தொழிலாளர் கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறார் மிலிபாண்ட்


பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சி தலைவர் பொறுப்பிலிருந்து எட் மிலிபாண்ட் விலகுவார் என்று கூறப்படுகிறது.

சற்று முன் தொழிலாளர் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த மிலிபாண்ட், கட்சியின் முக்கிய தலைவர்களுடன் உரையாற்றி வருகிறார். தேர்தல் தோல்விக்கு முழு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ள மிலிபாண்ட், இக்கூட்டத்தில் தனது ராஜினாமா முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் நிழல் தலைவர் என கூறப்படும் எட் பால்ஸ், 422 வாக்குகள் வித்தியாசத்தில் ஆண்ட்ரியா ஜென்கின்சிடம் தோற்றுப்போனதால் தொழிலாளர் கட்சியினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

இன்று நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை முடிவின்படி, அங்கு மொத்தமுள்ள 650 தொகுதிகளில், இதுவரை 632 தொகுதிகளின் முடிவுகள் தெரியவந்துள்ளன. அதில் கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 317 இடங்களும், மிலிபாண்ட் தலைமையில் போட்டியிட்ட தொழிலாளர் கட்சிக்கு 228 இடங்களும்,  நிகோலா ஸ்டர்ஜியன் தலைமையிலான ஸ்காட்டிஷ் தேசிய கட்சிக்கு 56 இடங்களும், பீட்டர் ராபின்சன் தலைமையிலான டெமாக்ரடிக் யூனியனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்களும், நிக் க்ளெக் தலைமையிலான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 8 இடங்களும் கிடைத்துள்ளன.

பி.பி.சி. தொலைக்காட்சி வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு கேமரூன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 316 இடங்களும், தொழிலாளர் கட்சிக்கு 239 இடங்களும் கிடைக்கும் என கூறியிருந்தது. தேர்தல் முடிவுகளும் ஏறத்தாழ பி.பி.சி.யின் கருத்து கணிப்பை நிரூபிக்கும் வண்ணமே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *