மகிந்த தலைமையிலான அதிகார மாற்றம் நீடிக்குமா? | இதயச்சந்திரன் 


 

கடந்த வெள்ளியன்று ( 26-10-2018) நல்லாட்சியின் பங்காளிகள், சொல்லாமல் கொள்ளாமல் பிரிந்து சென்றனர். எல்லாமே கடுகதியில் முடிந்துவிட்டன. பெரிய பங்காளியான ரணில் தரப்பிற்கு தெரியாமல் ஆட்சிக்கவிழ்ப்பு, புதிய பிரதமர் நியமனம் என்பன நடந்தேறிவிட்டன.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் (UNFGG) மைத்திரி அணியினர், தேசிய அரசாங்கத்திலிருந்து விலகுவதாக எழுத்து மூல அறிவித்தலை சபாநாயகருக்கு அறிவித்த மறுகணமே, ரணிலை வெளியேற்றும் படலமும், மகிந்தரை பிரதமராக்கும் நிகழ்வும் மிகவும் திட்டமிட்ட வகையில் அரங்கேற்றப்பட்டன.

இந்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து ரணில் தரப்பினர் மீள முன்பாகவே மகிந்தருக்கு பட்டாபிஷேகம் செய்து விட்டார் மைத்திரி.

உடனே அடுத்த கட்ட குதிரை பேரமும் ஆரம்பமானது. தனது  தரப்பிலிருந்த மகிந்த எதிர்ப்புவாதிகளை சமாளிப்பதில் வெற்றிகண்ட அதிபர் மைத்திரிபால சிறிசேன, பெரும்பான்மை பலத்தினை அதிகரிக்கும் பொறுப்பினை மகிந்தரிடமே விட்டுவிட்டார்.

குதிரை பேரம் அமோகமாக நடைபெறுவதாகவும், வருகிற 16 திகதி நாடாளுமன்றம் கூடமுன்பாக அறுதிப் பெரும்பான்மையை மைத்திரி-மகிந்த கூட்டணியினர் பெறுவார்கள் என்கிற தகவலும் வருகிறது.

அதேவேளை சம்பந்தரின் கூட்டமைப்பிலுள்ள 16 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்கு, மகிந்தரைவிட ரணில் விக்கிரமசிங்காவே அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார் என்று நம்பலாம். அவர் அணியிலிருந்து குதிரைப் பேரத்தில் உதிர்ந்துபோகும் தலைகளின் எண்ணிக்கையை சரிசெய்வதற்கு, சம்பந்தரைவிட்டால் வேறு வழியில்லை ரணிலுக்கு.

கூட்டமைப்பின் நிலையோ பரிதாபகரமானது. வெல்லப்போகும் மகிந்தரை ஆதரித்தால், தமிழ் மக்களின் ஆதரவினை இழந்து அடுத்த தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் சம்பந்தருக்கு இருக்கிறது.

அடுத்ததாக கூட்டமைப்பிற்கு அரசியல் ஆலோசனை வழங்கும் இந்தியாவும் மேற்குலகமும், ரணில்-மைத்திரி மோதலில் எந்தப் பக்கத்தில் நிற்கிறார்கள் என்பதனை அறிந்து கொண்டு, அதற்கேற்றவாறு முடிவுகளை மேற்கொள்ளவார் கூட்டமைப்பின் தலைவர், என்பதும் உண்மைதான்.

இதேவேளை குதிரை வியாபாரத்தினூடாக 113 இற்கு மேல் நாடாளுமன்றத் தலைகளை மகிந்த பெற்றுக் கொண்டால், சம்பந்தரின் ஆதரவோ அல்லது தேவையோ அவர்களுக்கு ஏற்படாது.

கடந்த சனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றவுடன், ‘தான் தோற்றிருந்தால் தனது கதை ஆறடி மண்ணிற்குள் அடங்கியிருக்கும்’ என்று கூறிய மைத்திரிபால சிறிசேன,  தன்னைக் கொலைசெய்ய சில தீய வெளிநாட்டு சக்திகளும் சரத் பொன்சேக்காவும் முயற்சி செய்ததால் மகிந்தவுடன் சேர்ந்தேன் என்று இப்போது கூறுகின்றார்.

ஆனால் அடிப்படையில் அரசியல்வாதிகளை பொறுத்தவரை பதவியும் அதிகாரமுமே அவர்களின் இலக்காக இருக்கும்.

‘தமிழ் மக்களின் அரசியல் தீர்விற்காக தமது வாழ்க்கையே அர்ப்பணிக்கிறோம், நாட்டின் பொருளாதாரத்தை தூக்கி நிமிர்த்தி பெரும் சுபீட்சத்தினை மக்களின் வாழ்வில் உருவாக்கப்போகிறோம்’ என்பதெல்லாம் வாக்கினைப் பெறுவதற்காக இவர்கள் விடும் சரவெடிகள்.

இவர்களில் அநேகமான மேல்மட்ட அதிகாரம் கொண்ட தலைவர்கள், உள்நாட்டு கார்பொரேட்களுக்கும், பிராந்திய நலன் பேணும் வல்லரசுகளுக்கும் இடை தரகர்களாவே செயல்படுகின்றனர்.

ஆட்சியிலிருப்போர் தமது நலன்களுக்கு இசைவாக இயங்காவிட்டால், மனித உரிமை மீறல்போன்ற மென்வலு அஸ்திரங்களை பிரயோகித்து ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்துவார்கள். ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் கூட்டமும் தேசிய இனங்களும் இந்த வல்லான்களின் வாக்குறுதிகளை நம்பி, இனப்படுகொலை செய்த சரத் பொன்சேக்காவிற்கும் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மைத்திரிபாலாவிற்கும் வாக்களிப்பார்கள்.

‘வல்லரசுகள் கைகாட்டும் நபர்களுக்கு வாக்களித்தால், தீர்வு கிட்டும்’ என்று எங்கள் தலைவர்களும் மக்களுக்கு பொய்சொல்வார்கள். இவர்களின் நிரந்தரமான தேர்தல்காலத்துப் பொய்களை நம்பியே, மக்களின் வாழ்வும் கலைந்துபோகிறது.

தென்னிலங்கையில் இவ்வாறான நிலையிருந்தாலும், சிங்களத்தின் அரசியல் சிந்தனைத்தளத்தில்  மகாவம்சம் ஊட்டிய இனமேலாண்மைப் போதை, அவர்களின் இருதுருவஅரசியல் தளத்தில் எப்போதும் மேலோங்கியிருக்கும்.

அவர்கள் புவிசார் அரசியலில் இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வகிபாகம் குறித்த தெளிவான புரிதலோடு, அவற்றைப் பயன்படுத்தி தத்தமது அரசியல் அதிகார இருப்புக்களையும், கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்புகளையும் மேற்கொள்கிறார்கள்.

அண்மையில் ‘இந்து சமுத்திர பிராந்தியம்; நமது எதிர்காலத்தை வரையறுத்தல்’ என்றுதலைப்பிட்டு கொழும்பில் நிகழ்ந்த சர்வதேச மாநாட்டில் பேசப்பட்ட விடயங்கள் முக்கியமானவை.

இப்பிராந்தியத்தில்  சீனாவின் பொருண்மிய ஆக்கிரமிப்பினை முறியடிக்க விரும்பும் நாடுகளின் தந்திரோபாய நகர்வுகளை இம்மாநாடு உணர்த்தியது. நேரடியான மோதலிற்குள் வரும் விவகாரங்கள் பேசப்படாமல் தவிர்க்கப்பட்டது.

ஆனாலும் அமெரிக்காவின் 60 பில்லியன் டொலர் ‘Build Act’ கடனுதவித் திட்டம் மட்டுமே, அந்நாட்டின் அப்பிராந்தியத்திற்கான உடனடி நகர்வுகளை வெளிப்படுத்தியது.

திருக்கோணமலைக் கடலில் எண்ணெய் ஆய்வுகள் ஆரம்பித்த வேளையில்தான்  சர்வதேச மாநாடுகளும் கொழும்பில் நடக்கின்றன. பிரித்தானிய அரசின் காலனித்துவ பிடிக்குள் இலங்கை இருந்த போது நிர்மாணிக்கப்பட்ட, எண்ணெய் சேமிப்பு கிணறுகள் குறித்த பங்கு பிரிப்புகளும் மாநாட்டிற்கு வெளியே இராஜதந்திர மட்டத்தில் பேசப்பட்டன.

ஏற்கனவே 10 குதங்கள் இந்திய நிறுவனங்களின் பராமரிப்பின் கீழ் இருக்கின்றன. 25 குதங்களை உள்ளூர் நிறுவனங்களோடு இணைந்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நிர்வகிக்கப் போகின்றது. மீதமுள்ள 65 எண்ணெய்க் கிணறுகளை பலதேசிய கார்பொரேட் நிறுவனங்களிடம் தாரை வார்க்க அரசு முற்படும்போதே இந்தியத் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு கிளம்ப ஆரம்பித்துள்ளது.

இது மட்டுமல்ல, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியா கையேற்க முனையும் போது, மேற்குப் பகுதியைத்தான் தருவோம் என்கிற அரசின் பிடிவாதம் மீது இந்தியாவிற்கு எரிச்சல் ஏற்படுகிறது.

சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை இலங்கையில் மட்டுப்படுத்தும் நகர்வுகளுக்கு, அமெரிக்காவின் துணையோடு எத்தகைய முன்னெடுப்புகளை மேற்கொண்டாலும், இலங்கை ஆட்சியார்களோ மிகவும் தந்திரமாக சீனாவின் வகிபாகத்தையும் உள் இணைத்தவாறு காய்நகர்த்துவதனை இந்தியாவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

‘மகிந்த அணியிலிருந்து மைத்திரியை பிரித்தெடுத்து 2015 இல் ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினாலும், அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் கம்பனியொன்றிற்கு 99 வருட குத்தகைக்கு தாரைவார்த்துவிட்டது தாம் உருவாக்கிய நல்லாட்சி அரசு’ என்கிற கோபத்தை அமெரிக்க உபஜனாதிபதி மைக் பென்ஸ் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார்.

சீனாவின் கடன்பொறிக்குள் (Debt Trap) இலங்கை வீழ்ந்துவிட்டதால், பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவமிக்க அம்பாந்தோட்டை துறைமுகம் கைமாறிவிட்டதாக மைக் பென்ஸ் கதறியவுடன் நோர்வேக்கும் பிரித்தானியாவிற்கும் பயணங்களை மேற்கொண்டார் ரணில்.

இந்த நிலையிலேயே இந்தியாவின் நகர்வுகளும் ஆரம்பமானது. சீனா மீதான வர்த்தக வரிப்போர் தொடரும் அதேவேளையில் ஈரான் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் இந்தியாவையும் பாதித்தது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் மூலோபாய நல்லிணக்கத்தை இந்தியாவோடு பேணினாலும், ஈரான் விவகாரத்திலும் ருஸ்யாவின் S 400 ஏவுகணைகளை வாங்கும் விடயத்திலும் தனது அதிருப்தியை வெளிப்படுத்த ஆரம்பித்தது அமெரிக்கா.

இதே சமகாலத்தில் ரணிலின் இந்தியாவிற்கான பயணமும், இந்திய அரசின் பெரும் புள்ளி சுப்பிரமணிய சுவாமியின் இலங்கை வருகையும் நிகழ்கிறது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில், மகிந்தரின் வழிநடத்தலில் இயங்கும் சிறி லங்கா பொதுஜன பெரமுன கட்சி அமோக வெற்றியீட்டிய விவகாரத்தை டெல்லி மையம் கவனத்தில் கொள்கிறது.

அக் கட்சியின் முக்கியஸ்தர் பேராசிரியர் ஜீ .எல்.பீரிஸ் அவர்கள் இந்தியாவின் நம்பிக்கைக்குரியவர் என்பது, அவர் மகிந்த அமைச்சரவையில் அபிவிருத்தி அமைச்சராக இருந்தவேளையில், சீபா (CEPA) ஒப்பந்த விவகாரம் டெல்லி தெற்கு வளாகத்தில் பெரிதாகப் பேசப்பட்டபோது தெரிந்தது. கேர்ணல்.ஹரிகரன் தனது  கட்டுரைகளில் பீரீஸ் குறித்து எழுதியிருந்தார்.

பின்னர் சுவாமியின் அழைப்பினை ஏற்று மகிந்த ராஜபக்ச இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டதும், அங்குள்ள ஊடகங்களுக்கு பேட்டியளித்த மகிந்தர், போரில் புலிகளைவெல்ல உதவிய இந்தியாவிற்கு நன்றி தெரிவித்ததும், அதன் எதிரிவினையாக தமிழ்நாட்டில் கட்சிகளிடையே பலத்த விவாதங்கள் உருவாக்கியதையும் நாம் அறிவோம்.

இதன் பின்புலத்திலேயே இலங்கையில் அதிரடியான அதிகார மாற்றமொன்று நிகழ்ந்துள்ளது.

2015 இல் நடந்த ஆட்சிமாற்றத்தின் பின்னணியில்,  திரைமறைவில் இருந்து இயக்கிய பெரும்சக்திகள் எவையென்பதை மக்களும் அறிவர். மகிந்தரும் அறிவார்.

இந்திய பெருவல்லரசின் கொல்லைப்புறத்தில் இருக்கும் ஒரு சிறிய நாட்டில், ஆட்சி மாற்றம் போன்றதொரு அதிகார மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இது யாருக்கும் தெரியாமல் நிகழவாய்ப்பில்லை. வல்லானின் ஆதரவில்லாமல் இதனைச் செய்யக்கூடிய  பலம்பொருந்திய நாடுமல்ல இலங்கை.

மகிந்த-மைத்திரி அணியினர் தமது பலத்தினை நாடாளுமன்றில் காட்டினால், அதிகாரமாற்றத்தினை ஏற்படுத்திய மகா சக்தியின் முகம் வெளியே தெரியும்.

அதேவேளை ரணிலின் தலை தப்பினால், பின்னின்று இயக்கிய வன்சக்திகள் மௌனமாகிவிடும்.

 

 

 

 

 

 

அரசியல் ஆய்வாளர் இதயச்சந்திரன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *