பந்துவீச்சில் பிரகாசித்து, துடுப்பாட்டத்தில் ஏமாற்றினோம்!


இலங்கை அணிக்கெதிராக பந்துவீச்சில் தமது வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், துடுப்பாட்டத்தில் இலங்கை அணியின் அனுபவத்துக்கு முன்னால் ஏமாற்றத்தை சந்திக்க நேரிட்டதாக ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நையிப் தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நுவான் பிரதீப் மற்றும் லசித் மாலிங்கவின் அபார பந்துவீச்சினால் இலங்கை அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

எனினும், இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் எதிரணி வீரர்களுக்கு நெருக்கடி கொடுத்து விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தது.

ஆனால், துடுப்பாட்டத்தில் அவ்வணி எதிரணியிடம் சரணடைந்து மீண்டும் ஏமாற்றத்தை சந்தித்து இம்முறை உலகக் கிண்ணத்தில் தமது 2ஆவது தோல்வியைப் பெற்றுக்கொண்டது.

இந்த நிலையில், இலங்கை அணியுடனான தோல்விக்குப் பிறகு ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் குல்படீன் நையிப் அளித்த பேட்டியில்,

போட்டியின் ஆரம்பம் எமக்கு சிறப்பாக அமையவில்லை. அதிலும் முதல் 10 ஓவர்களில் நாங்கள் சிறந்த முறையில் பந்துவீசவில்லை. அந்த நேரத்தில் நாங்கள் சிறு பின்னடைவை சந்தித்திருந்தோம்.

எனினும், மத்திய ஓவர்களில் நாங்கள் விக்கெட்டுக்களைக் கைப்பற்றி நெருக்கடி கொடுத்தோம். இதனால் இலங்கை அணியை 200 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்த முடிந்தது. இவ்வாறான ஆடுகளங்கில் அதிக ஓட்டங்களைக் குவிக்க முடியும்.

ஆனால் அனைத்து பாராட்டுக்களும் மொஹமட் நபி, ரஷீத் கான் மற்றும் ஹமீட் ஹம்சாவுக்கு கிடைக்க வேண்டும். அவர்கள் சிறப்பாக பந்துவீசியிருந்தார்கள்.

அதேபோல இந்த விக்கெட்டானது வேகப் பந்துவீச்சுக்கு சாதகமானது. எமது வேகப் பந்துவீச்சாளர்கள் சரியான இடங்களில் பந்துவீசி விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தனர்.

எனினும், போட்டியின் ஆரம்பத்தில் எமது பந்துவீச்சாளர்கள் பொறுப்புடன் பந்துவீசவில்லை. அதனால் அதிக ஓட்டங்களை கொடுக்க வேண்டியிருந்தது.

இலங்கை என்பது மிகவும் அனுபவமிக்க அணியாகும். அவர்கள் நிறைய போட்டிகளில் விளையாடியிருக்கின்றனர். குறிப்பாக இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுடன் விளையாடிய அனுபவம் அந்த அணிக்கு உண்டு. எனவே இதற்குமுன் இவ்வாறான ஆடுகளங்களில் விளையாடிய அனுபவமும் அந்த வீரர்களுக்கு இருக்கின்றது.

துடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை நாங்கள் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும். எமது வீரர்களுக்கு இனிவரும் போட்டிகளில் நிதானமாக விளையாடும் படி கேட்டுக் கொள்கிறேன். அதிலும் இவ்வாறான ஆடுகளங்களில் துடுப்பாட்டத்தில் எங்களுக்கு தடுமாற வேண்டி ஏற்படும். எனவே எமது வீரர்கள் துடுப்பாட்டத்தில் இன்னும் முன்னேற்றம் காண் வேண்டும்.

இதேநேரம் இலங்கை அணியின் பந்துவீச்சு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில், “நாங்கள் ஆரம்பத்தில் ஒருசில விக்கெட்டுக்களை இழந்திருந்தோம்.

எனினும், நானும், நஜிபுல்லாஹ் சத்ரானும் பொறுமையாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தோம். ஆனால் எதிரணி பந்துவீச்சாளர்கள் எமது விக்கெட்டைக் கைப்பற்ற மேற்கொண்ட முயற்சிகள் இறுதியில் அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்தது. எனவே அனைத்து பாராட்டுகளும் இலங்கை பந்துவீச்சாளர்களையே சாரும் என தெரிவித்தார்.

இதேவேளை, ஆப்கானிஸ்தான் அணி, தமது 3ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்வரும் 8ஆம் திகதி சந்திக்கவுள்ளது.

நன்றி – Mohammed RishadLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *