நீங்கள் சிகரம் தொடுவதற்கான பாஸ்வேர் இதுதான்!


நீங்கள் சிகரம் தொடுவதற்கான பாஸ்வேர் இதுதான்! – இமயம்தாண்டி எளிதில் பறக்கலாம்!

இந்தத் துறையைத் தேர்வு செய்ததால்தான் எனக்கு நல்ல வேலை கிடைக்கவில்லை. வேறு துறையைத் தேர்வு செய்திருந்தால் என் நிலையே வேறு என்று சிலர் அழுது புலம்புவதைப் பார்த்திருப்பீர்கள்.

பிடிக்காத துறையைத் தேர்வு செய்து, ஆர்வமில்லாமல் படித்துப் பிரகாசிக்க முடியாதவர்களின் நிலை இதுதான்.

நான் மாணவர்களுக்குச் சொல்வது ஒன்றுதான். இது உங்கள் வாழ்க்கை. நீங்கள் மட்டும்தான் உங்கள் வாழ்க்கைக்குப் பொறுப்பு.

உங்கள் பெற்றோர்களோ, மற்றவர்களோ அல்ல. ஆகையால், யாருடைய வற்புறுத்தலுக்கும் இடம் தராமல், எந்தத் துறையில் உங்களுக்கு ஆர்வம் அதிகமாக இருக்கிறதோ, என்ன படிப்பு உங்களுக்கு ஒத்துவரும் என்று தோன்றுகிறதோ, அந்தத் துறையைத் தேர்வு செய்யுங்கள்.

என்ன படிப்பு படித்தாலும், அந்தத் துறையில் வேலைகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆர்வத்துடன் புரிந்து படித்தால், எளிதாக சிகரத்தை எட்டிப் பிடிக்கலாம்.

ஒவ்வொரு துறையிலும் பல லட்சம் பேர் முன்னேறிச் சென்று கொண்டிருக்கும்போது, சிலருக்கு மட்டும் ஏன் அந்தத் துறையில் வேலை கிடைப்பதில்லை? கிடைத்தாலும் பிரகாசிக்க முடிவதில்லையே ஏன்?

நம் நாட்டில் 10-ம் வகுப்புக்குப் பிறகுதான், என்ன படிப்பு படிக்கலாம் என்று தேர்ந்தெடுக்கும் வசதி உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வை முடித்த பிறகு என்ன படிப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தங்களைத் தாங்களே சுயசோதனை செய்துகொள்ளும் அளவுக்கு அவர்களை யாரும் தயார் செய்வதில்லை.

இதனால், பலர் தங்களுக்குப் பொருத்தமான படிப்பைத் தேர்ந்தெடுக்காமல், பெற்றோர்கள் என்ன சொல்கிறார்களோ, எதைப் படித்தால் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்குமோ, எதைப் படித்தால் கௌரவமாக இருக்கும் என்று சமுதாயம் சொல்கிறதோ, அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டு, படிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

எப்படியாவது மூச்சுவாங்கிப் படித்து முடித்தாலும் அவர்கள் அந்தத் துறையில் முழுமை பெறுவதில்லை. இதனால், அவர்கள் துறைசார்ந்த மற்றவர்களுடன் மோத முடியாமல் பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர்.

இவை தவிர்க்கப்பட வேண்டுமெனில், உங்களின் தனிப்பட்ட ஆர்வம், உங்களின் தனித்திறமை, உங்களின் குணநலன் போன்றவற்றின் அடிப்படையில் பொருத்தமான படிப்பை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

ஆர்வம்
எந்தப் படிப்பாக இருந்தாலும், எவ்வளவு செலவு செய்தாலும் பிடிக்காமல் படித்தால், படிப்பது மிகவும் கடினமாக இருக்கும். ஆனால், உங்களுக்குப் பிடித்த படிப்பை படித்தால், கடினமான படிப்பும்கூட எளிதாக இருக்கும்.

ஆகவே பிடித்த, ஆர்வமுள்ள படிப்பைத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் படிக்கும் காலத்தின்போது மகிழ்ச்சியுடன் சுலபமாகப் படிக்க முடியும். அதேபோல் படித்து முடித்தபின் அதற்குரிய வேலைகளில் திருப்தியுடன் செயல்பட முடியும். பிடித்துப் படித்தால் நினைத்ததை எட்டித் தொடலாம்!

திறமைகள்
ஒவ்வொரு மனிதனிடமும் இயற்கையிலேயே சில திறமைகள் இருக்கும். இவை நீங்கள் படிக்கும் படிப்பிற்கும், அதற்குரிய வேலைக்கும் பொருத்தமாக இருந்தால், நீங்கள் செயற்கையாக எந்தத் திறமைகளையும் கற்றுக்கொள்ளத் தேவையில்லை. ஆகவே, உங்கள் துறையில் நீங்கள் வெகுவிரைவில் முன்னிலை பெறுவீர்கள்.

ஆர்வம் மட்டும் இருந்து அந்தத் திறமை இல்லாமல்போனால், உங்களுக்கு இயற்கையிலேயே இல்லாத திறமைகளைக் கற்றுக்கொள்ள வெகுகாலம் பிடிக்கும். சிலநேரங்களில் முடியாமல்கூட போகலாம்.

ஆகவே, ஒவ்வொரு படிப்பிற்கும் தேவையான திறமைகள் என்னவென்று அறிந்து, அந்தத் திறமைகள் உங்களுக்கு இயற்கையிலேயே இருக்கின்றனவா என்பதை ஆராய்ந்து உங்களுக்குப் பொருத்தமான படிப்பைத் தேர்ந்தெடுத்தால் உங்கள் இலக்கை அடையலாம்.

குணநலன்
ஒவ்வொரு படிப்புக்கும், வேலைக்கும் ஒரு குறிப்பிட்ட குணநலன் தேவைப்படுகிறது. ஆர்வமும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது. படிப்புக்கு ஏற்ற குணநலனும் அவசியம். சட்டம் படிக்க வேண்டுமென்றால், அதிகம் வாசிக்கும் பழக்கமும், தயக்கமில்லாத பேச்சும் அவசியம்.

ஆனால், அப்படிப்பட்ட பழக்கம் ஒருவரின் குணநலனில் இல்லையென்றால், சட்டம் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால்கூட, அதில் வெற்றிபெறுவது கடினம். அப்படி முயற்சி செய்தாலும், இயற்கையிலேயே இல்லாத திறமைகளைப் பெறக் கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அவை உங்கள் முயற்சியின் மூலம் கிடைக்கலாம்.

சிலநேரங்களில் கிடைக்காமலும் போகலாம். ஆகவே, இயற்கையில் உங்களின் குணநலன் என்னவோ, அதற்கேற்ற படிப்பைத் தேர்வுசெய்தால் வெற்றி நிச்சயம்.

இந்த மூன்றையும் மனதில்கொண்டு படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தால், படிப்பில் உங்களை யாராலும் அசைக்க முடியாது. அதேபோல் உங்களுக்கு அளவில்லாத மகிழ்ச்சியையும், நல்ல வாழ்க்கையையும் அமைத்துத்தரும்.

நிச்சயம் நல்ல உயர்ந்த வேலை கிடைக்கும். அப்படிக் கிடைக்காது போனால்கூட, நம்பிக்கை இழக்காமல் நீங்களே உங்களுக்கான வேலையை உருவாக்கிக்கொள்ளும் தன்னம்பிக்கையும், தைரியமும் பிறக்கும்.

நன்றி – இராபர்ட் ராஜ், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *