மருத்துவக் கட்டுரை – கொலஸ்ட்ரால்


நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம்.

கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான மொத்த கொலஸ்ட்ராலில் 80 சதவிகிதம் கல்லீரலில் உற்பத்தியாகிறது. மீதமுள்ள 20 சதவிகிதம் உணவின்மூலம் கிடைக்கிறது. இவை இறைச்சி வகைகள், முட்டை, பால்வகை உணவுகளில் அதிகம் உள்ளது. கீரை, தாவர வகை உணவுகளில் இது கிடையாது.

உடல் உறுப்புகளை இயங்க வைக்கும் ஹார்மோன்கள், டீ.என்.ஏ. என்னும் மரபணு, செல்களின் சுவர் போன்றவற்றுக்கு கொலஸ்ட்ரால் தேவைப்படுகிறது. கொலஸ்ட்ரால் இல்லாவிட்டால் நம்முடைய மூளையும் இயங்காது!

இந்த கொலஸ்ட்ரால் இரத்தக் குழாய்களினுள் தானாக நீந்திச் செல்வதில்லை.அது வேறு சிலவற்றுடன் கலந்து நுண்ணிய அளவில் காணப்படுகிறது. அதை லைப்போபுரோட்டீன் ( Lipoprotein ) என்று அழைக்கிறோம். அதன் வெளிப்பகுதியில் புரோட்டீன் என்ற புரோதமும்.உள்ளே கொலஸ்ட் ரால் கொழுப்பும், ட்ரைகிளிசரைட் எனும் இன்னொரு வகையான கொழுப்பும் உள்ளன.உடலின் கொழுப்பில் பெரும்பாலானது ட்ரைகிளிசரைட் கொழுப்பாகும்.

நாம் கொழுப்பின் அளவைக் காண இரத்தப் பரிசோதனை செய்துகொள்ளும்போது இரண்டு முக்கிய வகையான லைப்போபுரோட் டீன்களின் அளவுகள் தரப்படுகிறது. அவை LDL என்றும் HDL என்றும் காணப்படும். இவற்றும் விரிவாக்கம் வருமாறு:

LDL – Low Density  Lipoprotein – இதில் கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகும். இதனால் இதை குறைந்த கன லைப்போபுரோட்டீன் என்று அழைக்கிறோம். இதுவே ” கெட்ட கொலஸ்ட்ரால் ” .இவை இரத்தக் குழாய்களின் சுவர்களில் படிந்து அவற்றை  தடிப்பாக்கிவிடுகின்றன. அதனால் அதன் குறுக்களவு குறைகிறது. அதனுள் செல்லும் இரத்தவோட்டம் தடைபடுகிறது. இவ்வாறு  இருதயத்துக்கு இரத்தம் கொண்டு செல்லும் குழாய்களில் இரத்தம் குறைந்தால் மாரடைப்பு உண்டாகிறது. மூளையில் உள்ள இரத்தக் குழாய் தடித்து இரத்த ஓட்டம் தடைபட்டால் பக்க வாதம் உண்டாகலாம்.

HDL – High Density Lipoprotein – இது நல்ல கொலஸ்ட்ரால் என்பது. இது இரத்தக் குழாய்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை அகற்ற உதவுகிறது.

VLDL – Very Low Density Lipoprotein – இது பெரிய அளவிலானது.இதில் அதிகமாக ட்ரைகிளிசரைட் கொழுப்பு இருக்கும். இவை இரத்தக் குழாய்களில் செல்லும்போது ஆங்காங்கே தேவையான பகுதியிலும்,தேவையற்ற இடத்திலும் கொலஸ்ட்ராலை படியச் செய்யும். இதுபோன்று தேவையில்லாத இடத்தில் அதிகம் படிந்தால் அது இரத்தக் குழாய்களின் உட்சுவரில் அடைப்பை உண்டுபண்ணிவிடும். இது மாதிரி அடைப்பு இருதயத்துக்கு இரத்தம் கொண்டுசெல்லும் கோரோனரி தமனியில் உண்டானால் மாரடைப்பு உண்டாகும். அதுபோன்று மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் தமனியில் அடைப்பு ஏற்பட்டால் பக்க வாதம் உண்டாகும்.

எல்லா இருதய நோய்களும் கொலஸ்ட்ரால் தொடர்புடையது அல்ல. ஆனால் உலக சுகாதார நிறுவனம் கோரோனரி தமனி நோய்களில்  மூன்றில் ஒரு பங்கு கொலஸ்ட்ரால் காரணம் என்று கூறுகிறது. இது முக்கியமானது. காரணம் இன்று உலகில் இருதயநோயால் உயிரிழப்பவர்கள்தான் முதல் நிலையில் உள்ளனர். ஒரு வருடத்தில் 17.5 மில்லியன் பேர்கள் இருதய நோயால் இறந்துபோகின்றனர் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இதுபோன்று ட்ரைகிளிசரைட் என்னும் கொழுப்பு நல்ல கொலஸ்ட்ரால் குறையும்போது உயர்கிறது. இது உயர்ந்தால் பக்கவாதம் உண்டாகும் ஆபத்து இரு மடங்காகக் கூடுகிறது.

கொழுப்புகளின் அளவை நாம் வருடத்தில் ஒரு முறையாவது  இரத்தப் பரிசோதனையின்மூலம் அறிந்துகொள்ள வேண்டும்

இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவை நிர்ணயம் செய்வது வாழ்க்கை முறையும் மரபணுவும் ஆகும்.நாம் மரபணுவை மாற்றமுடியாது. ஆனால் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள முடியும்.

உடற்பயிற்சி கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்தாலும் உணவுக் கட்டுப்பாட்டைப்போன்று அமையாது. இந்த இரண்டையும் சேர்ந்து கடைப்பிடித்தால் நல்ல கட்டுப்பாடு கிடைக்கும். குறிப்பாக உடல் பருமன் கூடியிருந்தால் அதைக் குறைப்பது நல்ல பயன் தரும். காரணம் உடல் எடை குறைந்தால் கெட்ட கொலஸ்ட்டரல் அளவு குறையும். அது குறைந்தால் ட்ரைகிளிசரைட் அளவு குறையும்.

ஆனால் உடல் எடையைக் குறைப்பது அவ்வளவு எளிதல்ல. அதுபோல் குறைத்துவிட்ட எடையை கட்டுக்குள் வைத்திருப்பதும் சிரமமே. ஆதலால் உணவுக்கட்டுப்பாடுதான் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் எளிமையான சிறந்த வழி.

உணவுப் பழக்கம் எவ்வாறு கொலஸ்ட்டராலின் அளவைக் குறைக்கிறது என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடந்துகொண்டே உள்ளன. அதன்மூலம் சில திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன.

கொழுப்பு வகைகள் நிறைந்துள்ள இறைச்சி வகைகளைக் குறைக்க வேண்டும் என்றுதான் இதுவரை நம்பினோம்.  ஆனால் அதுகூட தவறு என்பது இப்போது தெரியவந்துள்ளது.

நாம் உண்ணும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவு வகைகளால் இரத்தத்தில் அதன் அளவு உயர்வது மிகக் குறைவே என்று கண்டுபிடித்துள்ளனர்.அதற்கு மாறாக கல்லீரலிருந்து அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் கொலஸ்ட்ரால்தான் காரணம் என்று கருதப்படுகிறது. அதே வேளையில் அங்கு இப்படி அதிகம் உற்பத்தி ஆவதும் நாம் உண்ணும் உணவு வகையைப் பொருத்துள்ளது என்பதும் இப்போது அறியப்பட்டுள்ளது. ஆனால் அது நாம் முன்பு கூறிய கொழுப்பு நிறைந்த இறைச்சி வகைகளால் அல்ல.  உண்மையான குற்றவாளிகள் Saturated and trans fats என்னும் கொழுப்புகள்தான்.இவை சிவப்பு இறைச்சியில் அதிகம் உள்ளவை.  அதோடு மாவு சத்து நிறைந்த உணவுகள் இனிப்பான உணவுகள்,பதனிடப்பட்ட உணவுகளிலும் உள்ளன.

கொழுப்புகள் நிறைந்த இறைச்சி வகைகளை உண்ணக்கூடாது என்று நாம் அளவுக்கு அதிகமாக மாவுச்சத்து உள்ள உணவு வகைகளை உட்கொள்வதால் கல்லீரல் அதிகமான கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கவிடுகிறது. கொழுப்பைக் குறைத்தாலும் அதன் அளவு அதிகமாகவே இருப்பதற்கு இதுவே காரணம் . இதுபோன்று கொழுப்பைக் குறைத்துக்கொண்டு, ரொட்டி, உருளைக்கிழங்கு, சீனி, சோறு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுவகைகளை நிறைய உட்கொண்டால் அவை கெட்ட கொழுப்பையும் , ட்ரைகிளிசரைட்டையும  கூட்டியும் நல்ல கொழுப்பை குறைத்தும் விடுகிறது.

இதற்கிடையில் unsaturated fats என்ற கொழுப்பு வகைகளும் உள்ளன. இவை சாதாரண சீதோஷ்ணத்தில் நீராக இருப்பவை. ஆலிவ் எண்ணெய் , கொழுப்பு மீன்கள், கொட்டைகள் போன்றவற்றில் இது உள்ளது. இது கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது. இதுபோன்று உணவில் அதிகம் காய்கறிகள், தானியங்கள், நார்ச்சத்து போன்றவற்றை சேர்த்துக்கொள்பவர்களுக்கு கொலஸ்ட்ராலின் அளவு குறைவாகவே இருக்கும்.

 

 

நன்றி : டாக்டர் ஜி. ஜான்சன் | திண்ணை

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *