யாழ். பல்கலை வளாகத்திற்குள் ஆயுதம் தரித்த சீருடையினர்


யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் வருகைதர மாட்டார்கள் என யாழ்.மாவட்ட இராணுவக்கட்டளைத்தளபதி பல்கலை நிர்வாகத்தினருக்கு உறுதியளித்துள்ள நிலையில் இன்று ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலை வளாகத்திற்குள் நுழைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று மதியம் 2.30 மணியளவில் ஆயுதம் தரித்த சீருடையினர் இருவர் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வருகை தந்ததுடன் கைலாசபதி அரங்கத்திற்கு முன்னால் உள்ள நினைவுத்தூபியினையும் சுற்றிப்பார்த்து விட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து உடனடியாக பதிவாளருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன் குறித்த சீருடையிரிடம் வளாகத்திற்குள் ஏன் நுழைந்தீர்கள் என்று கேட்ட போது மேலிடத்து உத்தரவின் பேரிலேயே தாங்கள் வந்ததாக கூறிவிட்டு சென்றனர் என பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

எனினும்  கடந்த ஆண்டு நவம்பர் 27 மற்றும் 28ஆம் திகதிகளில் மாணவர்களின் விடுதிக்குள்ளும் பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளும் ஆயுதம் தரித்த சீருடையினர் அனுமதியின்றி நுழைந்து தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இதுகுறித்து யாழ். மாவட்ட இராணுவ தளபதி பதிலளிக்கும்போது, அன்றைய நாட்களில் உள்நுழைய வேண்டிய தேவை ஏற்பட்டதாலேயே இராணுவத்தினர் ஆயுதத்துடன் உள்நுழைந்ததாகவும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள்  இடம்பெறாது என தான் உறுதியளிப்பதாகவும் நிர்வாகத்திடம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பத்திலேயே பல்கலைக்கழக நிர்வாகம்  உரியவர்வர்களுடன் பேசி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர்களது வருகையானது அச்சத்தைத் தோற்றுவிப்பதாகவும் தாங்கள் என்ன நடக்கப்போகின்றதோ என்ற ஒருவித பயத்துடனேயே உள்ளதாகவும் மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *