ஜூன் 01, யாழ் நூலகம் சிங்கள பேரினவாதிகளால் எரியூட்டப்பட்டு, 38 ஆண்டுகள். ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை எரித்து, மிகப் பெரும் இன கலாசாரப் படுகொலையை அன்றைய இலங்கை அரசு நிகழ்த்தியது. ஸ்ரீலங்கா காவல்துறையும் பேரினவாதிகளும் நூலகத்தை எரித்து விட்டு, எரிந்து கொண்டிருந்த நூலகத்தை பார்த்து, ஸ்ரீலங்கா காவல்துறை கொண்டாடிக் கொண்டிருந்ததாக கூறுகிறார் வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம். யாழ் நூலக எரிப்பு காலப் பகுதியில் ஆணையாளராக இருந்த சீ.வி.கே சிவஞானம், யாழ் நூலக எரிப்பு குறித்த நினைவுகளை வணக்கம் லண்டனுடன் பகரிந்து கொள்கிறார்.
அந்தக் கொடூர சம்பவத்தை ஒருமுறை நினைவுபடுத்துங்கள்?
அப்போது நான் யாழ் மாநகர ஆணையாளராக இருந்தேன். யாஸ் நூலகம் எரியூட்டப்பட்டதை அறிந்து நூலகம் நோக்கி சென்றேன். அப்போது ஊடரங்கு அமுலலில் இருந்தது. ஊடரங்கை பிரகடனப்படுத்திவிட்டுதான் நூலகத்தை எரித்தார்கள். நூலகம் நோக்கிச் சென்ற என்னை தடுத்து நிறுத்தினார்கள். மீறிச் சென்றால் சுடுவேன் என்று எச்சரித்து என்னை திருப்பி அனுப்பினார்கள்.
நூலகம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பதை ஸ்ரீலங்கா காவல்துறை பார்த்துக் கொண்டிருந்தது.
மக்கள் யாரும் வெளியில் வரவில்லை. நூலகம் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருப்பதை ஸ்ரீலங்கா காவல்துறை பார்த்துக் கொண்டிருந்தது. அவர்கள் தானே எரித்தார்கள். அவர்கள் எப்படி பாதுகாப்பார்கள்? அல்லது எரிவதை தடுத்து நிறுத்துவார்கள்? நூலகம் எரிந்து யாழ் நகரம் புகை மண்டியிருந்தது இப்போதும் என் நெஞ்சில் ஆறாத காயமாக இருக்கிறது.
எரிக்கப்பட்ட புத்தகங்கள் குறித்து?
எங்களுடைய பாரம்பரியத்தை சொல்கின்ற புத்தகங்கள் அவை. அதனால்தான் எரிக்கப்பட்டன. குறிப்பாக ஓலைச்சுவடிகள் பலவும் அதில் எரிந்து சாம்பலாகிவிட்டன. ஆனந்தகுமார சாமியின், அரிய ஆய்வுகள், நூல்கள் எல்லாம் மலேசியாவில் இருந்து கொண்டு வந்து நூலகத்தில் வைத்திருந்தோம். அவர் எமது நாட்டை சேர்ந்தவர். அவரது கலை, ஆய்வுகள் எம்மைப் பற்றியவை. அவையெல்லாம் அழிக்கப்பட்டன. அவற்றையெல்லாம் நாம் மீளப் பெறவே முடியாது.
பிற்காலத்தில் அன்று தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் யாழ் நூலகத்திற்கு புத்தகங்களை அனுப்பி வைத்தார். ஆனாலும் இழந்த புத்தகங்களை நாம் பெறவே முடியவில்லை.
அழித்தவர்களே அதை புனரமைத்தார்கள். அந்த கொடூர நிகழ்வை மறைக்கவே அவர்கள் அதை புனரமைத்தார்கள்
யாழ் நூலக எரிப்பு தொடர்பான வலுவான நினைவுச் சின்னம் ஒன்றுள்ளதா?
1984இல் நூலகத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பேண முயற்சிகளை மேற்கொண்டோம். அமிர்தலிங்கமும் அதையே செய்ய வேண்டும் என்றார். ஆனால் சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில், எமது ஒப்புதல் ஏதுமின்றி, வேலிகள் சுற்றியடைக்கப்பட்டு, நூலகம் முழுமையாக புனரமைக்கப்பட்டது. அழித்தவர்களே அதை புனரமைத்தார்கள். அந்த கொடூர நிகழ்வை மறைக்கவே அவர்கள் அதை புனரமைத்தார்கள். நஷ்ட ஈடுகூட முழுமையாக தரப்படவில்லை. எரியூட்டப்பட்ட நூலகத்தின் ஒரு பகுதியை நினைவுச் சின்னமாக பாதுகாத்திருக்க வேண்டும். அதுவே தமிழ் மக்களின் நிலைப்பாடாக இருந்தது.
நேர்காணல் – வணக்கம் லண்டனுக்காக தீபன்