வெளிநாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள், இலங்கைக்குள் வர தடை


வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்ற 16 தமிழ் அமைப்புகளைத் தடைசெய்துள்ள இலங்கை அரசாங்கம், இந்த அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என கூறப்படுகின்ற வெளிநாடுகளில் வசிக்கின்ற 424 பேரை இலங்கைக்குள் பிரவேசிப்பதைத் தடைசெய்திருக்கின்றது.

இது தொடர்பில் அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது.

அந்த அறிவித்தலில் அவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியல் ஒன்றும் சேர்க்கப்பட்டிருக்கின்றது.

இந்தப் பெயர்ப் பட்டியலில் 30 பேர் வரையிலான பெண்களும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அறிவித்தல் குறித்து கருத்து வெளியிட்ட மனித உரிமை விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த சட்டத்தரணி கே.எஸ்.ரட்னவேல், இது நாட்டின் சட்ட விதிகளுக்கு அமையாதது என்று குறிப்பிட்டார்.

அத்துடன் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் ஒருவரின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாக அமைந்திருக்கிறது என்றும் கூறுகிறார்.

‘சர்வதேச விசாரணைகள் தேவையில்லை. நாங்கள் உள்நாட்டில் சகவாழ்வையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துகிறோம்.

அதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களையும், அமைப்புகளையும் வரவேற்கிறோம் என்று கூறிக்கொண்டு, இத்தகைய அறிவித்தல்களை வெளியிடுவதன் மூலம் முன்னுக்குப் பின் முரணாகவே அரசாங்கம் செயற்படுகிறது.’

எனினும், பயங்கரவாதம் மீண்டும் தலையெடுக்கக் கூடாது, மீண்டும் நாட்டில் ஒரு யுத்தம் ஏற்படக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *