கவிதை | ஈழத்து பாலு மகேந்திரா நினைவாக | வ.ஐ.ச.ஜெயபாலன்


 

முல்லையே பூத்திடு முழுமதியே தேன் சிந்து
ஆம்பலே கண்சிமிட்டு அல்லியே கமழ் இனிது
நீலமலை முகடே நின்னுடைய காதலனின்
நினைவில் குறிஞ்சி மலர் வளையம் சூடிக்கொள்.

நாளை பகல் விடிந்து நறும் கமலம் கண்விழித்து
சோலைப் பறவையெல்லாம் சுந்தரமாய் தமிழ் பாடி
ஈழத்துப் பாலுவுக்கு இறுதியாய் விடைகொடுக்கும்.

கல்லில் சங்கக் கவியில் சுவடான
தென்னகத்து அழகியலை திரையில் உயிர்பித்த
எங்கள் ஈழத்துப் பொக்கிசத்தை
ஆழப் புதைத்தாலும் நீறாய் விதைத்தாலும்
ஐந்திணையும் தோப்பாகி அழககழகாய் பூமலர்ந்து
பறவைகளாய்பாடி பசும்தரையாய் பாய்விரிக்கும்.

கோல ஒளிநெய்யும் ஒரு கோத்திரத்தின் பெரும்தலைவா
உன் பொற்தாலிப் பூங்கொடியில் பூத்த மலர் ஒன்று
உன் கலைஞானப் பூங்கொடிக்கோ காலமெல்லாம் பொன்மலர்கள்

 

– வ.ஐ.ச.ஜெயபாலன் – Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *