காதலுக்கு நாலு கண்கள் | கவிதை | பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்


கல்லால் இதயம் வைத்து
கடும் விஷத்தால் கண்ணமைத்து
கணக்கில்லாப் பொய்களுக்குக்
காரணமாய் நாக்கமைத்துக்
கள்ள உருவமைத்துக்
கன்னக்கோல் கையமைத்து
நல்லவரென்றே சிலரை – உலகம்
நடமாட விட்டதடா!

காதலுக்கு நாலு கண்கள்
கள்வனுக்கு ரெண்டு கண்கள்
காமுகரின் உருவத்திலே
கண்ணுமில்லை காதுமில்லை!

நீதியின் எதிரிகளாய்
நிலைமாறித் திரிபவர்கள்
பாதையில் நடப்பதில்லை
பரமனையும் மதிப்பதில்லை
பாதகம் கொஞ்சமில்லை
பண்புமில்லை முறையுமில்லை
பேதைப்பெண்கள் இதைப்
பெரும்பாலும் உணர்வதில்லை
பேதம் இல்லை என்பார்
வேதாந்தம் பேசிடுவார்
பெற்றவளைப் பேயென்பார்
மற்றவளைத் தாயென்பார்
காதல் அறம் என்பார்
கற்பின் விலை என்னவென்பார்
கண்மூடி மாந்தர் இதை
கடைசிவரை அறிவதில்லை!

 

 

 

நன்றி : தமிழ் கூடல்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *