இலங்கையில் நடைபெறும் அதிகார மாற்ற அரசியலின் பின்னணி என்ன? | இதயச்சந்திரன்


 

.

‘நாடாளுமன்றத்தை கலைத்தல்’ என்ற ஒற்றை இலக்கினை வைத்தே, பிரதமர் மாற்றம் உட்பட புதிய மந்திரிசபை உருவாக்கம் என்பதெல்லாம்  திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் மகிந்தாவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவிற்கு சிங்கள மக்கள் மத்தியிலிருந்து கிடைத்த பேராதரவு, நாடாளுமன்றத்தைக் கலைத்தல் என்கிற முடிவினை எடுக்க வைத்துள்ளது போலுள்ளது.

இந்த அரசியல் மாற்றத்தினை மைத்திரியும் உணர்ந்துள்ளார்.

அடுத்த சனாதிபதி தேர்தலிலும் தானே வேட்பாளர் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே இந்த சிக்கலான யாப்புக் குளறுபடி முடிவினை மைத்திரி எடுத்திருப்பாரென ஊகிக்கலாம்.

கொலை முயற்சிக் கதையெல்லாம், தமது நகர்வுகளுக்கு நியாயம் கற்பிக்க மைத்திரியார் மேற்கொண்ட புனைவுகளே.

‘நல்லாட்சி’ அரசில்  ஓரங்கட்டப்படுவதால், தனது அரசியல் எதிர்காலம் பூச்சியமாகும் என்கிற அச்சமும் மைத்திரிக்கு ஏற்பட்டுள்ளது.

அரச நிர்வாக மட்டத்தில், நல்லாட்சிப் பங்காளிகளான   ஐக்கிய தேசிய முன்னணி செலுத்தும் செல்வாக்கு பலமடையும் அதேவேளை, அடுத்த சனாதிபதி தேர்தலில் ரணில் இறங்குவார் என்று மைத்திரி எதிர்பார்க்கிறார்.

‘இந்த முறை நீங்கள்..அடுத்தமுறை நாங்கள்’ என்று மைத்திரியிடம் ரணில் கூறியதாகவும் தகவல் உண்டு.

‘சஜித் பிரேமதாசாவை பிரதமராக்கி, ரணிலை சனாதிபதியாக்கும் நிகழ்ச்சிநிரலில் தனக்கென்ன வேலை’ என்று மைத்திரி நினைத்திருக்க வாய்ப்புண்டு.

மகிந்தர் ஆட்சிபீடம் ஏறிய காலத்தில் சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்ட அதிகார மோதல், 2015 இல் பூதாகரமாகி, சந்திரிகா அனுசரணையில் ‘நல்லாட்சி’ அரசு உருவாக வழி வகுத்தது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேனாவை பிரித்து, இரணிலோடு இணைத்த விவகாரத்தின் பின் புலத்தில் மேற்குலகும் இந்தியாவும் தொழிற்பட்டன என்பதை மகிந்தர் இலகுவில் மறக்க மாட்டார்.

மகிந்தரின் கோபத்தைத் தணிக்கவே, அவரின் புலி எதிர்ப்பு நண்பன் சுப்ரமணிய சுவாமியை தூதுவிட்டது இந்தியா.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மகிந்தர் உட்பட 28 முன்னாள் எம்பிக்கள் , ஜி.எல்.பிரீஸைத் தவிசாளராகக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனாவில் இணைந்து கொண்ட விவகாரம்,  பல திருப்பங்களை கொழும்பு அரசியல் மட்டத்தில் ஏற்படுத்துமென எதிர்பார்க்கலாம்.

பண்டாரநாயக்க குடும்பத்தினரின் அரசியல் ஆதிக்க சக்தியாகத் திகழும் சுதந்திரக்கட்சியை பிரதியீடு செய்யும் வகையில், பொதுஜன பெரமுன கட்சியை உருவாக்கி வளர்த்தெடுத்த ராஜபக்ச அணியினர், தற்போது வெளிப்படையாக அதில் இணைந்து கொண்டுள்ளனர்.

பண்டாரநாயக்க அரசியல் சகாப்தத்தை செயலிழக்கச் செய்து, புதிய நவீன இராஜபக்ச சகாப்தத்தை நிர்மாணிப்பதுதான் மகிந்தரின் பேராசை.

இத்தகைய அணி மாற்றங்கள் மற்றும் புதிய அணி சேர்ப்பினூடாக,  இரு துருவ அரசியல் நிலை மீண்டும் இலங்கையில் ஏற்பட்டுள்ளதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாடாளுமன்றக் கலைப்பிற்கு எதிராக உயர்நீதி மன்றில் தொடுக்கப்படும் வழக்குகள், மைத்திரி-மகிந்த அணிக்குச் சார்பான அல்லது எதிரான தீர்ப்பினை வழங்கினாலும் பெரிய மாற்றமேதும் நிகழப்போவதில்லை.

சமாதான காலத்தில் சந்திரிகாவும் ரணிலும் தத்தமது பதவிகளை வகித்தது போலவே அது இருக்கும்.

அதேவேளை ஆட்சி மாற்றம் பாகம் 1 இனை அரங்கேற்றிய அதே வல்லரசுகள், மீண்டும் பாகம் 2 இனை நிகழ்த்திட, மகிந்த குடும்பத்தில் உடைவினை ஏற்படுத்திட முயற்சிக்கலாம்.

ஆனால் அதற்கொரு சந்திரிக்கா தேவை.

அவர்  தந்தையின் சுதந்திரக் கட்சியை இலைகளற்ற வெற்றுக்காம்பாக மாற்றும் கைங்கரியத்தை மகிந்த அணியினர் நிகழ்த்திக் கொண்டிருப்பதால்,  சந்திரிகாவின் மீள்வருகை பிரயோசனமற்ற தெரிவு என்பதை ஆட்சி மாற்ற இயக்குனர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

வடக்கு கிழக்கிலோ, மேற்குறிப்பிடப்பட்ட எந்த தென்னிலங்கை அரசியல் மாற்றங்களையும் உள்வாங்காமல் வேறொரு அரசியல் தடகளப்போட்டி நடை பெறுகிறது.

அந்த மும்முனைப்போட்டியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, விக்கினேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் அரச-அரச சார்பு அணிகள் மோதிக் கொள்ளும்.

இலங்கையில் நடைபெறும் அதிகார மாற்ற அரசியலின் பின்னணி என்ன?.

 

 

 

 

 

அரசியல்  ஆய்வாளர் இதயச்சந்திரன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *