தாய்ப்பால் எனும் தடுப்பூசி!


உலகிலேயே விலை மதிப்பில்லாத ஓர் உணவுப் பொருள் தாய்ப்பால் தான். மஞ்சள் நிறத்தில் பிசுபிசுப்பாகச் சுரக்கும் சீம்பால்தான் குழந்தைக்கு முதல் உணவு; முதல் தடுப்பூசியும் இதுதான். இதில் ‘இம்யூனோகுளோபுலின் ஏ’ எனும் நோய் எதிர்ப்புப் புரதம் இருக்கிறது. குழந்தைக்குச் சளி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எவ்வித நோய்த்தொற்றும் ஏற்படாமல் இது பாதுகாக்கிறது. மற்ற நோய்களுக்கான எதிர்ப்பு ஆற்றலையும் தருகிறது.

அடுத்துச் சுரக்கும் தாய்ப்பாலில் குழந்தைக்குத் தேவையான கொழுப்பு, சர்க்கரை, புரதம், வைட்டமின் ஏ, சி, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட எல்லாச் சத்துகளும் அடங்கியுள்ளன. மேலும், 7 – 8 % கார்போஹைட்ரேட், 87.47 % தண்ணீர், 3.76 % கொழுப்பு, 2.14 % புரதம், 3.76 % லாக்டோஸ், 0.31 % தாதுக்கள் தாய்ப்பாலில் உள்ளன. வைட்டமின் – டி மட்டுமே தாய்ப்பாலில் இல்லை.

தாயுடனான பாசப் பிணைப்பு

குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தர வேண்டும். சிசேரியன் அறுவைப்பேறு மேற்கொண்ட அம்மாக்கள் மயக்கம் தெளிந்த பின்னர் தாய்ப்பால் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு முதல் 6 மாதங்களுக்குத் தண்ணீர் தர வேண்டியதில்லை. குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு ஆரம்ப கட்டத்தில் தேவைப்படும் கொழுப்பு அமிலங்களும் சிஸ்டீன், டாரின் ஆகிய அமினோ அமிலங்களும் தாய்ப்பாலில் மட்டுமே உள்ளன.

இதிலுள்ள லைசோசைம் எனும் என்சைம் நோய்க் கிருமிகளை அழித்துவிடுகிறது; உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றுகிறது; மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கிறது. உடல் வளர்ச்சி, எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி, பல் வளர்ச்சி எனக் குழந்தையின் முழுமையான வளர்ச்சிக்குத் தாய்ப்பால்தான் உதவ முடியும். அது மட்டுமா? அம்மாவுடனான பாசப் பிணைப்பு தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளிடம்தான் அதிகம்.

தாய்க்கும் நன்மை உண்டு!

தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன. முக்கியமாக, தாய்ப்பால் தரும்போது கருத்தரிக்கும் வாய்ப்பு குறைகிறது. பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் உதிரப்போக்கு கட்டுப்படுத்தப்படுகிறது. மார்பகப் புற்றுநோய், சூலகப் புற்றுநோய் போன்றவை ஏற்படும் ஆபத்து குறைகிறது. தாய்ப்பால் கொடுப்பதால் சுரக்கும் ஹார்மோன்கள் காரணமாக, தாயின் வயிறு சுருங்கி பழைய வடிவத்தைச் சீக்கிரத்தில் பெற முடியும்.  இரண்டு வயதுவரை தாய்ப்பால் தருவது முக்கியம். குழந்தைக்கு 6 மாதங்கள் ஆன பிறகு தாய்ப்பாலுடன் தகுந்த இணை உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

சிக்கலைத் தீர்ப்போம்!

இன்றைய நவீன வாழ்க்கைச் சூழலில் நிறையப் பெண்கள் வேலைக்குச் செல்வதால், பலரும் 6 மாதத்துக்குப் பிறகு தாய்ப்பால் தருவதைத் தவிர்க்கின்றனர். கொஞ்சம் பொறுமையுடன் செயல்பட்டால், வேலைக்குச் செல்லும் அம்மாக்களும் தங்கள் குழந்தைகளுக்கு நாள் முழுவதும் தாய்ப்பால் வழங்கலாம். ‘ப்ரஸ்ட் பம்ப்’ மூலம் தாய்ப்பாலை எடுத்து, ஃப்ரீஸரில் பாதுகாத்துவிட்டால், வீட்டில் உள்ளவர்கள் குழந்தைக்குத் தேவைப்படும் போதெல்லாம் கொடுக்கலாம். இப்படி 24 மணி நேரத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் பாலை ஃப்ரீஸரிலிருந்து எடுத்து அறை வெப்பநிலைக்குக் கொண்டு வந்து குழந்தைக்குப் புகட்டலாம். தாய்ப்பாலை நேரடியாகச் சூடுபடுத்தக் கூடாது. தாய்ப்பால் அறை வெப்பநிலையில் 6 மணி நேரத்துக்குக் கெடாமல் இருக்கும்.

தாய்ப்பால் வங்கி

சில அம்மாக்களுக்குத் தேவைக்கு அதிகமாகப் பால் சுரக்கும். துரதிர்ஷ்டவசமாக, சில குழந்தைகள் பிறந்ததும் இறந்துவிடும். இந்த அம்மாக்களிடமிருந்து தாய்ப்பாலைப் பெற்று, பாதுகாத்து, தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் குழந்தைகளுக்குக் கொடுப்பதுதான் தாய்ப்பால் வங்கியின் முதன்மை நோக்கம். தாய்க்குப் போதிய அளவு தாய்ப்பால் சுரக்கவில்லை என்றாலோ மஞ்சள் காமாலை, எய்ட்ஸ் போன்ற நோய்கள் காரணமாக அம்மாவால் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க முடியாமல் போனாலோ பிரசவத்தின்போது தாய் இறந்துவிட்டாலோ அந்தக் குழந்தைகளும் தாய்ப்பால் பெறும் வசதியை இந்தத் தாய்ப்பால் வங்கிகள் ஏற்படுத்தித் தருகின்றன.

குறைப் பிரசவக் குழந்தைகளுக்கும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கும், நோயால் நலிவுற்ற கைக்குழந்தைகளுக்கும் தாய்ப்பால் தேவை அதிகம். அதேவேளையில் தாய்ப்பால் அதிகம் சுரந்து மார்பில் கட்டியாகி வலியால் அவதிப்படும் பெண்களும் இருக்கின்றனர். இந்த இரண்டு பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு தாய்ப்பால் வங்கிகளை வளர்த்தெடுப்பதுதான்.

தமிழகத்தின் முதல் தாய்ப்பால் வங்கி 2014-ல் சென்னை எழும்பூர் அரசுக் குழந்தைகள் நல மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இப்போது மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட  9 நகரங்களில் இது வந்துவிட்டது. சில தனியார் மருத்துவமனைகளிலும் தாய்ப்பால் வங்கிகள் உள்ளன. மேலும், தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்கப்படுத்தும் விதமாக. தமிழக அரசுப் பேருந்து நிலையம், சந்தை போன்ற மக்கள் கூடும் இடங்களில் தாய்ப்பாலூட்டும் அறைகளைத் திறந்துள்ளது.

கூட்டுப் பொறுப்பு

தாய்ப்பால் ஊட்டுவது ஒரு சமூகத்தின் கூட்டுப் பொறுப்பு என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்குக் கணவர், குடும்பத்தினரின் ஊக்குவிப்பு மிகவும் அவசியம். சமூகம், பணிபுரியும் இடத்தின் ஆதரவும் மிக அவசியம். போதிய பேறுகால விடுப்பும் சம்பளத்துடன் கூடிய விடுப்பும் கொடுப்பது தாய்ப்பால் ஊட்டுவதை அதிகரிக்கும்.

தாய்ப்பால் ஊட்டும் அம்மாவுக்குப் போதிய ஊட்டச்சத்து மிகுந்த உணவைக் கொடுப்பதும், போதுமான அளவுக்கு ஓய்வைக் கொடுப்பதும், மன மகிழ்ச்சி நிறைந்த சூழலை அமைத்துக் கொடுப்பதும் குடும்பத்தினரின் கடமை என்பதை வலியுறுத்துகிறது இந்த நிறுவனம்.

 

கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்

 

நன்றி : டாக்டர் கு. கணேசன் | இந்து தமிழ்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *