ஜூலியஸ் சீசர் (கி.மு.100 – கி.மு.44)


வரலாற்றுப் புகழ் பெற்ற ரோமானிய இராணுவத் தலைவராகவும் அரசியல் வல்லாட்சியாளராகவும் விளங்கிய கேயஸ் ஜூலியஸ் சீசர் ரோமாபுரியில் கடும் அரசியல் கொந்தளிப்பு நிலவியபோது, கி.மு. 100 ஆம் ஆண்டில் ரோம் நகரில் பிறந்தார்.

கி.மு. 2 ஆம் நு‘ற்றாண்டில், இரண்டாம் யூனிக் போரில் கார்த்தேஜியரை வெற்றி கொண்ட பின்னர், ரோமானியர்கள் ஒரு பெரிய பேரரசை உருவாக்கியிருந்தார்கள். இந்த வெற்றியின் காரணமாக ஏராளமான ரோமானியர்கள் பெரும் பணக்காரர்களாக ஆகியிருந்தனர். ஆயினும் இந்தப் போர்களினால் ரோமன் சமூக- பொருளாதாரக் கட்டுக் கோப்பு வெகுவாகச் சீர்குலைந்திருந்தது. பெரும்பாலான குடியானவர்கள் தங்கள் உடமைகளை இழந்தார்கள். முதலில் ஒரு சிறு நகருக்கான நகராட்சி மன்றமாக அமைக்கப்பட்டிருந்த ரோமானிய ஆட்சிப் பேரவையினால், ஒரு மாபெரும் பேரரசை நியாயமாகவும். திறமையாகவும் ஆட்சி செய்ய இயலவில்லை. அரசியல் ஊழல் எங்கும் தலை விரித்தாடியது. ரோமாபுரியின் சீர்கெட்ட ஆட்சியினால் மத்தியத் தரைக்கடல் உலகம் முழுவதுமே ஒரு குறிப்பிட்ட காலம்வரை பெருங்குழப்பம் நிலவியது. அரசியல்வாதிகளும், படைத்தளபதிகளும்., கிளர்ச்சித் தலைவர்களும் அதிகாரத்தைப் பிடிக்கப் போராடினார்கள். படைகள் போட்டி அணிகளாகப் பிளவுபட்டு ரோமின் மீதே தாக்குதல் நடத்தின. (கி.மு.78 இல் மாரியசின் படைகளும், கி.மு.82 இல் சல்லாவின் படைகளும் இவ்வாறு படையடுத்தன). அரசில் ஊழல் மலிந்து திறமையற்ற ஆட்சி நடந்து வந்தபோதிலும் பெரும்பான்மையான ரோமானியக் குடிமக்கள் அரசு நீடிப்பதை விரும்பினர். ரோமில் மக்களாட்சி முறையை நெடு நாள் காப்பாற்றி வைக்க முடியாது என்பதையும் அப்படி காப்பாற்றுவதாலும் ஒரு பயனுமில்லை என்பதையும் மிகத் தெளிவாக அறிந்து கொண்ட முதாலாவதாவது முக்கியமான அரசியல் தலைவர் ஜலியஸ் சீசர் ஆவார்.

சீசர் பண்டைய ரோமாபுரி உயர்குடி ஒன்றின் வழித் தோன்றலாக வந்தவர். அவர் சிறந்த கல்வி பயின்றார். இளமையிலேயே அரசியலில் நுழைந்தார். அவர் பதவிகளை வகித்தார். பல்வேறு தலைவர்களுடன் கூட்டணி சேர்ந்து செயற்பட்டார். படிப்படியாக அரசியலில் உயர்நிலை எய்தினார். அதன் விவரங்களை விரிப்பின் பெருகும். எனினும், கி.டு. 58 ஆம் ஆண்டில், ஜூலியஸ் சீசர் தமது 42 ஆம் வயதில், ரோமாபுரியின் ஆட்சியின் கீழிருந்த சிசால்பைன் கால் (வடக்கு இத்தாலி), இல்லிரீக்கம் (யூகோஸ்லோவியாவின் கடற்கரைப் பகுதி) நார்போனிஸ் கால (பிரான்சின் வடக்குக் கடற்கரைப் பகுதி) ஆகிய மூன்று அயல்நாட்டு மாகாணங்களின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 20,000 வீரர்களை கொண்ட நான்கு ரோமானியப் படை அணிகள் அவருடைய ஆணையின் கீழ் வைக்கப்பட்டன.

சீசர், கி.மு. 58-51 ஆண்டுகளில் இந்தப் படைகளைப் பயன்படுத்தி, தற்போதுள்ள பிரான்சும், பெல்ஜியமும் அடங்கிய கால்பகுதி முழுவதையும், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி, ஹாலந்து ஆகிய நாடுகளின் பகுதிகளையும் வெற்றி கெண்டார். அவருடைய படையினரின் எண்ணிக்கையை விட காலிக் மரபுக் குடிமக்களின் படையினர் மிகப் பெருமளவில் இருந்தபோதிலும், அந்தப் படையினரைச் சீசர் படைகள் முற்றிலுமாக தோற்கடித்து, ரைன் ஆறுவரையிலிருந்த பகுதிகள் அனைத்தையும் ரோமானிய ஆட்சியின் கீழ் கொண்டு வந்தன. பிரிட்டனைக் கைப்பற்றுவதற்காகவும் இரண்டுமுறை சீசர் படைகளை அனுப்பினார். ஆனால் அங்கு நிரந்தரமான வெற்றிகளை அவை பெற முடியவில்லை.

சீசர் ஏற்கெனவே மக்களிடம் செல்வாக்குமிக்க ஒரு முன்னணி அரசியல் தலைவராக இருந்தார். கால் பகுதியை அவர் வெற்றி கொண்ட பிறகு. ரோமாபுரியில் மக்கள் போற்றும் மாபெரும் நாயகராக அவர் திகழ்ந்தார். அவர் அளவுக்கு மீறிப் புகழும், வலிமையும் பெற்றுவிட்டதாக ரோமிலிருந்த அவரது அரசியல் எதிரிகள் கருதினார்கள். அவருடைய இராணுவத்தின் மீது அவருக்கு அளிக்கப்பட்டிருந்த அதிகாரம் முடிவுற்றதும், அவர் ஒரு தனி குடிமகனாக, அதாவது, அவருடைய இராணுவம் இல்லாமல் ரோமாபுரிக்கு திரும்பி வர வேண்டும் என்று ரோமானிய ஆட்சிப் பேரவை அவருக்கு ஆணையிட்டது. படைகள் இல்லாமல் ரோமாபுரிக்குத் தாம் திரும்பிச் சென்றால் தம்மை அழித்து விடுவதற்கு அரசியல் எதிரிகள் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார்கள் என சீசர் அஞ்சினார். அந்த அச்சம் நியாயமானதாகவே இருந்தது. எனவே கி.மு. 49 ஆம் ஆண்டு ஜனவரி 10-11 ஆம் நாள் இரவில், ரோமானிய ஆட்சிப் பேரவையின் ஆணையை மீறி சீசர் தனது படைகளுடன் வட இத்தாலியிலுள்ள ரூபிக்கோன் ஆற்றைக் கடந்து, ரோமாபுரிக்குள் நுழைந்தார். சீசரின் இந்தச் சட்டவிரோத நடவடிக்கை, சீசரின் படையணிகளுக்கும், ஆட்சிப் பேரவை ஆதரவுப் படைகளுக்குமிடையே உள்நாட்டுப் போரைத் தோற்றுவித்தது. இந்த உள்நாட்டுப் போர் நான்கு ஆண்டுகள் வரை நீடித்தது. இறுதியில் இப்போரில் சீசர் முழு வெற்றியடைந்தார். கி.மு .45 ஆம் ஆண்டில் மா‘ச் 7 ஆம் நாளன்று ஸ்பெயினிலுள்ள முண்டாவில் நடந்த இறுதிப்போரில் சீசரின் படைகள் ஆட்சிப் பேரவைப் படைகளை முற்றிலுமாகத் தோற்கடித்தன.

ரோமுக்கு திறமையும், அறிவுறுத்தும் ஆற்றலும் வாய்ந்த ஒரு வல்லாட்சிதான் பொருத்தமானது என்ற முடிவுக்கு சீசர் வந்திருந்தார். அந்த வல்லாட்சியைத் தம்மால்தான் அளிக்க முடியும் என்றும் அவர் கருதினார். கி.மு. 45 ஆம் ஆண்டு அக்டோபரில் அவர் ரோமாபுரிக்குத் திரும்பி வந்தவுடனேயே அவர் அவரது ஆயுட்காலத்திற்கும் சர்வாதிகாரியாக நியமிக்கப்பட்டார். கி.மு. 44 ஆம் ஆண்டு அவருக்கு முடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால், முடியுரிமையை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்துவிடடார். ஆயினும், அவர் ஏற்கெனவே ஓர் இராணுவ சாவாதிகாரியாக இருந்தமையால், அவர் முடியாட்சியை ஏற்க மறுத்த செயல் குடியரசை ஆதரித்த அவரது எதிரிகளுக்கு முழு நம்பிக்கையளிக்கவில்லை. அவர்களில் சிலர் ஒன்றுகூடி சதி செய்து கி.மு. 44 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் நாளன்று ஆட்சிப் பேரவையின் ஒரு கூட்டத்தில் சீசரைக் கொன்றனர்.

சீசர் தம் வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் பல்வேறு சீ‘திருத்தங்களைத் தீவிரமாகச் செயற்படுத்தினார். இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற வீரர்களையும், ரோம் நகரில் வாழ்ந்த நகர்ப்புற ஏழை மக்களையும் பேரரசு நெடுகிலும் புதிய சமூகக் குழுமங்களாகக் குடியமர்த்துவதற்கு அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். ரோமானியக் குடியுரிமையை பல்வேறு புதிய மக்கள் குழுமங்களுக்கும் நீட்டித்தார். இத்தாலிய நகர்களுக்கு ஒரே சீரான நகராட்சி முறையைக் கொண்டு வர அவர் திட்டமிட்டார். ஏராளமான கட்டிடங்களை எழுப்புவதற்கும் அவர் திட்டம் வகுத்தார். ரோமானியச் சட்டத்தை முறைப்படத் தொகுத்தமைக்கவும் அவர் ஏற்பாடு செய்தார். வேறு பல சீ‘திருத்தங்களையும் மேற்கொண்டார். ஆனால், ரோமுக்கு மனநிறைவளிக்கக் கூடிய, அரசமைப்புப்படி அமைந்த ஓர் அரசு முறையை உருவாக்கிக் கொடுக்க அவர் தவறினார். அவருடைய வீழ்ச்சிக்கு இது முதன்மையான காரணம் எனலாம்.

சீசர் முண்டாவில் பெற்ற வெற்றிக்கும், ரோமில் அவர் கொலையுண்டு இறந்ததற்குமிடையில் ஓராண்டு காலமே கழிந்திருந்ததது. எனவே, அவருடைய திட்டங்களில் பல நிறைவேற்றப்படாமல் போயின. ஆகவே, அவர் உயிரோடிருந்திருந்தால் அவருடைய ஆட்சி எத்ததுணையளவுக்குத் திறமையாகவும், அறிவுறுத்தும் ஆற்றலுடனும், செயற்பட்டிருக்கும் என்பதை நிச்சயமாகக் கூறுவது கடினம். அவருடைய சீர்திருத்தங்கள் அனைத்திலும். அவர் நடைமுறைக்குக் கொண்டு வந்த புதிய ஆண்டுக் குறிப்போடு நிலைபேறுடைய் விளைவைக் கொண்டதாகும். அவர் புகுத்திய இந்த ஆண்டுக் குறிப்பேடு, சிற்சில மாறுதல்களுடன் இன்றும் உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வரலாறு கண்ட கவர்ச்சிமிக்க அரசியல் தலைவர்களில் ஜூலியஸ் சீசரும் ஒருவர். அவர் பல வகைப்பட்ட திறம்பாடுகளைக் கொண்டிருந்தார். அவர் ஒரு வெற்றிகரமான அரசியல்வாதியாகத் திகழ்ந்தார். பல வெற்றிகளைக் குவித்த திறமைவாய்ந்த படைத்தளபதியாக விளங்கனார். கேட்டார் பிணிக்கும், சொல்வன்மை படைத்தவராக இருந்தார். சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். கால் வெற்றியை விவரித்து அவர் எழுதிய நு‘ல் ஒரு தலைசிறந்த இலக்கியப் படைப்பாகப் போற்றப்படுகிறது. இது, லத்தீன் இலக்கியங்கள் அனைத்திலும் படிப்பதற்கினியதும் சுவை மிகுந்ததும் ஆகும் எனப் பெரும்பாலான மாணவாகள் பாராட்டுகிறார்கள். சீசர் வீரமும், தீரமும் மிகுந்தவராகவும் சுறுசுறுப்பு வாய்ந்தவராகவும் ஆணழகனாகவும் விளங்கினார். அவர் டான் ஜூவான் போன்று வசைப் பெயர் எடுத்தார். அவர் காலத்தில் அனுமதிக்கப் பெற்ற சொந்த வாழ்க்கைச் சுதந்திரங்களின் படிப் பார்த்தாலும் அவரை ஒழுக்கமற்றவர் என்றே கருத வேண்டும். (எகிப்திய அழகி கிளியோபாத்ராவுடன் அவர் கொண்டிருந்த காதல் உறவு உலகப் புகழ் பெற்றதாகும்).

சீசரின் குண இயல்பு மிகுந்த கண்டனத்திற்குள்ளாகியது. அவர் அதிகார வேட்கை கொண்டவராக இருந்தார். அவர் தமது செல்வத்தைப் பெருக்கிக் கொள்வதற்குத் தம் அரசியல் பதவிகளைப் பயன்படுத்திக் கொண்டார் என்பது உண்மை. எனினும், பேராசை கொண்டு பெரும்பாலான அரசியல்வாதிகளைப் போலன்றி, சீசர் தவறான வழியில் செல்வந்தராகவோ, வஞ்சிக்கும் இயல்புடையவராகவோ இருக்கவில்லை. கால் மக்களுடன் போரிடும்போதும் அவர் ஈவிரக்கமற்றவராகவும், மிருகத்தனமாகவும் நடந்து கொண்டார். அதே சமயம் தோற்கடித்த ரோமானிய எதிரிகளிடம் அவர் வியக்கத்தக்க அளவுக்குப் பெருந்தன்மை காட்டினார்.

சீசரின் பெயரே பெருமைக்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது. ஜெர்மன் அரசர்கள் சூட்டிக் கொண்ட “கெய்சர்” பட்டமும், ரஷிய அரசர்கள் ஏற்றுக் கொண்ட “சார்” “சீசர்” என்ற சொல்லின் தழுவல்கள் ஆகும். ரோமானியப் பேரரசை உண்மையாக நிறுவியவர் எனக் கருதப்படும் சீசரின் கொள்ளுப்பேரன் அகஸ்டஸ் சீசரை விட ஜூலியஸ் சீசர் அதிகப் புகழ் பெற்றிருந்தார். எனினும் வரலாற்றில் ஜூலியஸ் சீசர் உள்ளபடிக்குக் கொண்டிருந்த செல்வாக்கு அகஸ்டஸ் சீசரின் செல்வாக்குக்குச் சமமானதாகாது. ரோமானியக் குடியரசின் வீழ்ச்சியில் ஜூலியஸ் சீசர் முக்கிய பங்கு கொண்டிருந்தார் என்பது உண்மையே. ஆனால், அதில் அவருடைய முக்கியத்துவத்தை மிகைப்படுத்தலாகாது. ஏனெனில் ரோமில் குடியரசு முறையிலான அரசு ஏற்கெனவே ஆட்டங்கண்டிருந்தது.

கால் நாட்டை வெற்றி கொண்டது சீசரின் மிக முக்கியமான சாதனையாகும். அங்கு அவர் வெற்றி கொண்ட பகுதிகள், சுமார் ஐந்து நூற்றாண்டுகள் வரை ரோமானிய ஆட்சியின் கீழ் இருந்தன. அந்தக் கால அளவின் போது, அப்பகுதிகள் முற்றிலும் ரோமானிய மயமாக்கப்பட்டன. ரோமானியச் சட்டங்களும், பழக்கவழக்கங்களும், மொழியும் அப்பகுதிகளில் புகுத்தப்பட்டன. பின்னர், ரோமானியக் கிறிஸ்துவமும் அங்கு பரவியது. இன்றைய பிரெஞ்சு மொழிகூட அந்தக் காலத்தில் வழங்கிய பேச்சு வழக்கு மொழியிலிருந்து உருவாக்கப்பட்டதேயாகும்.

கால் நாட்டை சீசர் வெற்றி கொண்டதன் காரணமாக ரோமிலுங்கூட முக்கியமான மாறுதல்கள் ஏற்பட்டன. குறிப்பாக வடக்கிலிருந்து தாக்குதல் அபாயம் ஏற்படாமல் இத்தாலிக்குப் பல நூற்றாண்டு காலம் தற்காப்பு அரண் ஏற்பட்டது. உண்மையில், கால் நாட்டின் வெற்றி, ரோமானியப் பேரரசு முழுவதற்குமே சிறந்த பாதுகாப்பாக அமைந்தது.

சீசர் இல்லாதிருந்தாலும் கால் நாட்டை முன்னரோ பின்னரோ ரோமானியர்கள் வெற்றி கொண்டிருப்பார்கள் எனக்கூற முடியுமா? ரோமானியப் படை, கால் மரபுக் குடிகளின் படையினரைவிட எண்ணிக்கையில் அதிகமாக இருக்கவில்லை. காலியப் படையினரைவிடத் தொழில் நுட்பத்திலும் ரோமானியப் படை தேர்ந்ததாக இருக்கவில்லை. கால் நாட்டை சீசர் வெற்றி கொள்வதற்கு முன்னரே ரோமானியப் பேரரசு விரைவாக விரிவடைந்து வந்தது. அதன் பின்னரும், சிறிதுகாலம். ரோமானியப் பேரரசு விரிவடைந்தது. அந்தக் காலத்தில் ரோமானியப் படைகள் மிகவும் ஆற்றல் வாயந்ததாக இருந்தாலும் கால் பகுதி ரோமுக்கு மிக அருகில் அமைந்திருந்ததாலும் கால் மரபுக் குடிகளிடையே ஒற்றுமை இல்லாதிருந்ததாலும் கால் நாடு சுதந்திரமாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கவில்லை என்றே தோன்றுகிறது. எது எவ்வாறாயினும் மிகப் பெரிய கெல்ட்டியப் படைகளைத் தோற்கடித்து, கால் பகுதியை வெற்றிக் கொண்ட தள்பதி, ஜூலியஸ் சீசர்தான் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த அரிய சாதனைக்காகவே முக்கியமாக அவருக்கு இந்த நூலில் இடமளிக்கப்பட்டிருக்கிறது.

 

நன்றி : தமிழ்ச் சுரங்கம்.காம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *