முதலாம் இசபெல்லா அரசி (கி.பி.1451 – கி.பி.1504)


அட்லாண்டிக்கைக் கடந்து பயணம் செய்வதற்கு கிறிஸ்டோபர் கொலம்பசுக்குக பணவுதவியளித்த அரசியாகவே காஸ்டீல் பகுதியைச் சேர்ந்த முதலாம் இசபெல்லா அரசியைப் பற்றி இன்று பலருக்குத் தெரியும். அவர் திறமையும், ஆற்றலுமிக்க அரசியாவார். அவர் செய்த முக்கிய முடிவுகள் ஸ்பெயினையும் லத்தீன் அமெரிக்காவையும் பல நூற்றாண்டுகளாகப் பாதித்தன. அவை இன்று பல கோடி மக்களையும், மறைமுகமாகப் பாதித்துள்ளன.

அவர் தமது முக்கியத் திட்டங்களைப் பற்றி தம்மைப் போன்று அறிவாற்றலும் திறமையுமுள்ள தம் கணவரான ரகான் பகுதியைச் சேர்ந்த பெர்டினாண்டைக் கலந்து பேசியே முடிவெடுத்தார். அவர் ஒத்துழைப்புடனே தான் அவற்றைச் செயல்படுத்தினார். ஆகவே அவர்கள் இருவரையும் ஒன்றாகவே இந்நூலில் பார்ப்பது பொருந்தும். ஆயினும், இக்கட்டுரையின் தலைப்பில் இசபெல்லாவின் பெயரே இருக்கின்றது. இருவரின் பெயர்களும் இல்லை. எனவே, பல முக்கிய முடிவுகளில் அரசியின் கருத்துரைகளே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

1451 ஆம் ஆண்டில் இன்றைய ஸ்பெயினின் ஒரு பகுதியான காஸ்டீல் அரசில் மாட்ரிகல் நகரில் இசபெல்லா பிறந்தார். அவர் கடுமையான சமயப் பயிற்சி பெற்றார். அதனால் சமயப் பற்றுள்ள கத்தோலிக்கராக வளர்ந்தார். அவருடைய சகோதரரான நான்காம் ஹென்றி 1454 முதல் காஸ்டீலின் அரசராக இருந்தார். 1474 இல் அவர் இறந்தார். அப்போது ஸ்பெயின் அரசு இல்லை. இன்றைய ஸ்பெயின் நிலப்பரப்பு நான்கு முடியரசுகளாகப் பிரிந்திருந்தது. காஸ்டீல் அவற்றுள் மிகப் பெரியது. ஆரகான் இன்றைய ஸ்பெயின் வட கிழக்குப் பகுதி கிரானடா தெற்கிலும் நவார் வடக்கிலும் இருந்தன.

1460களின் இறுதிப் பகுதிகளில் காஸ்டீல் அரசின் வாரிசாக இருந்தார். ஆகவே பல இளவரசர்கள் அவரை மணம்புரிய விரும்பினர். அவருடைய சகோதரர் நான்காம் ஹென்றி அவர் போர்ச்சுகள்ல மன்னரை மணக்க வேண்டுமென்று விரும்பினார். ஆயினும் 1469இல் இசபெல்லா தம் 18 ஆம் வயதில் ஹென்றி மன்னரின் எதிர்ப்பையும் பாராமல் ஆரகான் அரசின் வாரிசான பெர்டினாண்டை மணந்தார்.

இசபெல்லா தமக்குப் பணியாததைக் கண்டு சினங்கொண்ட ஹென்றி தம் மகளாகிய ஜூவானாவைத் தமக்கு வாரிசாக நியமித்தார். ஆயினும், 1474இல் ஹென்றி இறந்ததும், இசபெல்லா காஸ்டீல் அரசுக்கு உரிமை கொண்டாடினார். ஜூவானாவின் ஆதரவாளர்கள் இதை ஏற்க மறுத்தனர். ஆகவே உள்நாட்டுப் போர் மூண்டது. 1479இல் பிப்ரவரியில் இசபெல்லாவின் படைகள் வெற்றி பெற்றன. அதே ஆண்டில் ஆரகான் அரசர் 2 ஆம் ஜான் இறந்தார். பெர்டினாண்டு ஆரகான் அரசரானார். அதன் பிறகு பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினின் பெரும்பகுதியை ஆண்டனர்.

ஆரகான், காஸ்டீல் ஆகிய அரசுகளும் அவற்றின் அரசாங்க நிறுவனங்களும் தனித்தனியாகவே இருந்த போதிலும், நடைமுறையில் பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஒன்று சேர்ந்தே எல்லாவற்றையும் தீர்மானித்தனர். தம்மாலியன்ற வரையில் ஸ்பெயினின் இணை அரசர்களாகச் செயலாற்றினர். அவர்களுடைய 25 ஆண்டு இணை ஆட்சி முழுவதும் ஒரு வலிமைமிக்க முடியாட்சியின் கீழுள்ள ஒருங்கிணைந்த ஸ்பானிய அரசை நிறுவுவதே அவர்களது அடிப்படைக் கொள்கையாக இருந்தது. கிரானடா மட்டும் இன்னம் ஐபீரியத் தீபகற்பத்தில் முஸ்லிம் ஆட்சியிலிருந்தது.

அதைப் பிடிப்பதே அவர்களுடைய முதல் திட்டமாக இருந்தது. 1481 இல் போர் தொடங்கியது. ஜனவரி 1492 இல் அது முடிவடைந்தது. பெர்டினாண்டும், இசபெல்லாவும் முற்றிலும் வெற்றி பெற்றனர். கிரானடா பிடிபட்டதும், ஸ்பெயின் ஏறக்குறைய இன்றுள்ள எல்லைப் பரப்பைப் பெற்றது. (இசபெல்லா இறந்தபின், 1512இல் பெர்டினாண்டு சிறிய அரசான நவாரைக் கைப்பற்றினார்.)

பெர்டினாண்டும், இசபெல்லாவும் தமது ஆட்சியின் தொடக்கத்திலேயே ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்தை நிறுவினர். அம்மன்றம் ஒரு சமய நீதிமன்றமாகும். அது நீதிபதி, சான்று நடுவர், குற்றஞ்சாட்டும் வழக்குரைஞர், புலனாயும் காவலர் ஆகியோரின் அதிகாரங்களை ஒருங்கே பெற்றிருந்தது. அது கொடிய தண்டனைகளை வழங்கி, அநீதியான நடைமுறைகளைப் பயன்படுத்தும் மன்றமெனப் பெயர் பெற்றிருந்தது.

குற்றம் சாட்டப் பெற்றோர் அதை மறுத்து வாதாட வாய்ப்புப் பெறவில்லை. அவர்களுக்கு எதிரான சான்றுகள் அனைத்தும், அவர்களைக் குற்றம் சாட்டுவோரின் பெயர்கள்கூட அவர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை. தமக்கு எதிரான குற்றச்சாட்டினை மறுத்தோர் அவற்றை ஏற்கும்வரை கொடிய சித்திரவதைக்குள்ளாயினர். ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்தின்முதல் 25 ஆண்டுகளில் மிகக் குறைந்த மதிப்பீட்டின்படி 2000 பேர் கம்பத்தில் கட்டப்பட்டு எரிக்கப்பட்டனர். அதைப் போல் பன்மடங்கு அதிகமான தொகையினர் குறைந்த தண்டனை பெற்றனர்.

தோமாஸ் தெ தோர்குவமாதா என்னும் சமய வெறியரான ஒரு துறவி ஸ்பானிய கடும் விசாரணை மன்றத்திற்கு தலைவராக இருந்தார். அவர் இசபெல்லாவின் தனிச் சமய அறிவுரையாளர். கடும் விசாரணை மன்றம் போப்பாண்டவரின் இசைவு பெற்றிருந்த போதிலும், அது ஸ்பெயின் அரசர்களின் கட்டுப்பாட்டுக்கு அடங்கிச் செயலாற்றியது.

சமய ஏற்பை நிலை நாட்டுவதற்காகவும், அரசர்களுக்கு எதிரான கிளர்ச்சியை ஒடுக்குவதற்காகவும் கடும் விசாரணை மன்றம் பயன்பட்டது. இங்கிலாந்தில் நிலமானியப் பிரபுக்கள் அரசரின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துவதற்குப் போதிய ஆற்றல் பெற்றிருந்தனர். ஸ்பானிய பிரபுக்களும் ஒரு காலத்தில் ஆற்றலுள்ளவர்களாக இருந்தனர்.

ஆயினும், ஸ்பெயின் அரசர்கள் தம்மை எதிர்த்த நிலமானியப் பிரபுக்களை அடக்குவதற்கு கடும் விசாரணை மன்றத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தினர். ஆகவே, அவர்கள் அதிகாரம் குவிந்த, வரையிறந்த ஒரு முடியாட்சியை நிறுவ முடிந்தது. அவர்கள் ஸ்பானிய மதக் குருக்களை கட்டுப்படுத்துவதற்கும் அம்மன்றத்தைப் பயன்படுத்தினர்.

சமயத்தை விட்டுப் பிரிந்தவர்களாகக் கருதப்பட்டவர்களை குறிப்பாக கத்தோலிக்க மறையைத் தழுவி, பிறகு, இரகசியமாகத் தம் முந்திய மதத்தையே பின்பற்றி வந்த யூதரையும், முஸ்லிம்களையும் தண்டிப்பது கடும் விசாரணை மன்றத்தின் முக்கிய இலக்காக இருந்தது.

தொடக்கத்தில் கடும் விசாரணை மன்றம், தம் சமயத்தைப் பின்பற்றி வந்த யூதர்களை தண்டிக்கவில்லை. ஆயினும், 1492இல் சமய வெறியரான தோமாஸ் தெ தோர்குவமாதா வலியுறுத்தியதன் விளைவாக, பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினிலுள்ள யூதர்கள் அனைவரும் கிறிஸ்தவ மறையைத் தழுவ வேண்டும், இல்லையெனில் நான்கு மாதங்களுக்குள் தம் சொத்துக்களை விட்டுவிட்டு, நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று ஆணை பிறப்பித்தனர்.

கிரானடா சரணடைந்த போது, கையொப்பமிடப் பெற்ற உடன்படிக்கையின்படி, ஸ்பெயினில் வாழும் முஸ்லிம்கள் தம் சமயத்தைப் பின்பற்றும் உரிமை பெற்றனர். ஆனால், ஸ்பெயின் அரசாங்கம் விரைவில் இவ்வொப்பந்தத்தை மீறியது. ஆகவே, முஸ்லிம்கள் புரட்சி செய்தனர்.

ஆனால், அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர். 10ஆண்டுகளுக்கு முன் யூதர்களுக்கு அளிக்கப்பட்ட அதே தேர்வுரிமை இப்போது 1502இல் முஸ்லிம்களுக்கும் கொடுக்கப்பெற்றது. அதாவது ஸ்பெயினில் வாழும் முஸ்லிம்கள் கிறிஸ்துவ மதத்தைத் தழுவ வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இசபெல்லா சமயப் பற்றுள்ள கத்தோலிக்கராக இருந்த போதிலும், அவருடைய வைதீகப் பற்று அவர் ஸ்பெயின் நாட்டின் மீது கொண்டிருந்த பற்றைக் குறைத்து விடவில்லை.

ஸ்பானிய கத்தோலிக்க திருச்சபையில் போப்பாண்டவர் கட்டுப்பாட்டைக் குறைத்து, ஸ்பெயின் முடியரசின் அதிகாரத்தை வளர்ப்பதற்காக இசபெல்லாவும், பெர்டினாண்டும் பெரிதும் முயன்று வெற்றி பெற்றனர். 16 ஆம் நூற்றாண்டில் எதிர்ப்புச் சமய சீர்திருத்தம் பரவாவதற்கு இது ஒரு காரணமாகும்.

இசபெல்லாவின் ஆட்சியில் நிகழ்ந்த மிகவும் முக்கியமான நிகழ்ச்சி கிறிஸ்டோபர் கொலம்பஸ் புதிய உலகைக் கண்டுபிடித்ததுதான். அது 1492 ஆம் ஆண்டில் நடைபெற்றது. காஸ்டீல் அரசு கொலம்பசின் பயணத்திற்கு உதவியது. (அப்பயணத்திற்காக இசபெல்லா தம் நகைகளை அடகு வைத்தார் என்பது உண்மையன்று).

1504 இல் இசபெல்லா இறந்தார். அவர் தம் வாழ்நாளில் ஒரு புதல்வனையும், நான்கு புதல்விகளையும் பெற்றார். 1497இல் ஜூவான் எனும் மகன் இறந்தான். புதல்வியருள் புகழ் பெற்றவர் ஜூவானா. பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஜூவானாவை (எழில்மிகு) முதலாம் பிலிப்புக்கு மணமுடித்து வைத்தனர். பிலிப் ஆஸ்திரிய ஹாப்ஸ்பர்க் பேரரசரின் மகன். அவர் பர்கண்டி அரசின் வாரிசாகவும் இருந்தார்.

இந்த வம்ச வழி திருமணத்தின் பயனாக இசபெல்லாவின் பேரரான ஐந்தாம் சார்லஸ் பேரரசர் ஐரோப்பிய வரலாற்றில் மிகப் பெரிய பேரரசுகளுள் ஒன்றை மரபுரிமையாகப் பெற்றார். அவர் புனித ரோமானியப் பேரரசராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் அக்கால ஐரோப்பிய அரசர்களுள் செல்வமும், அதிகாரமுமிக்கவராகத் திகழ்ந்தார். ஸ்பெயின், ஜெர்மனி, ஹாலந்து, பெல்ஜியம், ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து, இத்தாலியின் பெரும்பகுதி, பிரான்சின் சில பகுதிகள், செக்கோஸ்லாவிய, போலந்து, ஹங்கேரி, யூகோஸ்லாவியா இன்னும் மேற்கு நாடுகளில் பெரும்பகுதி ஆகியவற்றை அவர் நேராகவோ, பெயரளவிலோ ஆண்டு வந்தார். ஐந்தாம் சார்லசும் அவருடைய மகன் 2 ஆம் பிலிப்பும் சமயப்பற்றுள்ள கத்தோலிக்கர்கள்.

அவர்கள் வட ஐரோப்பிய எதிர்ப்பு சமய அரசுகளுடன் போர் புரிவதற்குப் புதிய உலகச் செல்வத்தைப் பயன்படுத்தினர். இவ்வாறாக, பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஏற்பாடு செய்த வம்சாவழித் திருமணம் அவர்கள் இறந்த பிறகு ஐரோப்பிய வரலாற்றை ஒரு நூற்றாண்டளவாகப் பாதித்தது. பெர்டினாண்டு, இசபெல்லா ஆகியோரின் சாதனைகளையும் அவர்களது ஆட்சியின் விளைவுகளையும் இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

அவர்கள் தம் கூட்டு முயற்சியால் ஒன்றுபட்ட ஸ்பெயின் அரசை உருவாக்கினர். அதே எல்லைகளுடன் ஸ்பெயின் கடந்த 5 நூற்றாண்டுகளாக இருந்து வருகின்றது. அவர்கள் இருவரும் ஸ்பெயினில் அதிகாரம் குவிந்த, வரையிறந்த முடியாட்சியை நிறுவினர். அவர்கள் முஸ்லிம்களையும், யூதர்களையும், வெளியேற்றியதனால், வெளியேறியவர்களுக்கும், ஸ்பெயினுக்கும் பெரும் விளைவுகள் ஏற்பட்டன. அவர்களின் சமய வெறியும், அவர்கள் நிறுவிய கடும் விசாரணை மன்றமும் ஸ்பெயின் நாட்டின் வருங்கால வரலாற்றில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தின.

இறுதியில் குறிப்பிட்ட செய்தியை ஓரளவு விரிவாகப் பார்ப்போம். கடும் விசாரணை மன்றம் ஸ்பெயினின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருந்தது. 1492 க்குப் பிந்திய நூற்றாண்டுகளில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் அறிவுத் துறையிலும், அறிவியல் துறையிலும் மலர்ச்சி ஏற்பட்டது.

ஆனால், ஸ்பெயினில் அவ்வாறு நிகழவில்லை. மாறுபட்ட கருத்தைத் தெரிவித்தால் கடும் விசாரணை மன்றம் கைது செய்யும் எனும் அச்சம் நிலவிய சமூகத்தில் தனிப்பட்ட சிந்தனை தோன்றவில்லை என்பதில் வியப்பில்லை. பிற ஐரோப்பிய நாடுகள் பல்வேறு கருத்துகளை வெளியிட ஓரளவு உரிமையளித்தன. ஸ்பெயினில் கடும் விசாரணை மன்றம் வைதீக கத்தோலிக்க சமயக் கருத்துகளை மட்டும் அனுமதித்தது. பிற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடும் போது 1700இல் ஸ்பெயின் அறிவு தேக்க நிலையிலிருந்தது. பெர்டினாண்டும், இசபெல்லாவும் ஸ்பெயினில் கடும் விசாரணை மன்றத்தை நிறுவி 500 ஆண்டுகளாயினும் அம்மன்றம் இறுதியில் கலைக்கப்பட்டு ஏறக்குறைய 140 ஆண்டுகளாயினும்இன்னும் ஸ்பெயின் அதன் விளைவுகளினின்று மீளவில்லை.

மேலும், இசபெல்லாவின் உதவியுடன் கொலம்பஸ் தம் பயணத்தை நடத்தியதால், தென் மத்திய அமெரிக்கப் பகுதிகள் பெரும்பாலும் ஸ்பெயினின் குடியேற்ற நாடகளாயின. இதனால் ஸ்பானியப் பண்பாடும், கடும் விசாரணை மன்றம் உட்பட பல நிறுவனங்களும் உலகில் மேற்குப் பகுதியில் பரவின. ஆகவே, மேற்கு ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது, ஸ்பெயின் அறிவு வளர்ச்சியில் பின்தங்கிய நாடாக இருந்ததுபோல், தென் அமெரிக்காவிலுள்ள ஆங்கிலேயக் குடியேற்ற நாடுகளை விட அறிவுத் துறையில் குறைந்த வளர்ச்சியடைந்திருந்தன என்பதில் வியப்பில்லை.

இப்பட்டியலில் இசபெல்லாவுக்குக எந்த இடம் அளிப்பது என்பதை எண்ணும்போது, அவர் காலத்திலும் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் அவர் இல்லையென்றால் நிகழ்ந்திருக்குமா எனப் பார்க்க வேண்டும். சமயப் பகை உணர்வு ஏற்கெனவே ஸ்பெயினில் இருந்து வந்தது என்பது உண்மை. ஏனெனில், 700 ஆண்டுகளாக ஐபீரியத் தீபகற்பத்தை முஸ்லிம்களிடமிருந்து திரும்பக் கைப்பற்றுவதற்கு நீண்ட போராட்டம் நடைபெற்று வந்தது.

ஆயினும், 1492இல் அப்போராட்டம் வெற்றியுடன் முடிவடைந்ததும், ஸ்பெயின் தனது பாதையைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றிருந்த பெர்டினாண்டும், இசபெல்லாவும் குறிப்பாக இசபெல்லா, மறுப்பின்றி வைத்த கருத்துகளை ஏற்கும் பாதையைத் தெரிந்து கொண்டனர். இசபெல்லாவின் செல்வாக்கு இல்லையெனில், ஸ்பெயின் ஓரளவு பன்மைக் கருத்துகள் நிலவு சமூகமாக மாறியிருக்கும்.

இசபெல்லாவை, அவரைவிடப் புகழ்மிக்க ஆங்கிலேய அரசியான முதலாம் எலிசபெத்துடன் ஒப்பிடத் தோன்றலாம். எலிசபெத், இசபெல்லாவைப் போல திறமையுடையவர். மேலும், அவர் பண்பு நயமும், சகிப்புத் தன்மையுமுள்ளவராக இருந்ததால், இசபெல்லாவை விட போற்றுதற்குரியவராக இருக்கின்றார்.

ஆனால் அவர் இசபெல்லாவைப் போல் புதியன புனையும் திறமை பெறவில்லை. இசபெல்லாவின் கடும் விசாரணை மன்றத்தைப் போல அவருடைய செயல்கள் எதுவும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவில்லை. இசபெல்லாவின் சில கொள்கைகள் அருவருக்கத்தக்கவையாக இருப்பினும், வரலாற்றில் ஒரு சில அரசர்களே அவரைப் போல பெரும் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.

 

நன்றி : தமிழ்ச் சுரங்கம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *