இசைதான் எனது வளர்ச்சிக்கு ஏணி | கௌதம் மேனனின் நேர்காணல்


புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இயக்குநர், வசனகர்த்தா, தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட கௌதம் வாசுதேவ் மேனனின் 20 ஆண்டு திரையுலகப் பயணத்தைக் கொண்டாடும் வகையில் ‘மியூசிக்கல் கன்வர்சேஷன்ஸ்’ என்னும் இசை நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 2) நடைபெறுகிறது.

அதனையொட்டி நேற்று முன்தினம் திரு கௌதம் மேனனைச் சந்தித்து தமிழ் முரசு நேர்காணல் கண்டது.
“இசை என்பது என்னை நிறைய விஷயங்களிலிருந்து பாதுகாத்திருக்கிறது. என்னை முன்னுக்குக் கொண்டு சென்றுள்ளது. அதற்கு நன்றிசொல்லும் முயற்சிதான் இது. 20 ஆண்டுகளில், என் படங்களுக்கு இசைதான் உயிர் கொடுத்துள்ளது எனத் தோன்றுகிறது,” என்றார் திரு கௌதம்.

“இந்த இசையே ஏராளமான ரசிகர்களை ஈர்த்திருக்கிறது. ‘மின்னலே’ திரைப்படத்தில் ‘வசீகரா’ பாடல் இல்லையென்றால் அந்த அளவிற்கு  வரவேற்பு இருக்குமா என்று எனக்குத் தெரியாது,” என்று மேலும் கூறினார் அவர்.

எஸ்பிளனேட் அரங்கில் இன்று நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு ‘ஆனந்த்யா எண்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனமும் ‘டி ஐடியாஸ்’ நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்கின்றன.

மின்னியல் இசைக்கருவிகள் பயன்படுத்தப்படாத ‘அன்பிளக்டு’ (unplugged) இசை விருந்தாக அமையும் என்றும் பாடப்படும் பாடல்களுக்குப் பின்னால் உள்ள ஆக்கபூர்வமான காரணங்களும் கதைகளும் இந்நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படும் என்றும் தெரிவித்தார் ஆனந்த்யா நிறுவனத்தின் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் பிரபல திரைப்பட ஒளிப்பதிவாளருமான அரவிந்த் கிருஷ்ணா.

“வசீகரா பாடலைத் தயாரிக்கும்போது பாம்பே ஜெயஸ்ரீ பாடினால் நல்லா இருக்கும் என்று ஹாரிஸ் ஜெயராஜ் என்னிடம் சொன்னார். அவர் என் படத்திற்கு வருவாங்களா என்று அவரிடம் கேட்டேன். அவர் வந்தார். அதே மாதிரி இந்த நிகழ்ச்சிக்கும் கூப்பிடும்போது மீண்டும் அவர் வருவாரா என்ற சந்தேகம் வந்தது,”

“அவரை கேட்ட உடனே சம்மதித்தார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வருவது முக்கியம் என்று தோன்றுகிறது. அவர் இந்த மாதிரி ஒரு‘அன்பிளக்டு’ நிகழ்ச்சிக்கு, என் படங்களுக்குப் பாடிய 4, 5 பாடல்களை பாடவிருக்கிறார்,” என்றார் திரு கௌதம்.

பாம்பே ஜெயஸ்ரீ சித் ஸ்ரீராம், கார்த்திக், சாஷா திருப்பதி, 14 வயது இசைத்திறனாளர் லிடியன் நாதசுவரம் போன்ற பிரபல இசைக்கலைஞர்கள் ஒரே மேடையில் சங்கமிக்கவுள்ளனர்.

2001ஆம் ஆண்டில் இதே பிப்ரவரி 2ல் கெளதம் மேனன் இயக்கிய ‘மின்னலே’ திரைப்படம் வெளியானதால் இந்த தினம் மேலும் சிறப்பு பெறுகிறது என்று குறிப்பிட்டார் திரு கௌதம்.

“இந்த நிகழ்ச்சி சிறந்த முறையில் நடைபெறும் என்ற உறுதியுடன் இருக்கிறேன். பல திறன்மிக்க கலைஞர்கள் இதில் பங்கேற்கின்றனர். பார்வையாளர்களுடன் நானும் ஒரு பார்வையாளராக அமர்ந்து இந்நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்காகவே வந்திருக்கிறேன்,” என்றார் திரு கௌதம்.

 

நன்றி : எஸ். வெங்கடேஷ்வரன் | தமிழ் முரசுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *