“நான் நடித்த இரட்டை வேடப்படங்களில் எனக்குப் பிடித்த காட்சி’’| நடிகர் எம்.ஜி.ஆர்


வாசகர்களின் கேள்விகள் – எம்.ஜி.ஆர் பதில்கள்!

கேள்வி : ஒரு மொழியைக் கட்டாயப்படுத்தினால் குழப்பம் நேரிடும் என்கிறார் அறிஞர். தமிழ்நாட்டில் தமிழின் நிலையும் அப்படித்தானே?

எம்.ஜி.ஆர் பதில் : பெற்ற தாயை அம்மா என்று கூப்பிட வேண்டும் என்று சொன்னால் அது கட்டாயப்படுத்துவது என்றா பொருள்படும்!

தன்னைப் பெறாது ஆதிக்கம் செலுத்தி அழிக்க நினைக்கின்ற யாரோ ஒருத்தியை “இவர் தான் உன் அம்மா’’ என்று கூறி, ‘அம்மா’ என்று அழைக்கவும் சொன்னால் அதுவன்றோ கட்டாயப்படுத்துவதாகப் பொருள்படும்.

கேள்வி : தாங்கள் நடித்த படங்களில் அதிகப்படங்களை ‘டைரக்ட்’ செய்த டைரக்டர் யார்?

எம்.ஜி.ஆர்: எனது அன்புச்சகோதரர் சாண்டோ சின்னப்பா தேவர் அவர்களின் இளவலும், என் தம்பியுமான டைரக்டர் திருமுகம் அவர்கள்.

கேள்வி : நடிகர்-நடிகை இவர்களுக்கு மன்றங்கள் தேவையா?

எம்.ஜி.ஆர் : எந்த நடிகரும் அல்லது நடிகையும் தன் விருப்பப்படி, தன் வசதியை வைத்து நீண்ட காலத்திற்கு மன்றங்களை நடத்தவே முடியாது. இதை உணர்ந்து விட்டால் உங்களைப் போன்ற நண்பர்களுக்குச் சந்தேகமே ஏற்படாது.

கேள்வி : சிவாஜி கணேசன் ரசிகர்களுக்கு நீங்கள் தரும் அறிவுரை என்ன?

எம்.ஜி.ஆர் : உங்கள் கேள்வி தவறான முகவரிக்கு அனுப்பப் பட்டிருக்கிறது.

கேள்வி : இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்துள்ள படங்களில் தங்களுக்குப் பிடித்த படம், காட்சி எது?

எம்.ஜி.ஆர் : ‘குடியிருந்த கோயில்’ படம் மிகவும் பிடித்தது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் முரடனான தம்பி சாப்பிட்டுவிட்டு, அப்பாவியான அண்ணன் பணம் கொடுக்கும் கட்டம் எனக்குப் பிடித்த காட்சிகளில் ஒன்று.

கேள்வி : வாழ்க்கையில் முன்னேற எது தேவை?

எம்.ஜி.ஆர் : தன்னம்பிக்கை, சலியா உழைப்பு, தோல்வியைக் கண்டு கலங்காத நெஞ்சம், ஏமாற்றுகிறவர்களையும் மன்னித்துவிட்டுச் செயலாற்றும் துணிவு.

கேள்வி : ‘அடிமைப் பெண்’ படத்தை நீங்கள் இயக்கியிருந்தால் ‘நாடோடி மன்னன்’ படம் போல வெற்றி அடைந்திருக்கும் அல்லவா?

எம்.ஜி.ஆர் : ‘அடிமைப்பெண்’  நாடோடி மன்னனை விட எல்லா வகையிலும் வெற்றி பெற்ற படம் என்பதை அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

  • 9.10.1970 ல் வெளிவந்த ‘தினமணி’ கதிரில் வாசகர்கள் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர் அளித்த பதில்கள்.

 

நன்றி : thaaii.comLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *