யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையமும் அதன் சாதக பாதகங்களும்: தேவதர்சன் சுகிந்தன்


யாழ்ப்பாணத்தின் மற்றொரு பெருமை மிகு அடையாளமாக விளங்கக்கூடிய யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் இன்று (17.10.2019 ) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அதன் மொழிக்காக, யாழ்ப்பாணத்தின் உணவு முறைக்காக, யாழ்ப்பாணத்தின் கலாசாரத்திற்க்காக, யாழ்ப்பாணத்தின் விருந்தோம்பலுக்காக என எத்னையோ விடயங்களுக்கு பெயர் பெற்றிருந்தாலும்.

அதன் வரலாற்று பெருமைக்கான உலகத்தரமான அடையாளங்கள் அங்கு நீண்ட காலமாக அமைக்கப்படவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயமே. குறித்த உலகத்தரத்திலான அபிவிருத்தி பணிகள் அங்கு ஏற்படுத்தப்படுவதற்கான எல்லா வாய்ப்புக்களும் இருந்தும் குறித்த விடயங்கள் அங்கு நிறைவேற்றப்படாமல் போனதற்கு, இலங்கையில் நீண்டகாலமாக நடைபெற்று வந்த உள்நாட்டு யுத்தம், இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மை இனமாக இருத்தல் மட்டுமே ஆட்சியாளர்களுக்கான லாபமாக பார்க்கப்படுகின்றமை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனபோதிலும் அவை எல்லாவற்றையும் தாண்டி இன்று அதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் உருவாக்கப்பட வேண்டிய தேவை எழுந்தமை தமிழர்களுக்கான நலனை அடிப்படையாக கொண்டது என்று வெறுமனே சுருக்கிவிட முடியாது. இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நடத்தப்படவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துள்ளமை குறித்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் காட்டி வருகின்ற முனைப்பு, இலங்கையின் மீதான இந்தியாவின் கரிசனம் உள்ளிட்ட பல விடயங்களை இதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

மிக குறுகிய காலகட்டத்தில், முடிவெடுக்கப்பட்ட இந்த தீர்மானம் ஏறக்குறைய ஐந்து மாதங்களுக்குள்ளேயே அதன் முடிவுக்கட்டத்தை எட்டியிருப்பதானது ஆச்சரியத்தையும், எதற்க்காக குறித்த விடயத்தில் இத்தனை தீவிரம் என்ற ஐயத்தையும் ஒரு சேர வழங்கியிருக்கிறது.

இந்நிலையில் குறித்த விமான நிலையத்தினாலான நன்மைகள் தீமைகள் குறித்து ஆராய வேண்டியது அவசியப்படுகிறது.

நன்மைகள் என பார்க்கையில், எடுத்த எடுப்புக்களுக்கெல்லாம், கொழும்புக்கான பயணத்தை மேற்கொள்ளும் மக்களுக்கான நேர விரயம், அவர்களின் பயண செலவு, ஒரு நீண்ட பயணத்தின் போது அதுவும் குறிப்பாக பிரத்தியேக வாகனங்களில் மேற்கொள்ளும் இரவு நேர பயணங்களின் போது எழுகின்ற அச்ச உணர்வு என்பனவற்றில் இருந்து எல்லாம் யாழ் மற்றும் வட மாகாண மக்களுக்கு விடுதலைதான்.

ஆகக் குறைந்தது ஆறு மணி நேர பயணம் முதல் அதிக பட்சம் எட்டரை மணிநேரம் வரையில் வடக்கிலிருந்து விமான நிலையத்துக்கு மக்கள் பயணிக்க வேண்டியிருப்பதும் அதற்காக அந்த பயணங்களுக்காக மக்கள் ஒரு தொகையினை செலவு செய்ய வேண்டியிருப்பதும் குறித்த பயணங்களின் போதான உடல் உபாதைகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருப்பதும் வசதி படைத்த, வசதி குறைந்த என அனைத்து தரப்பு மக்களுக்குமான ஒரு சவால் என்பதை மறுப்பதற்கில்லை. ஆகவே குறித்த சவால்களில் இருந்து மக்கள் வடக்கு மக்களுக்கு ஓர் விடுதலை கிடைக்கிறது என்பது மிக முக்கியமான ஓர் அனுகூலம்.

இதனை தாண்டி என்ன வகையிலான பிரதிகூலங்களை மக்கள், அல்லது வடக்கு எதிர்நோக்கப்போகிறது என்பது மிக முக்கியமான கேள்வியாக காணப்படுகிறது.

யாழ்ப்பாணம் உட்பட்ட வடக்கின் நிலப்பரப்பு அதிகமான புலம்பெயர் தேசங்களில் வாழும் மக்களால் ஆனது. வருடத்தின் எல்லா காலங்களிலும் ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட புலம்பெயர் தேசங்களில் இருந்து வடக்கிற்கான சொந்தங்களின் வருகையும், இங்கிருந்து தூர தேசங்களுக்கான பயணங்களும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

இந்த நிலைப்பாட்டினால் வடக்கினுடைய மிக முக்கியமான தொழில்களில் ஒன்றாக வளர்ச்சி பெற்றிருந்தது, வாடகை வாகனப்பயணம். அந்த வகையில் சொந்தமாக சில வாகனங்கள் சொகுசு வாகனங்களை கொள்வனவு செய்து அதனை கொழும்பு – வடக்கு போக்குவரத்தில் ஈடுபடுத்தும் வாகன உரிமையாளர்களையும், குறித்த போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகன சாரதிகளையும் யாழில் வீதிக்கு ஒருவரையேனும் பார்த்து விட முடியும்.

அவர்களது நிலை இனிமேல் என்ன என்பது கேள்விக்குறியே. இன்னும் அதிகமாக பார்க்கையில் மாதாந்த கொடுப்பனவுகளின் அடிப்படையில் தமது வாகனங்களை கொள்வனவு செய்து அதனை நிறைவு செய்திராத வாகன அரை உரிமையாளர்களை நினைத்துப்பார்ப்பார்க்கையில் அவர்களுக்கான தீர்வு தொடர்பிலான எந்த வெளிச்சமும் கண்ணில் படவில்லை என்பது வேதனையான விடயம்.

இதனை தாண்டி, யாழ்ப்பாணம் கலாசாரத்துக்கு பெயர் போன உலகின் மிக முக்கியமான நகரமாக பார்க்கப்படும் நிலையில் ஒரு பெரு நகரத்தின் அடையாளமான விமான நிலையம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் யாழிற்கான சுற்றுலாப்பயணிகள் மேலும் அதிகரிக்கப்போகிறார்கள் அது நாட்டுக்கும் உள்ளூர் வியாபாரிகள் விடுதி உரிமையாளர்கள் உட்பட பலருக்கும் நன்மை அளிக்கப்போகிறது.

ஆனால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க அதிகரிக்க அவர்கள் எதிர்பார்க்கும் அவர்களுக்கான பல விடயங்கள் குறித்த பகுதிகளில் பெருகுவதை தடுக்க இயலாது.

அந்த வகையில், ஏற்கனவே சுற்றுலா நகர்களாக மாறிப்போயிருக்கும், கிழக்கின் திருகோணமலை உள்ளிட்ட மாவட்டங்களில் மசாஜ் நிலையங்கள் உள்ளிட்ட பல கலாசாரக் கேடான விடயங்கள் அதிகரிப்பதாக மக்கள் அவ்வப்போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதை போல வடக்கிலும் இனிமேல் எதிர்பார்க்கலாமா? என்பது மிக முக்கியமான கேள்வி.

இதுபோன்ற சுதந்திரமான சில விடயங்கள் தேவையா இல்லையா என்பதை தாண்டி, இதனை மக்கள் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதன் அடிப்படியில் சிந்திக்க வேண்டியது அவசியம்.

இவ்வாறான சாதகங்களுக்கும் சவால்களுக்கும் மத்தியில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கும் யாழ் சர்வதேச விமான நிலையம் மக்களுக்கு நன்மையா தீமையா என்ற வாத பிரதிவாதங்களை எல்லாம் தாண்டி ஒரு முறை அதன் பெயரை சொல்லிப் பார்த்தால் ஒரு கர்வம் வரத்தான் செய்கிறது.

அந்த பெயர் ‘யாழ் சர்வதேச விமான நிலையம்’

தேவதர்சன் சுகிந்தன், ஊடகவியலாளர். 

யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ் சமூகத்தின் விழிப்புணர்வுக்காகவும் நன்மைக்காகவும் அத்தகைய பதிவுகளை வணக்கம் லண்டன் பிரசுரித்து வருகின்றது. இக் கட்டுரையின் கூறப்பட்டுள்ள கருத்துக்கள், இதனை எழுதிய கட்டுரை ஆசிரியருக்கு உரியது என்பதுடன் தொடர்பான பதிவுகளை அனுப்பினால் பரிசீலனையின் பின்னர் பிரசுரிக்க எமது தளம் தயாராக உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். -ஆசிரியர்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *