கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்


*.
மலர்கிறது முல்லை
கமகமவென சுவர்க்கமாய் உயர்கிறதே
என் மாடித்தோட்டம்.
கிருமியை அஞ்சி ஊரடங்கிய சென்னையின்
மரண அமைதி அதிர
கருவண்டுகள் இசைக்கிறது
”அஞ்சாதே தோழா” என்னும் பாடல்.
*
அமேசன் காட்டுத் தீயையும் மிஞ்சி
உலகை வேட்டையாடுதே கொரோனா .
அடாது கொட்டும் வெண்பனியையும்
விழாவாய் கொண்டாடும்
ஒஸ்லோ நகரும் முடங்கியதே.
கூதிரில் தனித்த என் மனைவிக்கு
பூக்களும் இல்லை.
எனினும் எனினும்
இடுக்கண் வருங்கால் நகைக்கும்
புதல்வர்களை விட்டு வந்தேனே..
.*
வெற்றியெனக் கோரோனோ கிருமிகள் துள்ளும்
பெசன்ற்நகர் கடற்கரையில்
கைவிடப்பட்ட படகுகளில் அஞ்சாமல்
நண்டுகள் தொற்றும் இரவில்.
குடிசைகளுள்
படகெனத் துயிலும் பெண்டிர் மார்பில்
வலிய விரல்கள் ஊர்கின்றன.
*
சாத்தானே அப்பாலே போ.
மனிதர்கள் கைவிடப்படுவதில்லை.
ஒருபோதும் வெல்லப் படுவதுமில்லை.

.
கூதிர் – WINTER
24.03.2020One thought on “கவிதை | கொரோனாவை தாண்டி | வ.ஐ.ச.ஜெயபாலன்

  1. நன்றி, வணக்கம் லண்டன். இடுக்கண் வரும் இந்த தருணத்தில் ஒரு ஏழைக்கவிஞனால் நம் பிள்ளைகளின் உலகை பாதுகாக்கும் உறுதியையும் நம்பிக்கையையும் தருவதை தவிர வேறு என்ன செய்ய இயலும். இக்கவிதையை உங்களுக்கு அனுப்பி வைத்த என் இனிய தோழன் கவிஞன் தீபச்செல்வன் மச்சானுக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *