உலக மனித உரிமைகள் தினம்: ஐ.நா ஒரு தோற்றுப் போன அமைப்பு? தீபச்செல்வன்அண்மையில் இலங்கை சனாதிபதியாக பதவியேற்ற கோத்தபாய ராஜபக்ச, பெரும்பான்மையின மக்கள் கோபப்படும் வகையில் சிறுபான்மையினர் எதையும் கேட்கக்கூடாது என்றொரு புதிய தத்துவத்தை திருவாய் மலர்ந்துள்ளார். இன அழிப்பு போருக்கு மனிதாபிமானப் போர் என்று பெயர் சூட்டியவர்கள் இப்படி எல்லாம் பேசுவது ஆச்சரியமானதல்ல. இந்த உலகப் பந்தில் வரலாறு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒரு தனித்துவமான இனமாக இறைமையும் சுய நிர்ணய உரிமையும் கொண்ட ஈழத் தமிழ் மக்களின் உரிமைகள், சிங்கள அரசாலும் அனைத்துலக சமூகத்தினாலும் எப்படி நோக்கப்படுகின்றன?

ஒரு மனிதனின் அடிப்படை உரிமை என்ன? தான் பிறந்த மண்ணில் தனக்கான உரிமைகளுடன் வாழ்தலே அடிப்படை உரிமையாகும். ஒரு மனிதன் வாழும் உரிமையைப் பெறுவதும் மற்றவரை வாழ விடும் வகையில் நடப்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பிரகடனத்தின் அடிப்படை அம்சம். அப்படிப் பார்க்கையில், நாம் நமக்கான வாழ்வைத்தான் வாழ்கிறோமா? இலங்கைத் தீவைப் பொறுத்தவரையில், சிங்களப் பேரினவாத அரசின் கீழ் நாம் ஒடுங்கியும் அடங்கியும் வாழ வேண்டும் என ஆள்பவர்கள் நினைக்கின்றனர்., இதுதான் யதார்த்தமான நிலை. நாம் பிறந்த மண்ணில் நமது உரிமைகளுடன் வாழ முடியவில்லை. பெரும்பான்மையினமே எமது உரிமைகளுடன் எம்மை வாழ அனுமதிக்கவும் இல்லை மிகவும் வெளிப்படையான விசயம்.

இலங்கையில் புரையோடிப் போயிருக்கிற இனப்பிரச்சினைக்கு இதுதான் அடிப்படைக் காரணமாக இருக்கிறது. எம்முடைய மண்ணில் நாம் வாழ முடியாது. நம்முடைய அடையாளங்களுடன் நாம் வாழ முடியாது. நாம் நாமாக வாழ முடியாது. நம்முடைய வரலாற்றைப் படிக்க முடியாது. நம்முடைய வரலாற்றை பேச முடியாது. இழந்த உரிமைகளைப் பற்றி பேசவும் அதனைக் கோரவும் முடியாது. உலகமயமாதல் சூழலில் உலகின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் அவதானிக்கின்ற, அல்லது தட்டிக் கேட்கக்கூடிய காலம் ஒன்றிலேயே நாம் பலவந்தமாக இன்னொரு வாழ்க்கையில் அமிழ்த்தப்படுகிறோம். அப்படியெனில் இலங்கை எத்தகைய மனித உரிமை மீறல்களைக் கொண்ட நாடு? இந்த அதிர்ச்சி எவரையும் உறுத்தவில்லை என்பதுதான் உலகின் புதிய வியப்பு.

எல்லா மனிதர்களும் சுதந்திரமானவர்கள் என்பதையும் உரிமையிலும் கண்ணியத்திலும் ஒருவருக்கு ஒருவர் சமமானவர்கள் என்றும் ஐ.நாவின் மனித உரிமைப் பிரகடனம் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு மனிதனுக்குமான வாழ்தலை வலியுறுத்தும் இந்த நாள் இனம், மதம், நாடு, மொழி, பால், சாதி போன்ற ஏற்றத்தாழ்வுகளற்ற ரீதியில் மனிதர்கள் அவர்களுரிய சம உரிமையை உடையவர்கள் என்றும் குறிப்பிடுகிறது. இன்றைய நாளில் இந்த நாட்டிலும் இந்த உலகத்தாலும் ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் இனத்தின் உரிமைகளுக்கு என்ன இடம் வழங்கப்பட்டது என்பதைக் குறித்து ஆராய்வது உபயோகம் மிக்கது.

இலங்கையில் மனித உரிமை மீறல்களின் ஆரம்ப நிலையோ மிகவும் கடூரமானது. உண்மையில் அதன் அடிப்படையே இன மேலாதிக்கம்தான். சக மனிதர்கள்மீதான ஒடுக்குமுறை பாரிய குற்றமாக உலகில் கருதப்படுகின்றது. மனிதர்களுக்கிடையிலான சமத்துவமின்மை மற்றும் ஒடுக்குமுறை, சிறுவர்கள், பெண்கள் மீதான ஒடுக்குமுறை மற்றும் மீறல்கள் குறித்தெல்லாம் உலகில் நன்றாகப் பேசப்படுகின்றது. மனித உரிமை அவைகளை நடாத்துவதற்கும் வருடாந்தம் அவைகள் பற்றி உரையாற்றுவதற்கும் உலக மனித உரிமைகள் தினத்தை நினைவு கூர்வதற்குமான தேவைகளும் உள்ளடங்களுங்களும் உலகில்  தொடர்ந்தும் வாய்த்து வருகின்றன.

ஆனால் மெய்யாகவே அந்த மீறல்களை தடுக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை உலகில் உள்ள நாடுகளின் அரசுகள்மீது பணிப்பதற்குத்தான் இயலாமல் இருக்கின்றன. இலங்கையில் ஒரு சிறுபான்மை இனம் இன்னொரு பெரும்பான்மை இனத்தால் ஒடுக்கப்படுகின்றது. இது இன உரிமை மீறல். இது இன உரிமை மறுப்பு. ஆனால் இதனை ஒரு மனித உரிமை மீறல் என்பதை ஏற்றுக் கொள்வதற்கே 30 ஆண்டுகள் இந்த உலகிற்கு தேவைப்பட்டுள்ளன என்றால் இந்த உலகம் எவ்வளவு ஆபத்தமானது? பல இலட்சம் மக்களின் உயிர்களை காவு கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டது என்பது எவ்வளவு கொடூரமான விசயம். ஒரு கொடும்போரின் இறுதி நாட்களில் மாத்திரம் ஒன்றரை லட்சம் மக்களை பலிகொடுக்க வேண்டி ஏற்பட்டதே?

உண்மையில் இதுதான் உலகின் மனித உரிமை குறித்த சிரக்தைளாக இருக்கின்றன. இதுதான் உலகின் உண்மையான நிலவரமாக இருக்கின்றது. ஈழத்தில் மாத்திரமல்ல, ருவாண்டா இனப்படுகொலை, குர்து இனப்படுகொலை, ஆர்மோனியன் இனப்படுகொலை என்று உலகில் நிகழ்ந்தேறிய எல்லா இனப்படுகொலைகளின் போதும் மனித உரிமை என்ற  வார்த்தைகள் சாதாரணமாககூட உபயோகிக்கப்பட்டு, அவை தடுத்து நிறுத்தப்படவில்லை. அதனை மனித உரிமை மீறல்களாக ஏற்றுக்கொள்ளவும், இனப்படுகொலைகளாக ஏற்றுக்கொள்ளவும் வெகுகாலம் எடுத்தது. இந்த மக்களின் இனப்படுகொலைக் கல்லறைகள்மீது வெள்ளையும் அடிக்கப்பட்டது. உலகின் அரசியல் தேவைகளின் பிரகாரங்களின்படியே தீர்ப்புக்கள் காலம் தாழ்ந்து கிடைத்தன.

இலங்கை விடயத்தில் ஐ.நா மிகவும் தோற்றுப் போயிருந்தது. இதனை ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள், இந்நாள் செயலாளர் நாயகங்கள் ஒத்துக்கொண்டிருக்கிறார்கள். ஐ.நா அதிகாரிகள் இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். காலம் கடந்த இந்த ஒப்புதல்களும் வருத்தங்களும் இந்த மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க தவறியிருக்கின்றன. இராண்டாம் உலகப் போரின் பேரழிவின் பின்னர், உலகின் வல்லரசு நாடுகளின் பாதுகாப்பைத்தான் இத்தகைய தினங்கள் உறுதிப்படுத்த முயலுகின்றன. ஒடுக்கப்பட்ட இனங்களும் சிறுபான்மை இனங்களும் உலகின் ஆதிக்க நாடுகளினாலும், அதன் அரசியல் கூட்டு நாடுகளினாலும் உரிமை இழப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அதனை நியாயப்படுத்தவும் அவர்களின் அரசியலுக்கும்தான் இவை உபயோகப்படுகின்றன.

இலங்கைத் தீவில் தொடரும் இன உரிமையும் இப்படி ஒரு கணக்கிலேயே தொடர்கின்றது. ஒரு சிறு இனத்தின் பல்லாயிரம் போராளிகள் ஆயுதம் ஏந்தி மாண்டுபோனதின் அரசியல் உண்மையை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானதல்ல. உலகெங்கும் அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. தன்னுடைய மொழியை, தன்னுடைய நிலத்தை, தன்னுடைய அடையாளத்தை, தன் சக மனிதர்களை அழிப்பவர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்குகிற நிலமை வருகின்றது எனில் அங்கு மனித உரிமை மீறல் என்பது எந்தளவுக்கு முற்றிப் போன பிரச்சினையாக மாறியிருக்கிறது என்பதை வல்லுனர்கள் அறியாதவர்களல்ல. இத்தகைய தினங்களுக்கும் இதனை கொண்டாடுகிற அமைப்புக்களின் கணக்குகளில் ஏன் இவை உள்ளடங்கவில்லை?

ஈழத்தில் மிகக் கொடிய இனப்படுகொலை நடைபெற்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டன. போரில் படு பயங்கரமாக ஒரு இன அழிப்பின் அத்தனை நோக்குகளுடனும் கொல்லப்பட்ட மக்கள் குறித்து எந்த நீதியும் இல்லை. மக்கள் கொல்லப்பட்டார்கள் என்பதை ஏற்கவும் அந்த மக்களுக்காக ஒரு விளக்கினை ஏற்றவும், அவர்களுக்காக அழவும்கூட இங்கு உரிமை மறுக்கப்பட்டிருந்தது. இதனைக்கூட இந்த உலகும், இத்தினங்களும் இதுசார் அமைப்புக்களும் கண்டுகொள்ளவில்லை. இறுதியில் ஈழ இனப்படுகொலை குற்றங்களிலிருந்து தப்பிக் கொள்ளும் சர்வதேச நிகழ்ச்சி நிரல்களின் அடிப்படையில் அதிகாரபூர்வமாக ஏற்கப்படாத நிலையில் கள்ள மௌனத்துடன் இணங்கப்பட்டிருக்கிறது.

இலங்கையில் மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில், குறிப்பாக இனப்படுகொலைப் போரின்போதும், அதற்குப் பிந்தைய சில வருடங்களிலும் மனித உரிமை விடயம் குறித்து எந்தக் கேள்வியும் எழவில்லை. பின்னர் உலக அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப பேசப்பட்டது. ஆனால் மகிந்தவின் ஆட்சி முடிவுற்ற பின்னர், மைத்திரி – ரணில் ஆட்சிக் காலத்தில் ஈழப்படுகொலை விவகாரங்கள்மீது மெல்ல மெல்ல வெள்ளையடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. போரில் கொல்லப்பட்டவர்கள் குறித்து எந்த சொற்களையும் இலங்கை ஆட்சியாளர்கள் எவரும் இதுநாள்வரை பேசியதில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பல நூறு நாட்களாக ஈழ வீதிளில் நின்று போராடுகிறார்கள். இன்னமும் போராடுகிறார்கள்.

ஒரு மனிதரின் உரிமை குறித்துப் பேசும் சாசனங்கள், ஒரு இனத்தின் பகுதியினரே இல்லாமல் போயிருப்பதை குறித்து பேசாமல் இருப்பது ஏன்? அவர்கள் மிகவும் கொடூரமான வழிகளில் கொல்லப்பட்டமை குறித்தும் காணாமல் ஆக்கபட்டமை குறித்தும் அவர்களின் வாழ் நிலங்கள் பறிக்கப்பட்டமை குறித்தும் பேசாதிருப்பது ஏன்? உலகின் இந்த வஞ்சகங்களிற்கும் இலங்கையில் காணப்படும் இனப் பாரபட்சங்களுக்கும் இடையில் ஒரு வேறுபாடும் இல்லை. ஐக்கிய நாடுகள் சபை போன்றவை இந்த உரிமை மீறல்களை ஊக்குவிக்கின்றன. இத்தனை உலகப் பேரழிவுகளின் பின்னரும் தரவுகளை மதிப்படும் ஒரு சபையாக, ஈறுகளில் வருத்தம் தெரிவிக்கும் ஒரு அமைப்பாக ஐ.நா தேவை தானா?

ஆனாலும் நாம் இரத்தமும் சதையுமாக அனுபவித்த கதைகளை இவ் உலகிற்கு கையளிக்க வேண்டிய தேவையில் இருக்கிறோம். எங்களுக்கு நேர்ந்த இந்தக் கதி உலகில் எந்த இனத்திற்கும் நேரக்கூடாது. உலகில் உள்ள மக்களின் உனித உரிமைகள் மதிக்கப்படவேண்டும். எந்த இனமும் எங்களைப் போல அழிந்துபோகக் கூடாது. ஒடுக்கப்படக்கூடாது. அரசெனப்படுவது மக்களை பாதுகாக்கவும், அந்த மக்களை இறைமையைப் பெற்று ஆள்வதும் என்பதும் எங்கள் நாட்டில் எங்கள் விடயத்தில் எத்தனை அர்த்தமற்றது? எங்கள் அரசே எங்களை கொலை செய்தது. இப்போது எங்களை கொலை செய்தவர்களே மீண்டும் ஆள்கின்றனர்.

உலகின் பாதுகாப்பு விதிகளும் இனப்படுகொலை செய்யப்பட்ட எங்கள் குருதியை கழுவுகின்றன. இத்தகைய விதிகள் திருத்தப்பட வேண்டும். எங்கள் இழப்பும் சிந்திய குருதியும் உலகில் எவரும் இக் கதி ஏற்படாத நிலையொன்றை வலுவாக்க புதிய சாசனத்தை எழுத வேண்டும். இத்தகைய தினங்கள் அர்த்தமற்றுப் போகலாம். மனித உரிமைப் பிரகடனம் வெறும் காகித்தில் நினைவுகூரப்படலாம். ஆனால் மனித உரிமைக்கும் இன அழிப்பு மீறலுக்கும் ஆளாகிய நாம் அதன் வலிகளைப் பேச வேண்டும். இந்த தினத்தில் உலகிற்கு அதை உணர்த்த வேண்டும். உலகின் அத்தனை ஒடுக்கப்பட்ட, மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாக்கப்பட்டவர்களுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். இந்த நாள் உண்மையிலேயே அர்த்தம் பெற வேண்டும். பெறும்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *