இருட்டு அறையில் முரட்டு தூக்கம் போட்டால் புற்றுநோய் வராது!


நமது உடலில் மெலட்டோனின் என்ற ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன்தான் நாம் தூங்குவதற்குக் காரணமாக உள்ளது. மூளையின் நடுப்பகுதியில் பீனியல் சுரப்பியின் கீழே சுரக்கும் இந்த ஹார்மோன், நாம் இருட்டில் இருக்கும்போது அதிகமாக உற்பத்தியாகிறது. வெளிச்சத்தில் இருக்கும்போது உற்பத்தி குறைந்துவிடுகிறது. அந்த ஹார்மோன் உதவியால்தான் இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கு சென்றுவிடுகிறோம். இந்த ஹார்மோன் நமது உடலில் ஆண்டிஆக்ஸிடண்ட் என்ற நோய் எதிர்ப்பு ஆற்றலை உற்பத்தி செய்கிறது. அதிலும் குறிப்பாக நமது உடலில் இயற்கையான நோய் எதிர்ப்பு தரும் ‘டி’ செல்களை உருவாக்குவதில் உதவி புரிகிறது.

sleeping in darklight

ஆழ்ந்த தூக்கம், பல நோய்களுக்கும், இருதய மற்றும் இரத்தக் கொதிப்பு பிரச்சனைகளுக்கும் அருமருந்து. இந்த மெலட்டோனின் பெண்களின் செக்ஸ் ஹார்மோனான ஈஸ்ட்ரோஜனை சமநிலைப்படுத்துகிறது. மெலட்டோனின் ஹார்மோன் பொதுவாக வயது அதிகரிக்க அதிகரிக்க குறையத் தொடங்கும். வயதானவர்கள் அதிகம் தூங்குவதில்லை. அதுவும் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வது மிகவும் குறைவு.

மருத்துவ உலகில் இந்த மெலட்டோனினை சூப்பர் மூலக்கூறு என்று புகழ்கின்றனர். காரணம், இன்று உலகை ஆட்டிப் படைத்து வரும் முக்கிய நோய்களில் ஒன்றான புற்றுநோய்க்கு அருமருந்து இந்த மெலட்டோனின். புற்றுநோய்க்கான சிகிச்சையில் இந்த ஹார்மோன் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் முக்கியமாக ஆண்களுக்கான இனப்பெருக்க உறுப்புகளில் ஒன்றான புரோஸ்டட்டில் புற்றுநோய், மார்பக புற்றுநோய், ஆண் விதையுறுப்பு புற்றுநோய், குடல் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மூளையில் உருவாகும் கட்டிகள் போன்றவைகளின் சிகிச்சைக்கு பெரிதும் உதவுகிறது.

sleeping with mobile light

இரவில் படுக்கை அறையில் தூங்குவதற்காக நாம் படுத்தபின் அரை மணிநேரத்திற்குள் மெலட்டோனின் சுரக்கத் தொடங்கிவிடும். இது உங்களை ஆழ்ந்த தூக்கத்திற்கு கொண்டு செல்லும். அப்போது பெட்ரூம் லைட் அல்லது முழுமையாக லைட் எரிந்தால், நமது கண்களில் உள்ள விழித்திரையில் (ரெட்டினா) உள்ள உணர்விகள் மூளையைத்  தூண்டி ஆழ்ந்த தூக்கம் போய், அரைகுறை தூக்கம் ஏற்படும். இதனால் மெலட்டோனின் உற்பத்தி குறைந்துவிடும். ஆக, இரவில் மின்விளக்கு வெளிச்சத்தில் தூங்கும்போது மெலட்டோனின் குறைந்துவிடும். இருட்டு அறையில் தூங்குவதால் மெலட்டோனின் உற்பத்தி அதிகரிக்கும்.

இப்போது செல்போன்கள், லேப்டாப்கள் இரவில் வெகுநேரம் பயன்படுத்துவது சாதாரணமாகிவிட்டது. குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை இப்போது இதுதான் லைஃப் ஸ்டைல். இரவில் வெகுநேரம் செல்போன்களை, லேப்டாப்களை பார்ப்பதால் அதிலிருந்து வரும் வெளிச்சம் நமது கண்களின்  விழித்திரையை பாதிக்கிறது. அவை வெளியிடும் மின்காந்த அலைகள் மூளை செல்களை பாதிக்கின்றன. இதனால் வெகுநேரம் தூங்க முடியாமல் புரண்டு புரண்டு படுத்துக்கொண்டிருக்க வேண்டியதாகிவிடுகிறது. அப்படியே தூங்கினாலும் இயற்கையான ஆழ்ந்த தூக்கம் வருவதில் சிரமம் ஏற்படுகிறது. அதுவும் இப்போது வரும் செல்போனில் உள்ள நீல நிற எல்இடி வெளிச்சம் மிக அதிகளவில் கண்களை பாதித்து தூக்கத்தை குறைத்துவிடுகிறது. இதனால் உடலில் மெலட்டோனின் அளவு மிகவும் குறைந்துவிடுகிறது. உடல் மிகவும் பலவீனமாகிவிடுவதால் இயற்கையான ‘டி’ செல்கள் உற்பத்தி குறைந்து புற்றுநோய்கள் உருவாக காரணமாக இருக்கிறது.

சமீபத்தில் நீல நிற எல்இடி லைட் வெளிச்சத்தில் இரவில் தூங்குபவர்கள், இதே வெளிச்சத்தை உமிழும் செல்போன்கள், லேப்டாப்கள் இரவில் பயன்படுத்துபவர்களுக்கு அதிக அளவில் மார்பக புற்றுநேய் மற்றும் புரோஸ்டட் புற்றுநோய் அதிகரித்திருப்பதாக மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதனால், திருவள்ளுவர் கூறியது போல ஒவ்வொரு நாளும் மறுபிறப்பு போல அமையும் தூக்கத்தை சுகமாக ஆழ்ந்து தூங்கி விழித்து எழுங்கள். செல்போன்களுடன் இரவைக் கழித்து புற்றுநோய்களின் கோரப் பிடியில் சிக்காமலிருக்க செல்போன்களை அணைத்து  விடுங்கள். தூக்கம் முழுமையாக தழுவட்டும். மனதுக்கும் தேக சுகத்துக்கும் ஆழ்ந்த தூக்கமே அருமருந்து.

 

நன்றி : எஸ்.செல்வராஜ் | நக்கீரன் இணையதளம்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *