எபோலா குணமடைந்து வீடு திரும்பிய நோயளிகளால் சமூகத்துக்கு ஆபத்து இல்லை- நைஜீரியா டாக்டர் வேலே அஹமது


ஆப்பிரிக்க நாடுகளில் வேகமாக பரவிவரும் எபோலா நோய்க்கு மரணத்தை தவிர மருந்து இல்லை என கூறப்பட்டு வரும் நிலையில் இந்நோய்க்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1200-ஐ கடந்துள்ளது.

நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் முதன்முதலாக பேட்ரிக் சாயெர் என்ற லைபேரியா ஆசாமி மூலம் எபோலா நோய் பரவியது. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி பேட்ரிக் சாயெர் கடந்த ஜூலை மாதம் 20-ம் தேதியும், அவருக்கு சிகிச்சை அளித்த பெண் டாக்டர் 25-ம் தேதியும் அடுத்தடுத்து பலியாகினர்.

இதனைத் தொடர்ந்து, நைஜீரிய மக்களுக்கும் எபோலா கிருமித்தொற்று பரவத் தொடங்கியது.

நைஜீரியாவில் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்ட சிலர் பூரணமாக குணமடைந்து ஆஸ்பத்திரியில் இருந்து ’டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை மந்திரி ஓன்யேபுச்சி சுக்வு சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், எபோலா ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று, குணமடைந்து வீடு திரும்பிய நோயளிகளால் சமூகத்துக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. எனவே, டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நோயாளிகள் குறித்து இதர மக்கள் அச்சமோ, பீதியோ கொள்ளத் தேவையில்லை என நைஜீரியாவில் எபோலா நோயால் முதன்முதலாக பாதிக்கப்பட்ட லாகோஸ் நகர சிறப்பு கமிஷனர் டாக்டர் வேலே அஹமது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கில் நேற்று பேசிய அவர், ’முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பின்னரும் எபோலோ நோய்த் தொற்று ஒருவரின் உடலில் குடிகொண்டிருக்கும் என்ற கருத்து மிகவும் தவறானது.

மீண்டும் ஒருமுறை அதே நபருக்கு எபோலா தொற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்றாலும், மூன்றுகட்ட சிகிச்சைக்கு பின்னர் எந்த நோயாளியின் உடலிலும் நோய்த் தொற்று தங்கியிருப்பது இல்லை.

எபோலாவுக்கு சிகிச்சை பெற்று, நலமடைந்து வீடு திரும்பிய நோயாளிகள் பலர் வெளியே நடமாடாததால் மக்களிடையே தவறான புரிதலும், அதையொட்டிய தவறான கருத்தும் நிலவி வருகின்றது.

விரைவில் லாகோஸ் கவர்னரின் முன் அனுமதியைப் பெற்று, நலமடைந்து வீடு திரும்பிய எபோலா நோயாளிகளை வெளியே கொண்டுவந்து, மக்களுக்கு அறிமுகப்படுத்தி, அவர்கள் இந்த நோயை எதிர்த்து, வெற்றி பெற்ற வரலாற்றை அவர்கள் மூலமாகவே மக்களுக்கு தெரிவிப்போம்’ என்று அவர் கூறினார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *