மைசூரு முதல் – 81 போயஸ் கார்டன் வரை… ஜெயலலிதா டைரி குறிப்புகள்! – அத்தியாயம் 34 | மு. நியாஸ் அகமது


“நீங்கள் தூங்கவே செய்யாதபோது எப்படி ஒரு கொடுங்கனவிலிருந்து எழ முடியும்…?”என்றொரு வசனம் 2004 வெளிவந்த தி மெஷினிஸ்ட் (The Machinist) படத்தில் வரும்.  இந்த வசனத்தை நாம் இப்படியும் பொருள் கொள்ளலாம்.  “நாம் ஒரு படுதோல்வியைச் சந்திக்காதபோது… எப்படி ஒரு புதுப் பாடம் கற்கமுடியும்…?” இந்தப் படம் வெளிவந்த அதே ஆண்டில்தான் ஜெயலலிதா ஒரு படுமோசமான தோல்வியைக் கண்டார் என்பது தற்செயலானது. ஆம், 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா சந்தித்த மோசமான தோல்வி, அவருக்குப் பல விஷயங்களை உணர்த்தியது. அதில் பிரதானமானது, நாம் மக்கள் விருப்பத்துக்கு எதிர்திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது. தப்பாருக்கு அளித்த பேட்டியில், “நாங்கள் பெரும்பாலான கட்சிகளுடன் கூட்டணி வைக்கவில்லை. அதுதான் எங்கள் தோல்விக்குக் காரணம்” என்று அவர் கூறியிருந்தாலும், அவர் மனதுக்கு நன்கு தெரிந்தது, நம் தோல்விக்கு காரணம் மக்கள் விருப்பங்களை ஈடுசெய்யாமல், அதற்கு முரணாக நடந்துக் கொண்டதுதான் காரணம் என்பது. உடனே விழித்தெழுந்தார். இதே திசையில் பயணித்தால், முட்டுச்சந்தில்தான் சிக்கிக் கொள்ள வேண்டும் என்பதை உணர்ந்தார். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சட்டமன்றத் தேர்தல் வருகிறது. அதற்கு முன்னதாக எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும். போன பாதை தவறு என்று மக்கள் உணர்த்திவிட்டார்கள். இன்னும் இரண்டு ஆண்டு காலம் இருக்கிறது அல்லவா என்று பாதையை மாற்றினார். அதே சமயம், நாடாளுமன்ற தேர்தல் தீர்ப்புக் குறித்து கருணாநிதி,  “இது மக்கள் விரோத ஆட்சிக்கு, மக்களால் கொடுக்கப்பட்ட தண்டனை” என்று பிரசாரத்தை முடுக்கிவிட்டுகொண்டிருந்தார்.

“வீழ்ச்சி… மீட்சி… எழுச்சி”

தேர்தல் முடிவுகள் வந்த சில வாரங்களில், ஜெயலலிதா டெல்லிக்குப் பயணமானார். பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து, பதினேழு கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். அதுமட்டுமல்ல, பி.ஜே.பி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி குறித்த கேள்விக்கு, “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கம் அல்ல. அவர்கள்தான் எங்களுடன் கூட்டணி வைத்திருந்தார்கள்”என்று பி.ஜே.பி-யில் இருந்து நான் தள்ளிதான் நிற்கிறேன் என்பதைக் குறிப்பால் உணர்த்தினார்.

அவருக்கு அந்த சமயத்தில் இன்னொரு கவலையும் இருந்தது. கருணாநிதி மீண்டும் 2006-ம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்து, தனக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தால் என்ன செய்வது? என்று நினைத்த அவர் தன் பிம்பத்தை மாற்றி அமைக்க, மக்கள் நல அரசு தான் இது என்பதை நிரூபிக்க அனைத்து நடவடிக்கைகளையும் முடுக்கிவிட்டார். தமிழகத்தில் தான் அமல்படுத்திய கட்டாய மதமாற்ற தடைச்சட்டம், கோயில்களில் ஆடு, கோழி பலியிடத் தடைச்சட்டம் என மக்கள் விரும்பாத அனைத்துச் சட்டங்களையும் திரும்பப் பெற்றார். கொஞ்சம் கொஞ்சமாக இழந்த செல்வாக்கை மீட்டுக் கொண்டிருந்தார். இது குறித்துக் கேள்விகேட்ட ஊடகங்களுக்கு அவர், “இதற்குமுன் எனது ஒரு பக்கத்தைப் பார்த்தீர்கள். இப்போது இன்னொரு பக்கத்தைப் பார்க்கிறீர்கள். எதிர்காலத்தில் வேறுபட்ட பக்கங்களைப் பார்ப்பீர்கள்” என்றார். உண்மை தான். தன்னுடைய அனைத்துப் பரிமாணங்களையும் காட்ட, திட்டங்களை செயல்படுத்தத் தொடங்கினார். இந்தத் தோல்விகளுக்கு முன் அவர் மழைநீர் சேகரிப்பு திட்டத்தை அமல்படுத்தினார். அப்போது மக்கள் முணுமுணுப்புடன்தான் அந்தக் கட்டமைப்பை வீட்டில் உண்டாக்கி இருந்தனர். இப்போது, அந்தத் திட்டம் பயன் தரத் தொடங்கி இருக்கிறது. இது அவருக்கு ஒரு நல்ல பெயரை வாங்கித் தந்தது. அடுத்து அவர் அனைத்து மதுபானைக்கடைகளையும் அரசே எடுத்து நடத்தும் என்று அறிவிப்பை வெளியிட்டார். “என்னது அரசு மதுக்கடை நடத்துவதா?” என்று எதிர்ப்புக் குரல் எழுந்தாலும் அந்த சமயத்தில் இது நல்ல நகர்வாகத்தான் பார்க்கப்பட்டது. இதிலிருந்து வரும் வருமானம் மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும், டாஸ்மாக் மூலம் வேலை வாய்ப்பு உண்டாகும் என்று அறிவித்தார்.  அடுத்து வரவே வராது என்று கருதப்பட்ட வீராணம் கூட்டுக் குடிநீர் திட்டத்தைச் செயல்படுத்தி, வீராணத்திலிருந்து தண்ணீரை சென்னைக்கு கொண்டு வந்து, சென்னைவாசிகளின் தாகம் தணித்தார். இது சென்னை மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயரை வாங்கித் தந்தது.

மக்கள் அவரது மாற்றத்தைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்க  அக்டோபர் 18, 2004-ம் ஆண்டு வந்த ஒரு செய்தி, மொத்த இந்தியாவையும் அவரை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்தது.   செவ்வாய்கிழமை (அக்டோபர் 19, 2004), அயர்ச்சியுடன் சோம்பல் முறித்து தொலைக்காட்சிப் பொத்தானை அழுத்தியவர்கள்… அதில் ஓடிய செய்தியைப் பார்த்துத் திகைத்து நின்றார்கள். இது உண்மைதானா என்று தன்னைத் தானே கிள்ளிப்பார்த்துக் கொண்டார்கள். “வீரப்பனும் அவனது கூட்டளிகளும் தருமபுரி பாப்பாரப்பட்டி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்” என்பதுதான் அந்தச் செய்தி. ஒரே நாளில் ஒட்டுமொத்த இந்தியாவின் பேசு பொருளானது இந்தச் செய்தி. உலக ஊடகங்கள் எல்லாம் தருமபுரியில் திரண்டன. 17,000 கி.மீ சதுர கிலோமீட்டர் பரப்பை ஆட்சி செய்த வீரப்பன். சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய வீரப்பன், யானைகளைக் கொன்று, அதன் தந்தத்தைக் கடத்திய வீரப்பன் இனி இல்லை. அவர் என் தலைமையிலான ஆட்சியின்போது கொல்லப்பட்டார் என்ற ஜெயலலிதா, வீரப்பன் தேடுதல் வேட்டையில் இருந்த அனைத்து காவலர்களுக்கும் பதவி உயர்வு, வீட்டுமனை என எண்ணற்ற பரிசுகளை வழங்கினார்.

எந்த ரஜினி, “இனி ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்றாரோ இப்போது, அவரே தையரியலட்சுமி ஜெயலலிதா என்று போற்றிப் புகழ்ந்தார்.

 

இப்படியாக நாட்கள் நகர்ந்துக் கொண்ருக்க அடுத்து அவர் எடுத்த நடவடிக்கையைக் கண்டு தி.மு.க-வே விக்கித்து நின்றது. இது கருணாநிதியே எதிர்பார்க்காத ஒன்று. ஆம், நவம்பர் 11, 2004 ஊரே உற்சாகமாக தீபாவளிக் கொண்டாடிக் கொண்டிருக்க, சங்கரராமன் கொலைவழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் சங்கர மடத்துக்குள் போலீஸ் நுழைந்தது. இன்னொரு போலீஸ் டீம், ஆந்திராவுக்கு பறந்து  அங்கு முகாமிட்டிருந்த சங்கராச்சாரியரை கைது செய்தது.  மீண்டும் இந்தியாவின்  பேசு பொருளானார் ஜெயலலிதா. சங்கரமடத்துடன் நல்ல நட்பில் இருந்த ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையை அனைவரும் அதிர்ச்சியுடனும், ஆச்சர்யத்துடனுடம்தான் பார்த்தார்கள். ஒருபக்கம் தி.மு.க தலைவர் கருணாநிதியே பாராட்டி அறிக்கை கொடுக்க, இன்னொரு பக்கம் அத்வானி, சிங்கால், சங் பரிவாரங்கள் எல்லாம் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜெயலலிதாவை எதிர்த்து டெல்லியில் போராடிக் கொண்டிருந்தார்கள்.
கைது பரப்பரப்பு ஓய்ந்து சில தினங்கள் கடந்திருக்கும் புத்தாண்டை எதிர்நோக்கிக் காத்திருந்த சமயத்தில்தான் ஒரு பெருந்துயர் தமிழகத்தைத் தழுவியது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முடிந்து மக்கள் வேளாங்கன்னியிலிருந்து மக்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்க, அதே நேரத்தில் சென்னையில் அந்த ஞாயிற்றுக்கிழமை பொழுதில் பலர் உற்சாகமாக நடைப்பயிற்சி செய்துக் கொண்டிருக்க  கடலூரில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தங்கள் படகுகளைத் தயார் செய்துக் கொண்ருக்க  ஒரு பெரும் கடல் அலை அனைவரையும் வாரி இழுத்துச் சென்றது. அதுவரை யாரும் அதன் பேரழிவின் பெயரை அறிந்திருக்கவில்லை.  பின்புதான் எல்லாரும் அறிந்தார்கள். அதற்கு  ‘சுனாமி’ என்று பெயரென்று. ஒரு பெருந்துயர்  கண் இமைக்கும் நேரத்தில்  நிகழ்ந்துவிட்டது. ஆயிரக்கணக்கில் கொத்து கொத்தாக மனிதர்கள் மாண்டு கிடந்தார்கள்.

தமிழக அரசு உடனே விழித்து எழுந்தது. அனைத்து அரசு பணியாளர்களையும் முடுக்கிவிட்டது. ஊழியர்கள் அர்பணிப்புடன் பணியாற்றினார்கள். அரசு இயந்திரம் வழக்கமான நத்தை வேகத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு சுழன்று சுழன்று வேலைபார்த்தது. மீட்பு நடவடிக்கையும், புனர்வாழ்வில் அரசு எடுத்துக் கொண்ட சிரத்தையும் ஜெயலலிதாவுக்கு நல்ல பெயரை எடுத்துத் தந்தது.

“அக்னிப்பரீட்சையிலும் வெற்றி”

ஒரு பெருந்தோல்விக்குப்பின் தையரியமான, மக்களுக்குப் பயன் தரும் நடவடிக்கைகளை எடுத்திருந்தார். சுனாமி மீட்பு நடவடிக்கையிலும் நல்ல பெயர் எடுத்திருந்தார். இந்த  சமயத்தில்தான் காஞ்சிபுரம், கும்மிடிபூண்டியில் இடைத்தேர்தல் வந்தது.  சங்கராச்சாரியார் கைதை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள், மக்கள் இந்த அரசை எப்படி எடைப்போடுகிறார்கள் என்று இந்தத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்துவிடும் என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. அதுமட்டுமல்ல இந்த இடைதேர்தலில் தோல்வியுற்றால், நிச்சயம் அடுத்த ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தல் தோல்வி நிச்சயக்கப்பட்ட ஒன்றாகிவிடும் என்பதால், அனைத்து அமைச்சர்களையும் முடுக்கிவிட்டார்.  அனைத்து அமைச்சர்களும் காஞ்சிபுரம் வீதிகளில் சுற்றி வாக்குச் சேகரித்தனர். அ.தி.மு.க ஒற்றை கட்சியாக  தேர்தலை எதிர்கொண்டு நிற்க, எதிர்த்து தி.மு.க தலைமையில் காங்கிரஸ், பா.ம.க, ம.தி.மு.க, சி.பி.ஐ, சி.பி.எம் என பலமான  கூட்டணி அமைந்தது.   இந்தக் கூட்டணியை எதிர்த்து ஜெயலலிதா வென்றார். அதுவும் காஞ்சிபுரத்தில் 17,648 வாக்கு வித்தியாசத்திலும், கும்மிடிபூண்டியில் 27,000 சொச்சம் வாக்கு வித்தியாசத்திலும். ஆம்… அக்னிபரீட்சையில் வென்றார்.

ஒரு வீழ்ச்சியைக் கண்டு, அதிலிருந்து மீட்சி பெற்று எழுச்சியடைந்து அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கான காய்களை நகர்த்திக் கொண்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனக்கு இருந்த மோசமான பிம்பத்தை சரி செய்திருந்தார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கியது. பல கூட்டணிக் குழப்பங்களும் அரங்கேறின.

 

தொடரும்…

 

நன்றி : ஆனந்த விகடன்

 

முன்னைய பகுதிகள் :

 

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-1-11-12-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-2-11-19-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-3-11-26-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-4-12-03-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-5-12-10-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-6-12-17-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-7-12-24-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-8-01-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81-poes-garden-travel-story-of-jayalalithaa-part-9-01-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-10-01-28-16/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-11-02-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-12-02-11-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-13-02-23-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-14-03-03-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-15-03-18-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-16-04-02-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-17-04-25-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-18-05-28-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-19-07-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-20-08-10-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-21-08-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-01-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-22-09-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-23-09-21-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-25-09-30-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-27-10-17-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-28-11-04-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-29-11-14-17/

http://www.vanakkamlondon.com/httpwww-vanakkamlondon-comfrom-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-30-11-29-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-31-12-08-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-32-12-19-17/

http://www.vanakkamlondon.com/from-mysuru-to-81poes-garden-travel-story-of-jayalalithaa-part-33-01-04-18/Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *