மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம் : ஐ தே க குற்றச்சாட்டு!


lakshman-kiriella-unp-mp

அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியுள்ளார். வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீர் கோரிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை, வெலிக்கடைச் சிறைச்சாலையில் கைதிகள் மீது தாக்குதல் நடத்தியமை போன்ற சம்பவங்கள் மனித உரிமை மீறல்களுக்கான சிறந்த உதாரணங்களாகும்.

எனவே அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளது, அவற்றைச் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலைமை முற்று முழுதாக சீர்குலைந்துள்ளது.அரசாங்கம் பாரியளவில் ஊடகங்களை அடக்குமுறைக்கு உட்படுத்தி வருகின்றது. இதன் காரணமாக ஊடக நிறுவனங்கள் உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்துவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கம் பல்வேறு வாக்குறுதிகளை சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய போதிலும் இதுவரையில் அவை நிறைவேற்றப்படவில்லை. 17ம் திருத்தச் சட்டம் மீள அமுல்படுத்தப்படும் என சில ஆளும் கட்சி அமைச்சர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பில் வாக்குறுதி அளித்த போதிலும், இதுவரையில் அரசாங்கம் அதனை நடைமுறைப்படுத்தவில்லை

மனித உரிமை விவகாரங்களில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சி தயார் எனினும் அதற்கு முன்னதாக அரசாங்கம் தனது கடமைகளை சரியான முறையில் செய்ய வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச தரத்தில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அரசாங்கம் உள்ளக விசாரணை நடத்த வேண்டும், ஏற்கனவே உறுதியளிக்கப்பட்டது போன்று சர்வதேச தரத்தில் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். உள்ளக விசாரணைகளை நடத்தினால், யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகள் அழுத்தங்களிலிருந்து தப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *