“கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர்…”


இயேசு “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக்கா 9:62) என்ற சவாலை தன் சீடர்களுக்கு வழங்கியிருந்தார்.

கடந்த ஞாயிறு நற்செய்தி இயேசு என்ற தலைவனின் உன்னத பண்புகளை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவுறுத்துகிறது. அத்துடன் அவரைத் தொடரும் சீடர்களும் தொடர விழையும் ஏனைய இளையோரும் கொண்டிருக்க வேண்டிய பண்புகளைக் குறித்த சவால்களையும் நம்முன் வைக்கின்றது. லூக்கா நற்செய்தி 9ம் பிரிவில் நாம் வாசிக்கும் இப்பகுதியில், நான்கு நிகழ்வுகள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொரு நிகழ்விலும் நமக்குத் தேவையான பல பாடங்கள் உள்ளன.

நற்செய்தியில் இடம்பெறும் இரண்டாவது நிகழ்வு,இயேசுவைத் தொடர விழையும் ஓர் இளைஞனைப் பற்றியது.

“நீர் எங்கே சென்றாலும், நானும் உம்மைப் பின்பற்றுவேன்”(லூக்கா 9:57) என்று சொல்லும் அவ்விளைஞனை, இயேசு ஆதங்கத்துடன் பார்க்கிறார். “எங்கே சென்றாலும்…” என்று அந்த இளைஞன் சொன்னதுதான் அந்த ஆதங்கத்திற்குக் காரணம்…

தான் எங்கே போகிறோம் என்பது இயேசுவுக்குத் தெளிவாக இருந்தது. அவர் எருசலேம் நோக்கிச் செல்ல தீர்மானித்துவிட்டார். என்று நற்செய்தியின் முதல் வரிகளில் வாசிக்கிறோம்.

எருசலேம் நோக்கிச் செல்வது அங்கிருந்த அதிகாரங்களுடன் மோதுவதற்கு. இந்த மோதலில் தனக்கு என்ன நிகழும் என்பதையும் இயேசு உணர்ந்திருந்தார். இந் நேரத்தில் இந்த மோதலில் ஒரு தொண்டரையும் ஈடுபடுத்த வேண்டுமா என்பதுதான் இயேசுவின் ஆதங்கம்.

இன்றையத் தலைவர்கள் நம் நினைவுக்கு வருகின்றனர். பொதுவாக போராட்டம், எதிர்ப்பு, மோதல் என்று வந்தால் தொண்டர்களை அந்த மோதலில் ஈடுபடுத்திவிட்டு ஒதுங்கிக்கொள்வது நம் தலைவர்களின் இலக்கணம். இயேசு அத்தகைய தலைவர் அல்ல.

தன் போராட்டத்தைப்பற்றி மறைமுகமாகச் சொல்லி அதில் பங்குபெற இயேசு அந்த இளைஞனுக்கு விடுக்கும் அழைப்பு அழகானது: இயேசு அவரிடம், “நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிடமகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை” என்றார்.

(லூக்கா 9: 58) பறவைகளும், மிருகங்களும் பாதுகாப்பற்றச் சூழலில் ஒவ்வொரு மணித்துளியும் வாழ்கின்றன. எந்த நேரத்தில் அவற்றின் உயிர் வேட்டையாடப்படும் என்பது தெரியாமல் நாள் முழுவதும் பாதுகாப்பற்று வாழும் இவ்வுயிர்கள் மாலையில் திரும்பிச் செல்லும்போது, கூடுகளும் பதுங்கு குழிகளும் ஓரளவு பாதுகாப்பு தருகின்றன.

தனக்கு அந்தப் பாதுகாப்பு கூட இல்லை என்பதை இயேசு அந்த இளைஞனுக்குத் தெளிவாக்குகிறார். இன்றைய தலைவர்களோடு ஒப்பிட்டால் இயேசுவை பிழைக்கத் தெரியாதத் தலைவர் என்று முத்திரை குத்தலாம்.

மூன்றாவது, நான்காவது நிகழ்வுகளில், இரு இளையோர் தங்கள் குடும்பம் சார்ந்த கடமைகளை முடித்துவிட்டு இயேசுவைப் பின்தொடர விழைகின்றனர். இயேசு அவர்களிடம் கூறும் பதில்களை மேலோட்டமாகப் பார்க்கும்போது கடுமையான வார்த்தைகளாக ஒலிக்கின்றன.

தன் பெற்றோரை அடக்கம் செய்துவிட்டு வர விழையும் இளைஞனிடம் “இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம்” என்கிறார் இயேசு. வீட்டாரிடம் விடைபெற்று வர விழைந்த மற்றோருவரிடம், “வேண்டாம். இப்போதே புறப்படு. பின்னால் திரும்பிப் பார்க்காதே” என்று சொல்கிறார்.

திரும்பிப் பார்க்காமல், தனக்கு வந்த அழைப்பை ஏற்ற ஓர் இளைஞனைப்பற்றி முதல் வாசகத்தில் ஒரு நிகழ்வு கூறப்பட்டுள்ளது. எலிசா என்ற இளைஞன், தன் வயலில் ஏர் பூட்டி உழுது கொண்டிருந்த வேளையில் இறைவாக்கினர் எலியா அங்கு வந்து அவரை இறைவாக்கு உரைப்பவராகத் தேர்ந்துகொண்டார். அதைத் தொடர்ந்து, எலிசா செய்த செயல் அவரது முழு அர்ப்பணத்தைக் காட்டுகிறது.

எலிசாவின் இந்தச் செயலை மனதில் வைத்து, இயேசு, “கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல” (லூக்கா 9:62) என்ற சவாலை தன் சீடர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். இயேசுவைப் பின்பற்றுவது அவரைப்போல வாழ முற்படுவது மிக,மிக உயர்ந்ததோர் எண்ணம்.

அந்த எண்ணம் மனதில் தோன்றினால் தாமதிக்க வேண்டாம். நல்லது ஒன்று செய்ய வேண்டும் என்று மனதில் பட்டால் அதை உடனடியாகச் செய்து விடுவது மிகவும் நல்லது. மாறாக அதை ஆறப்போட்டால்… ஆற்றோடு போய்விடும்.

அதாவது, நமது ஏனைய எண்ணங்கள், கவலைகள், கணக்குகள், வாழ்வின் நிர்ப்பந்தங்கள் என்ற அந்த வெள்ளம் இந்த நல்லெண்ணத்தை அடித்துச் செல்ல வாய்ப்புண்டு. நம் வாழ்வைச் சூழும் வெள்ளத்தில் நமது நல்லெண்ணங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க அவ்வப்போது எதிர் நீச்சலும் போடவேண்டியிருக்கும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *