இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை


ராமேசுவரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி இலங்கை வெளியுறவு மந்திரியுடன் சுஷ்மா சுவராஜ் ஆலோசனை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணம் குறித்த ஏற்பாடுகளை கவனிப்பதற்காக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கொழும்பு சென்றுள்ளார்.

இலங்கை வெளியுறவுத்துறை மந்திரி மங்கள சமரவீராவை நேற்று அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது செய்து கொள்ள வேண்டிய உடன்பாடுகள் குறித்து அவர்கள் விவாதித்தனர். மேலும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே கொழும்பு-தூத்துக்குடி இடையே நேரடி பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த பயணிகள் கப்பல் சேவை வணிக ரீதியில் தோல்வி கண்டது. இதையடுத்து அந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. அதற்கு முன்பாக 1980-களில் ராமேசுவரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்றது. ஆனால் அப்போது சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்ததால் அந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

சுஷ்மா- மங்கள சமரவீரா சந்திப்பு பற்றி இலங்கை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாதிக் நிருபர்களிடம் பேசுகையில், “இந்தியா-இலங்கை (ராமேசுவரம்-தலைமன்னார்) இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக இருவரும் விவாதித்தார்கள். இந்த கப்பல் போக்குவரத்தை விரைவாக தொடங்க இருநாடுகளும் ஆர்வம் கொண்டுள்ளன. ஆனால் அதற்கு முன்பாக கப்பல்களை நிறுத்தி வைக்கும் தளத்தினை பழுது பார்க்க வேண்டும்” என கூறினார்.

சுஷ்மாவுடனான சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து ஒரு வார்த்தை கூட பேசப்படவில்லை என்று மங்கள சமரவீரா தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *