இனவாத கூட்டணியின் கூலிப்படைதான் ஹிஸ்புல்லா :  ரவூப் ஹக்கீம்


இனவாதிகளின் பிரச்சினைகள் நடந்தபோது ஹிஸ்புல்லாவினால் வாய்திறக்கவே முடியவில்லை. அவரே இப்போது இனவாத கூட்டணியின் கூலிப்படையாக இயங்குகிறார் என்பதைவிட மிக மோசமான அரசியல் வங்குரோத்து நிலைமை இருக்கமுடியாது.

இவர் தற்போதைய ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது அப்பட்டமான காட்டிக்கொடுப்பாகும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் காட்டமாகத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டம் நேற்று காத்தான்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 அங்கு தொடர்ந்து உரை நிகழ்த்திய அவர் மேலும் கூறியதாவது;

இந்த ஜனாதிபதி தேர்தலில் காத்தான்குடி முக்கியமானதொரு பேசுபொருளாக இருக்கப் போகின்றது. ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் முழுநாடும், ஏன் சர்வதேசமும் அவதானம் செலுத்தும் இடமாக காத்தான்குடி மாறியிருக்கிறது.

இந்த நெருக்கடிகளிலிருந்து விடுபடுவதற்கு மக்கள் முயற்சித்துக்கொண்டிருக்கும் நிலையில், முழு சமூகத்தையும் நெருக்கடிக்குள் தள்ளிவிடும் வேலையை இங்குள்ள அரசியல் பிரமுகர் செய்துகொண்டிருக்கிறார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர், சமூகத்தின் மீதான நெருக்குவாரங்களை கவனத்திற்கொண்டு முஸ்லிம் அமைச்சர்கள் பதவிகளைத் துறந்து, பலமானதொரு செய்தியை நாட்டுக்கும் சர்வதேசத்துக்கும் சொன்னோம்.

அரசியல் வேறுபாடுகளை மறந்து சமூகம் ஒற்றுமைப்பட வேண்டும் என்ற சூழலில், தன்னையும் தனது சுயநலத்தையும் பாதுகாத்துக் கொள்வதற்கு முழு சமூகத்தையும் அடகுவைக்கின்ற வங்குரோத்து அரசியல் மிகவும் ஆபத்தானது.

அவருடைய மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் முஸ்லிம் தலைமைகள் மிகவும் பக்குவமாக நடந்துகொண்டன. அவரது பல்கலைக்கழக விவகாரத்துக்கும் டொக்டர் ஷாபியின் விவகாரத்துக்கும் நாங்கள் வித்தியாசம் பார்க்கவில்லை. இரண்டையும் இனவாத பிரச்சினைகளாகவே நோக்கினோம். அவரையும் பாதிக்காமல், சமூகத்தையும் பாதிக்கமால், இனவாதிகளுக்கு தீனியும்போடாமல் நாங்கள் மிக நேர்மையாகவும் பக்குவமாகவும் நடந்துகொண்டோம்.

முஸ்லிம்களின் வாக்குகளை பகல் கொள்ளையிட்டு எதிரணி வேட்பாளர்களின் காலடியில் கொண்டுபோய் கொட்டுவதை காத்தான்குடி மக்களோ அல்லது நாட்டு முஸ்லிம்களோ அனுமதிக்கமாட்டார்கள்.

நாங்கள் அமைச்சு பதவிகளைத் துறந்து, இனவாத நெருக்கடிக்குள் சிக்குண்டிருந்த ஹிஸ்புல்லாவுக்கு ஆறுதல் கொடுத்தோம். ஆனாலும், அவருடைய பக்குவமில்லாத செயற்பாடுகள் பிரச்சினைகளை மேலும் விஸ்வரூபமெடுக்க வைத்துள்ளது என அவர் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *