அறிவும் அறியாமையும் அகந்தையில் இருந்து எழுகிறது – தொடர்சொற்பொழிவு


பேராசிரியர் டாக்டர். பிரணதார்த்திஹரன்  கடந்த 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆர்.எஸ்.புரம் சிந்து சதன் ஹாலில் ரமண மகரிஷி அருளிய உள்ளது நாற்பது குறித்து உரையாற்றினார். அவர் பேசியதாவது..,
ரமண பகவான் தான் அருளிய நூல்களில் எல்லா வாக்கியங்களையும் தமிழ் சொற்களையே பயன்படுத்தியுள்ளார். அருமையான தமிழ்ச் சொற்களை எல்லா இடங்களிலும் பயன்படுத்தினார். ஞானம் என்றால், அறிவு என்ற சொல்லை பயன்படுத்தியிருக்கின்றார். அறிவு என்று வந்தாலே அறியாமை தானே வந்துவிடும். அறியாமை இருந்தால், அறிவு தானே  வந்துவிடும். அவற்றை இரட்டைகள் என்கிறார். இந்த இரண்டும் சேர்ந்தே அனைவருக்கும் வரும். அறிவு என்று நாம் சொல்வது எல்லாமே உலகியல் அறிவையே. இது அறியாமை கலப்புடையது என்கிறார் ரமணா மகரிஷி.
உதாரணமாக சில வருடங்களுக்கு முன் தக்காளி சாப்பிட்டால் கிட்னியில் கல் வரும் என்றது ஆராய்ச்சி. பின் தக்காளி உடலுக்கு நல்லது, ரத்தக் கொதிப்பை குறைக்கும் என்கிறார்கள். இனி தக்காளியின் தோலினால் புற்று நோய்க்கு மருந்து தயாரிக்கும் ஆராய்ச்சிகளும் வரலாம். ஆகவே உலகியல் அறிவில் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும். அறிவும் அறியாமையும் அகந்தையில் இருந்து வருகின்றது .
 
அகந்தை வரும் பொழுது எனக்குத் தெரியும், தெரியாது என்று மாறி மாறி நம்மில் எழுகின்றது. ஞானிகள் பேச்சில் இது இருக்காது என்கிறார் பகவான். ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனமும் கோவை பகவான் ரமணா சத்சங் இணைந்து வழங்குகின்ற இந்த தொடர் சொற்பொழிவில் டாக்டர் மேலும் உரையாற்றுகையில்,
ஒருநாள் திருவண்ணாமலை கோயிலுக்கு சூரியன் உச்சியில் இருக்கும் வேளையில் ரமண மகரிஷி சென்றார். நேரே சென்று சிவலிங்கத்தை கட்டிக் கொண்டு அய்யனே வந்து விட்டேன் என்றார். அன்று வணங்கிவிட்டு வெளியே வந்தவர் அதன் பிறகு கோயிலுக்கு உள்ளேயே அவர் செல்லவில்லை. ஏனென்றால், அவர் கடவுளை உணர்ந்துவிட்டார். திரும்பப் போக வேண்டிய அவசியமில்லை என்கிறார் ரமண பகவான்.
மனத்தின் வேலை என்பது எது சரி, தவறு என்று எப்போதுமே ஆலோசித்துக் கொண்டிருப்பதே. சாதாரண மனிதர்களுக்கு எண்ணங்கள் எழுந்து நினைவிலேயே தங்கிவிடும். இதனால் அகந்தை எழும், ஞானிகள் எண்ணங்களை நினைவிலேயே வைத்து புழுங்குவதில்லை. ஆகவே அவர்களுக்கு அகந்தை எழுவதே இல்லை. உணர்வு தான் நம்முடைய இயல்பு. உணர்வாகவே இருங்கள். எண்ணங்கள் தேவை ஏற்படும் போது வரும், பிறகு சென்றுவிடும். எண்ணங்கள் நம்மிடையே தங்குமானால் கசப்பே ஏற்படும் என்கிறார் ரமணா மகரிஷி என்று உரையாற்றினார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *