உடற்பயிற்சியில் நாம் அதிகம் செய்கிற தவறுகள்!


உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும் ஆர்வத்தில் ஜிம், யோகா, ஸும்பா பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துவிடுகிறோம். ஆனால், ஆர்வக்கோளாறில் சரியான வழிமுறைகளைப் பின்பற்றுகிறோமா என்றால் கிட்டத்தட்ட இல்லை என்றே சொல்ல வேண்டும். எல்லோரும் செய்கிறார்களே என்று கண்மூடித்தனமாக வழிமுறைகளை பலரும் பின்பற்றுகிறோம். அதுவுமில்லாமல் உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடனேயே சில தவறுகளையும்  செய்கிறோம். இந்தத் தவறுகளே சில நேரங்களில் நீங்கள் அடைய விரும்பிய ஃபிட்னஸ் லட்சியத்திற்கு இடையூறாகவும் இருந்துவிடும். உடற்பயிற்சியின் ஆரம்ப கட்டத்தில் பலரும் செய்யும் பொதுவான தவறுகள் என்று நிபுணர்கள் சிலவற்றைப் பட்டியலிட்டிருக்கிறார்கள். அவற்றை அறிந்துகொள்வோம்…

 

வழிகாட்டுதல் இல்லாத பயிற்சி

உடற்பயிற்சி ஆலோசனைகள் டன் கணக்கில் வலைதளம் மூலம் கிடைக்கக்கூடிய இந்த நாட்களில் எதைப் பின்பற்றுவது, எவற்றைத்  தவிர்ப்பது? ஒரே வாரத்தில் உடல் எடை குறைக்க வேண்டுமா? இதை குடியுங்கள்… 2 மாதத்தில் சிக்ஸ் பேக் வேண்டுமா? இந்த பயிற்சியை செய்யுங்கள். இப்படி உடல் ஆரோக்கியம், ஃபிட்னஸ் சம்பந்தமாக நிறைய யூ-டியூப் சேனல்கள் வேறு. இவற்றை நம்புவதா? வேண்டாமா என்று ஏகப்பட்ட குழப்பம். உடற்பயிற்சி அறிவியலையும், உணவியல் கோட்பாடுகளையும் ஒரே நாளில் கற்றுக் கொள்ள முடியாது.

‘ஒவ்வொருவரின் உடலுக்கும் தனித்துவமான உணவுக்கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சிகள் தேவை’ என்பதை நினைவில் வைத்துக் கொண்டு, உங்களுக்காகவே பிரத்யேகமாக ஒரு உடற்பயிற்சி நிபுணரை தேர்ந்தெடுங்கள். அவர் அந்த வேலையைப் பார்த்துக் கொள்வார்.

 

அளவுக்கதிகமான ஊட்டச்சத்து மாத்திரைகள்

எந்த அளவிற்கு உடற்பயிற்சி மீது மோகம் அதிகரித்திருக்கிறதோ? அதையும் தாண்டி, ஊட்டச்சத்து டானிக்குகள் மற்றும் மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை ஒரு ஃபேஷனாகவே மாற்றிவிட்டார்கள். உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்தவுடனேயே இவற்றை சாப்பிட வேண்டும் என்ற கட்டாயமில்லை.

நாம் ஒன்றும் விளையாட்டு வீரர்களுக்கு இணையாக உடற்பயிற்சிகள் செய்துவிடப் போவதில்லை. சாதாரணமாக ஜிம்மில் செய்யும் ஆரம்பநிலைப் பயிற்சிகளுக்கு நாம் வழக்கமாக சாப்பிடும் சத்தான உணவே போதுமானது.

இதெல்லாம் ஊட்டச்சத்து மருந்து நிறுவனங்கள் செய்யும் விளம்பர யுக்தி.

இன்னும் சொல்லப் போனால் நீங்கள் எடுத்துக் கொள்ளும் சரிவிகித உணவே நீங்கள் அடைய விரும்பும் உடல் தகுதியை கொடுத்துவிடும். அதற்குத் தகுந்த உணவுப்பட்டியலை ஒரு ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையோடு தயார் செய்யுங்கள்.

 

உண்ணாவிரதம் கூடாது

உணவுக் கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி இருப்பது மாபெரும் தவறு. சிலர் ஒல்லியாக வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 1000 கலோரிகள் மட்டுமே உணவு  எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கலோரிகள் அளவை குறைப்பதால் மட்டுமே ஒருவர் உடனடி ஒல்லியாக முடியாது. இந்தப் பழக்கம் நாளடைவில் ஊட்டச்சத்து பற்றாக்குறையையும், வளர்சிதைமாற்றக் குறைபாட்டையும் ஏற்படுத்தி உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையே பாதிக்கக்கூடும். இப்படி பட்டினி இருப்பதற்குப் பதில், உணவுக்கட்டுப்பாட்டோடு, குறைந்தபட்சம் வாரத்தில் 5 நாட்களாவது உடற்பயிற்சிகளையும் செய்து வந்தால் மட்டுமே உடல் பருமனை குறைக்க முடியும்.

 

லேட் நைட் தூக்கம்

இன்டர்நெட்டிலும், சாட்டிங்கிலும் இரவில் நீண்ட நேரம் விழித்துக் கொண்டு நேரத்தை செலவிடுவது நாம் செய்யும் மிகப்பெரிய தவறு. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என எல்லாம் கடைபிடித்தும் எடையிழப்பு ஏற்படவில்லையே என்று வருத்தப்பட்டு பயனில்லை. வாரத்தில் 1, 2 நாட்கள் போதிய தூக்கம் இல்லாவிட்டாலும் கூட, Stress ஹார்மோனில் தாக்கத்தை ஏற்படுத்தும். உங்களது வேலைகளில் செயல்திறனை குறைத்துவிடும். நாளடைவில், தசைகளில் பலவீனத்தை ஏற்படுத்தி அதுவே மீண்டும் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

 

தொகுப்பு: உஷா நாராயணன்

நன்றி : குங்குமம் டாக்டர் | தினகரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *