சீனியர் சூப்பர் சிங்கர் பராவுடன் ஒரு செவ்வி | கயல்விழி


Sep 30 ஞாயிறு அன்று விலா கருணா இல்லமும் TET HD யும் இணைந்து வழங்கிய “சந்தியாராகம்” பாடகர் போட்டியில் பங்கு பற்றி கோல்டன் சூப்பர் சிங்கர் 2018 பட்டத்தைப் பெற்றுக் கொண்ட பரா வீரகத்தியாரை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு நேர்காணல் ஒன்றை வணக்கம் லண்டன் சார்பாக மேற்கொண்டேன்.

பலதரப்பட்ட கேள்விகளை அவரிடம் தொடுத்த போது வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடனும்  பிடித்த ஒரு விடயத்தை சாதித்த பெருமையுடனும் உற்சாகமாகப் பதிலளித்தார்.

“இனி வரும் காலங்களிலும் உங்கள் பாட்டுத் திறமையை வெளிக் கொண்டு வரும் விதமாக உங்கள் களம் அமைந்திருக்குமா” என அவரிடம்  கேட்ட போது, தயங்காது உடனும்,

“நிச்சயமாக… ஒய்வு பெற்று வீட்டில் இருக்கும் எனக்கு என் உலகமே இந்த இசை தான். இந்த சங்கீதம் தான் என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

55 வயதுக்கு மேற்பட்டோருக்காக நடாத்தப்பட்ட இந்த போட்டியில் என்னாலும் பாட முடியுமென பயிற்சிகள் எடுத்து மேடை ஏறி வெற்றி பெற்ற பராவிடம் இருந்த ஆர்வத்தைப் பார்த்ததும் மேலும் ஓர் கேள்வி கேட்கத்  தூண்டியது.

“சந்தியாராகம் பாடல் போட்டி வயது மூத்தோருக்கு மட்டுமே நடாத்தப்பட்டதை எந்த கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?”

அதற்கு அவர்  பதிலளிக்கையில், “எமக்கு வயது போயிற்றுது… வாழ்க்கை போயிற்றுது… என யாரும் நினைக்க வேண்டாம். அதன் பின்னரும் கூட எங்களுக்கு உற்சாகமான, சந்தோஷமான வாழ்க்கை இருக்கிறது என இந்த சந்தியாராகம் நிரூபித்திருக்கிறது” என்றார்.

மேலும், “நீங்கள் புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்ந்து வரும் நிலையில் கிடைத்த இந்த வெற்றியை எவ்வாறு உணர்கின்றீர்கள்? எனவும் கேட் டேன்.

அதற்கு அவர், “மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன். கனடாவில் வேலைப்பளு, மன உளைச்சல்கள் மத்தியில் “சந்தியாராகம்” நிகழ்ச்சி பல பேருக்கு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கிறது. பாடகராகிய எங்களுக்கும் வாழ்க்கையில் ஓர் திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. பெருமையைக் கொடுத்திருக்கிறது”

வசனத்துக்கு வசனம் கதைக்கும் போது “சந்தியாராம்” என அடிக்கடி கூறும் பராவிடம் ஆச்சரியமாக, “சந்தியாராகம் பாடகர் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் எப்படி வந்தது? என ஒரு கேள்வியை எழுப்பினேன்.

“கடந்த வருடம் நடந்த இதே நிகழ்ச்சியைப் பார்த்த போதே இந்த ஆர்வம் வந்தது. பின்னர் ஒரு நாள் திருமதி இந்திரானியால் நடாத்தப்படுகின்ற விலா கருணா மூத்தோர் இல்லத்தை பார்வையிடும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அவர் அந்த மூத்தோருக்கு ஆற்றும் சேவையைப் பார்த்து மனம் நெகிழ்ந்து விட்டேன். அவ்வாறு ஒரு மூத்தோர் இல்லத்தையும் நடாத்திக் கொண்டு இன்னொரு பக்கம் மூத்தோருக்காக முறைப்படி இசைப் பயிற்சிகள் கொடுத்து “சந்தியாராகம்” எனும் களத்தில் அவர்களை மேடையேற்றி பங்கு பெற வைக்கச் செய்யும் அவரின் முயற்சிகளைப் பார்த்த போது அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அப்போது எனக்கும் அந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமும் ஆசையும் ஏற்பட்டது. இன்று வெற்றி பெற்று நிற்கும்  நிலையில் அவருக்கு என் நன்றிகளை சொல்ல விரும்புகிறேன்.” என உணர்வு பொங்க பதிலளித்தார்.

அப்பொழுது தான் மின்னலென ஒரு விஷயம் என் மனதில் வந்து போனது. அதாவது போட்டியில் கலந்து வெற்றி பெற்ற பணப்பரிசை விலா கருணா மூத்தோர் இல்லத்துக்கே நன்கொடையாக வழங்கி இருந்தார். அதைக் குறிப்பிட்டுக் கேட்கும் போது,

“நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல திருமதி இந்திராணி மூத்தோர் இல்லத்துக்கு ஆற்றும் சேவைகளைப் பார்த்த போது அந்த கணமே முடிவு செய்தேன் இதில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பணப்பரிசை நன்கொடையாக விலா கருணா இல்லத்துக்கே கொடுக்க வேண்டும் என்று. அதன்படி கொடுக்க வைத்த இறைவனுக்கு நன்றி” என நன்றி கலந்த குரலில் கூறினார்.

இரண்டு சுற்றுக்களிலும் அருமையாகப் பாடி வெற்றி பெற்று எல்லோரினதும் பாராட்டுக்களைப் பெற்ற பராவின் குரல் வளம் அன்று எல்லோராலும் பேசப்பட்டது நினைவில் வர, மேலும் ஒரு கேள்வியைத் தொடுத்தேன்.

“உங்கள் குரலை வளம்படுத்தும் விதமாக ஏதாவது பயிற்சிகள் எடுத்தீர்களா?”

“நிச்சயமாக… குரல்வள பயிற்சி தந்த Dr. வரகுணன் அவர்களையும், பைரவி இசைக் கல்லூரி பயிற்சியாளர் ஜெயச்சந்திரன் மாஸ்டர் அவர்களையும் இங்கு நான் குறிப்பிட வேண்டும். ஏனெனில் எங்கள் வயதுக்கு அவர்கள் மிகவும் பொறுமையாகவும் பொறுப்போடும்  தந்த பயிற்சியால் தான் இன்று நான் இவ்வளவு தூரம் பாடி வெல்ல முடிந்தது. இந்த சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

இறுதியாக ஒரு கேள்வியை பராவிடம் கேட்டு என் நேர்காணலை முடிவுக்கு கொண்டு வந்தேன்.

“உங்கள் இந்த வெற்றிக்கு உங்கள் குடும்பத்தின் ஆதரவு எவ்வாறு அமைந்திருந்தது?”

“ஆதரவு நிறையவே இருந்தது. குறிப்பிட்டு சொல்லவேண்டுமாயின், என் மனைவிக்கு ஓவியம் வரைவதில் தான் அதிக ஈடுபாடு இருக்கிறது ஆனாலும் இசைக்கு நல்ல ஒரு ரசிகை அந்தவகையில் ஆரம்பம் முதல் போட்டி நிறைவு பெறும் வரையிலும் எனக்கு பக்க பலமாக இருந்து என் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். அதே போல் என் பிள்ளைகளும் எனக்கு தந்த ஊக்கமும் ஆதரவும் மேலும் என்னை நம்பிக்கையுடன்  பங்கு பற்றி வெற்றி பெற வைத்தது”.

அருமையான ஒரு செவ்வியை நிறைவு செய்யும் தருணத்தில் சில கருத்துக்கள் என் மனதிலே தோன்றியது.

தங்களால் முடியும் என நினைக்கும் விடயங்களை நிறைவேற்ற வயதுக்கு தடையோ எல்லையோ இல்லை என்பது தெளிவாக புரிகிறது. தாயகத்தில் பழக்கப்பட்ட வாழ்க்கை முறையை விட்டு தங்கள் பிள்ளைகளுக்காக வெளிநாடு வந்து அந்த நாட்டு வாழ்க்கை முறைக்கு தங்களை மாற்றும் போது ஏற்படுகின்ற இன்னல்களை, இடையூறுகளை தாங்கி பின்பு ஆதரவு இல்லாமல் தவிக்கும் எத்தனையோ மூத்தோர்கள் இருக்கின்றனர். அதே போல் கனேடிய மண்ணிலும் மன அழுத்தத்தாலும் மனப் போராடங்களாலும் தவிக்கும் அப்பாக்கள் அம்மாக்களை கண் முன்னே பார்க்கின்றோம். இவர்களுக்கெல்லாம் நிழல் தரும் குடையாக “விலா கருணா” போன்ற இல்லங்கள் இருப்பது ஓர் வரப்பிரசாதமே. அது மட்டுமில்லாது “சந்தியாராகம்” போன்ற போட்டிக்களம் மூலம் தங்கள் மன அழுத்தங்களை எல்லாம் மறந்து குழந்தைகள் போன்று ஆடலும் பாடலுமாக குதூகலித்து தங்கள் விருப்பத்தை சாதிக்கும் இவர்கள் மற்றவர்களுக்கும் முன்னுதாரணமாக நிச்சயம் இருப்பார்கள்.

 

– வணக்கம் இலண்டனுக்காக  கனடாவிலிருந்து கயல்விழி –Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *