றவாளியாகத்தான் பார்க்கவேண்டும்.” என்று கோபமாகவே அந்தக் கேள்வியைக் கடந்துச் சென்றார்.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-28-11-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-29-11-14-17/

http://www.vanakkamlondon.com/httpwww-vanakkamlondon-comfrom-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-30-11-29-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-31-12-08-17/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + seventeen =