ஆசியாவின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களாக  மேம்படுத்துவேன்: கோட்டாபயஇலங்கையின் கல்வி முன்னேற்றத்தை இலக்காக கொண்டு அதிக முதலீடுகளை இடுவதற்கு தனது தலைமையிலான அரசாங்கம் அமைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அடையாளப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

இன்று (24) காலைமுதல் கொழும்பு தாமரைத் தடாக  அரங்கில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணி  ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் இரண்டாம் கட்ட பிற்பகல் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தனது உரையில் மேலும்,

எமது நாட்டின் பல்கலைக்கழகங்களின் வசதிகளை அதிகரிக்கவும், தொழில்நுட்பக் கல்வியை விரிவுபடுத்தி நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை ஆசியாவில் உள்ள தலை சிறந்த பல்கலைக்கழகங்களாக மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். அறிவை முதன்மைப்படுத்திய  நூற்றாண்டாக 21 ஆம் நூற்றாண்டு காணப்படுகின்றது.   இதனால், எமது அரசாங்கத்தின் கீழ் முதல் இரண்டு ஆண்டுகளில் ஒரு பெரிய முதலீட்டைக் கல்விக்காக செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கல்விக்காக நீண்டகால தேசியக் கொள்கை வகுக்கப்பட்டு  வேலைவாய்ப்புக்கு ஏற்ற இளைஞர்களையும், பட்டதாரிகளையும் உருவாக்க இலங்கையின்  கல்வி முறைமை மாற்றியமைக்கப்படல் வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் அமைச்சர்களான பசில் ராஜபக்ஸ, ஜீ.எல். பீரிஸ் அடங்கலாக பல பாராளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

செய்தியாளர் நூருல் ஹுதா உமர் 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *