பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் பலியானோரின் வாரிசுகளை தனித்தனி குழுக்களாக சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர்


பாரிஸ் தீவிரவாத தாக்குதலில் பலியானோரின் வாரிசுகளை தனித்தனி குழுக்களாக சந்தித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவிரவாதிகள் கால்பந்து மைதானம், இசை அரங்கம், உணவு–மதுபான விடுதிகள் என ஆறு முக்கிய இடங்களில் நடத்திய அதிபயங்கர தாக்குதலில் 130 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் அதிகமானோர் பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுக் கொண்டது.

இந்தத் தாக்குதலில் முக்கிய குற்றவாளியான சலே அப்தெஸ்லாம் என்பவனை பிரான்ஸ் மற்றும் பெல்ஜியம் போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்சின் புறநகர்ப் பகுதியில் பதுங்கியிருந்த அப்தெஸ்லாமும், அவனுக்குப் புகலிடம் அளித்த குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இரு தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, மேற்படி தாக்குதலில் பலியான சிலரது குடும்பத்தினரை பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பலியான குடும்பத்தை சேர்ந்த சிலர், இங்கிலாந்தில் நிரந்தரமாக தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு நீண்டகால திட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.

பிரான்ஸ் அதிபரும், பிரதமரும் பாரிஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்ததாகவும், சில பொதுநிகழ்ச்சிகளின்போது சந்தித்திருப்பதாகவும் செய்தி வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஊடகங்கள், எனினும், பலியானவர்களின் வாரிசுகளுடன் அதிபர் ஹாலண்டே ஆற,அமர தனித்தனியாக கலந்துரையாடியது இதுவே முதன்முறை என குறிப்பிட்டுள்ளன.

வரும் ஜூன்மாதவாக்கில் மேலும் பலரது குடும்பத்தாரை சந்தித்துப்பேச அதிபர் முடிவு செய்துள்ளதாகவும் அந்த செய்திகள் தெரிவித்துள்ளன.

அதிபருடனான சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்ற நேற்றைய தினம், முன்னர் தீவிரவாத தாக்குதலில் நிலைகுலைந்து சேதமடைந்த கிழக்கு பாரிஸில் உள்ள லா பெல்லி எக்கியூபெ ரெஸ்டாரண்ட் புதுப்பொலிவுடன் திறக்கப்பட்டது, அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்த உணவகத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் மட்டும் 20 பேர் துடிதுடித்து, உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *