கொழும்பு அரசியலில் பரபரப்பு: கோட்டாவின் ஜனாதிபதிக் கனவுக்கு ஆப்பு?


அமெரிக்கக் குடியுரிமையை இழந்த அல்லது துறந்தவர்கள் பற்றிய அமெரிக்க அரசின் பிந்திய அறிவிப்பிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்சவின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தான் இப்போது அமெரிக்கக் குடிமகன் இல்லை என்று கோட்டாபய ராஜபக்ச பகிரங்கமாகக் கூறி வந்தாலும், அதை இதுவரை உத்தியோகபூர்வமாக அமெரிக்க ஆவணங்கள் உறுதிசெய்யவில்லை.

குடியுரிமையைக் கைவிட்டதாகக் கோட்டாபயவும், அவரின் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியினரும் கூறி வந்தாலும், 2019இன் முதல் காலாண்டில் அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிட்டவர்கள் பட்டியலிலும் கோட்டாபயவின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை. இவ்வருடம் மார்ச் மாதம் வரையான காலப்பகுதியில் கோட்டாபய குடியுரிமையைக் கைவிட்டிருக்கவில்லை என்பதை அமெரிக்க ஆவணங்கள் உறுதி செய்திருந்தன.

17.04.2019 அன்று அமெரிக்கக் குடியுரிமையைக் கைவிடுவதற்கான ஆவணங்களை கோட்டாபய கையளித்தார் எனக் கூறப்பட்டது. அதனால் அரையாண்டு அறிக்கையில் கோட்டாபயவின் பெயர் இடம்பெறும் என அவர் தரப்பில் கூறப்பட்டு வந்தது.

எனினும், அமெரிக்கா வெளியிட்ட பிந்தைய ஆவணத்திலும் அந்நாட்டுக் குடியுரிமையைக் கைவிட்டவர்கள் பட்டியலில் கோட்டாபயவின் பெயர் இல்லை. 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் 7ஆம் திகதி வரை குடியுரிமையைத் துறந்தவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.

கோட்டாபய அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்தார் என ஓர் ஆவணத்தை, அவரது ஊடகப்பிரிவு அண்மையில் வெளியிட்டிருந்தது. அந்த ஆவணத்தின்படி, இவ்வருடம் மே 3ஆம் திகதி அவரது விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. எனினும், குடியுரிமையைத் துறந்தவர்கள் பற்றிய அரையாண்டு அறிக்கையிலும் கோட்டாபயவின் பெயர் இடம்பெறவில்லை.

19ஆவது அரசியல் திருத்தத்தின் 91ஆவது பிரிவின்படி, இலங்கையைத் தவிர வேறு எந்த நாட்டினதும் குடிமகனாக இருந்தால் எந்தவொரு நபரும் ஜனாதிபதிப் பதவிக்குப் போட்டியிடவோ அல்லது ஜனாதிபதியாக பணியாற்றவோ முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *