மகாபாரதம் இந்தியாவின் பண்பாட்டுச் செல்வம்: எழுத்தாளர் ஜெயமோகன் 


கோவை., கிசாரி மோகன் கங்குலியின் முழு மகாபாரதத்தையும் தமிழில் மொழிபெயர்த்து நாள்தோறும் இணையத்தில் வெளியிடும் அரும்பணியைச் செய்து முடித்த மொழிபெயர்ப்பாளர் செ. அருட்செல்வப்பேரரசனைப் பாராட்டும் நிகழ்விற்கு கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் ஏற்பாடு செய்த்திருந்தது. இவ்விழா பிப்ரவரி 1, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்திய வர்த்தக சபை அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கோவை நன்னெறிக் கழகத்தின் தலைவர் இயாகாகோ சுப்ரமணியம் தலைமை வகித்தார். தொழிலதிபர் டி.பாலசுந்தரம், எழுத்தாளர்கள் ஜெயமோகன், பி.ஏ.கிருஷ்ணன், ஜா.இராஜகோபாலன், அருட்செல்வப் பேரரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தலைமை உரை வழங்கிய இயகாகோ சுப்ரமணியம் வழங்கினார்.

டி.பாலசுந்தரம் பேசுகையில், ஆந்திர மாநிலக் கோயில்களில் மகாபாரதத்தினை ஐந்தாவது வேதமாக, வேதசாஸ்தரமாக வழிபட்டு கோவில்களில் தொடர்ந்து பாராயணம் செய்யப்படுகிறது. பல மகாபாரதங்கள் படிக்க இருந்தாலும் கிசாரி மோகன் கங்குலியின் ஆங்கில மகாபாரதமே முழுமையான மகாபாரதம். வங்காளத்தில் இருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க 13 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார் கங்குலி. தமிழில் மணலூர் இராமானுஜ ஆச்சாரியாரும் மொழிபெயர்த்த மகாபாரத்துக்கு 27 ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்.

கிசாரி மோகன் கங்கலி, இராமானுஜ ஆச்சாரியாருக்கு உதவியாளர்கள், நிறைய கொடையாளர்கள் இருந்தனர். ஆனால் அருட்செல்வப் பேரரசனுக்கு உதவியாளர்கள் கிடையாது, ஜெய வேல் என்கிற ஒரு மனிதன் அளித்த சிறு அன்பளிப்பே உறுதுணையாக இருந்தது. கர்மமே கண்ணாயிரு என்று ஏழு ஆண்டுகள் அரும்பாடுபட்டு இந்தப் பணியை செய்துள்ளார். மொத்தம் 18 பருவங்கள், 100 உபபருவங்கள், 2 லட்சம் ஸ்லோகங்கள் என மொத்தம் 15,000 பக்கங்களை மொழிபெயர்த்து உள்ளார். பல மகாபாரதங்கள் இருந்தாலும் அரசன் பாரதம் படித்தே ஆக வேண்டும். குந்தி மாத்ரி மீது பொறாமை கொண்டது, மரணத் தருவாயில் துரியோதனன் பேசும் வீரவசனங்கள் போன்றவை மூல மகாபாரதத்தை படிக்கும் போதே நமக்கு தெரியும்.

எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் பேசுகையில், முதலில் மகாபாரதத்தினை வியாசர் எழுதினார். அவருக்குப் பின் இந்திய மக்களால் எழுதிச் சேர்க்கப்பட்டது முழுமையான மகாபாரதம். இந்திய மக்கள் வாழ்க்கையின் சிறு சம்பவங்கள் கூட மகாபாரதத்தில் உள்ளது. சங்க இலக்கியம் என்ற சொல் சின்னமனூர் செப்பேடு தான் நமக்கு அறிமுகம் செய்தது. அதே செப்பேட்டில் மகாபாரதத்தினை தமிழில் மொழிப் பெயர்க்க வேண்டும் என்ற குறிப்பு வருகின்றது. மகாபாரதம் நமக்கு மனிதர்களை மதிப்பீடு செய்ய கற்றுத் தருகிறது. அந்தக் காலகட்டத்தில் இருந்த நியதிகள், குல வழக்கம், பண்பாட்டு முறைகளை அறிந்து கொள்ள முடியும். திரெளபதியம்மன் வழிபாடு மகாபாரதத்தில் இருந்து வந்தது. அருட் செல்வப் பேரரசனின் மொழிபெயர்ப்பு மிகக் கவனமாக செய்யப்பட்டுள்ளது. இதிகாசங்களுக்கு என்று ஒரு மொழி உள்ளது. அந்த மொழியில் தொய்வில்லாமல் செய்துள்ளார்.

எழுத்தாளர் ஜெயமோகன் சிறப்புரை வழங்கி பேசுகையில், சென்ற அறுபது ஆண்டுகளாக சுமேரிய கதையை மீட்டெடுத்து ஒரு மகாபாரதத்தினை உருவாக்க ஐரோப்பிய அறிஞர்கள் அரும்பாடுபட்டு வருகிறார்கள். ஆனால் நம்மிடையே இருக்கும் மகாபாரதத்திற்கான மரியாதையை நாம் செய்து வருகிறோமா. மனித குலத்துக்கு சொந்தமான பண்பாட்டு செல்வம் மகாபாரதம். இது மதத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட நூல் அல்ல. நம் அனைவருக்கும் சொந்தமான பூர்வ கதைகளின் தொகுப்பு, வாழும் இலக்கியம். மகாபாரதம் அனைத்து இந்தியர்களுக்குச் சொந்தமானது. பெளத்தர்கள், சீக்கியர்கள், சமணர்கள் என அனைவருக்கும் மகாபாரதம் உண்டு. அரசர், முனிவர்கள், அசுரர்கள்குல வரிசை, பல குருநிலைகள் என தகவல் களஞ்சியமாக உள்ளது.

வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்த மக்கள் தங்களுடைய கதையை சேர்த்துள்ளனர். மேலும், தெருக்கூத்துகள், நாடகங்கள் வழியாக பல கதைகள், சம்பவங்கள் மகாபாரதத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. உதாரணமாக விராட பருவத்தில் உத்தரையின் கதையை சேர்க்கப்பட்டுள்ளது. மகாபாரதம் பழமைவாய்ந்தது, தற்காலத்துக்கு உகந்தது அல்ல என்று சொல்லிக் கொண்டே ஒப்பீடுகள், மதிப்பீடுகள் செய்யப்பட்டுக் கொண்டே தான் உள்ளது. இன்று ஐரோப்பா எவ்வளவு பழமையான விஷயத்தை கொண்டாடினாலும் அதைக் கொண்டாடும் வழக்கத்தை இங்கே கொண்டுள்ளனர். ஆனால் நமது வேரில் இருந்து இலக்கியங்களை உருவாக்க வேண்டும். அதுவே மகாபாரதம். கனவுக் கலைக் களஞ்சியம் மகாபாரதம். சுருக்கமான மகாபாரதம் சிறு குழதைகளுக்கு உரியது. அசலாக சிந்திப்பவர்கள் முழுமையான மகாபாரதம் படிக்க வேண்டும் என்று பேசினார்.

ஏற்புரை வழங்கிய அருட் செல்வப் பேரரசன் பேசுகையில் முழுமையான மகாபாரதம் இன்றும் வெகுஜன மக்களை சென்றடையவில்லை. வரும் அடுத்த தலைமுறையினரும் முழுமையான மகாபாரதத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்க்கிலேயே மொழிபெயர்த்தேன். இந்தப் பணியை தொடர்ந்தது முதலே ஊக்கத்தினை எழுத்தாளர் ஜெயமோகன் வழங்கிவருகிறார், அவருக்கு நன்றிகள் என்று பேசினார். இந்நிகழ்வில் ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன் அருட்செல்வப் பேரரசனுக்கு நினைவுப் பரிசை வழங்கி கெளரவித்தார். மேலும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன், பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர், கொடிசியாவின் கோயம்புத்தூர் புத்தகக் கண்காட்சி நிர்வாகிகள், இலக்கிய வாசகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *