கட்சிக்காகத்தான் சினிமாவுக்கு வந்தேன்; நடிகர் இயக்குனர் கவிதா பாரதி


 

 

திரைப்படங்கள்மீதான மதிப்பீடுகளால் மாத்திரமின்றி, ஈழம், இலக்கியம், தமிழக அரசியல் குறித்த தன் நிலைப்பாடுகளினாலும் கவனத்தை ஈர்த்தவர் கவிதா பாரதி. ஈழப் போராட்டம் மீது பெரும் பற்றுக் கொண்ட இவர், ஈழ இலக்கியம் குறித்தும் நிறைந்த வாசிப்பு கொண்டவர்.கள்ளப்படம், படைவீரன், செக்கச்சிவந்த வானம், ராட்சசி முதலிய படங்களிலும் நடிப்பால் தலைகாட்டியுள்ளார். தொலைக்காட்சித் தொடர்கள் திரைப்படங்களில் நடிப்பு என்று தொடர்ச்சியாக இயங்கிக் கொண்டிருக்கும் இயக்குனர், நடிகர் கவிதா பாரதி வணக்கம் லண்டனுடன் சில நிமிடங்கள் உரையாடுகிறார். -ஆசிரியர்

Image may contain: Kavitha Bharathy, smiling, sky, outdoor and nature

திரைத்துறையில் ஏற்பட்ட ஆர்வம் பற்றி சொல்லுங்கள்.

அன்று பெரியார் மாவட்டம் என்று அழைக்கப்பட்ட ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவன் நான்.. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன்..

நிர்வாகப் பொறுப்புகளில் இளைஞர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டுமென்று கட்சி தீர்மானித்தது.. அதன்படி வாக்களிக்கும் வயதுகூட இல்லாத நான் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்..

அப்போது பொதுக்கூட்டம் என்னும் வடிவம் வழக்கொழியத் தொடங்கியிருந்தது.. இது குறித்து என் வயதொத்த தோழர்கள் விவாதித்தோம்.. பின் கட்சியின் பரப்புரைக்காக ஒரு கலைக்குழுவை உருவாக்கி தெரு நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருந்தோம்..

Image may contain: 1 person, tree and outdoor

அந்த நேரத்தில்தான் பாலு மகேந்திரா அவர்களின் வீடு திரைப்படம் வெளிவந்தது.. எளிய மக்களின் பிரச்னைகளைச் சொல்வதற்கான வலிமையான கலைவடிவம் திரைப்படம்தான் என்பதை வீடு படம்தான் எனக்கு உணர்த்தியது.. நான் திரைப்படம் நோக்கிச் செல்வதாக முடிவெடுத்தேன்..

எனினும் கட்சிப் பணியிலிருந்து விடுபடுவதற்கு மாவட்டக்குழு ஒப்புக்கொள்ளவில்லை.. அடுத்துவரும் தேர்தலில் சட்டமன்ற வேட்பாளராக என்னைத் தயார்படுத்த வேண்டுமெனவும், திரைப்படம் பற்றிய எண்ணத்தை விட்டுவிடுமாறும் அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர். ந.பெரியசாமி கூறினார்..

திரைப்படத்தின் வலிமை, கட்சி அதைக் கையிலெடுக்க வேண்டிய தேவை ஆகியவற்றை நான் விளக்கிச் சொன்னேன்.. என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக அல்ல, கட்சியின் பிரச்சார ஊடகமாகக் கருதித்தான் திரைப்படத் துறைக்குச் செல்ல விரும்புகிறேன், இதுவும் கட்சிப்பணிதான் என்று சொன்னபிறகு இரண்டு ஆண்டுகள் விடுமுறை கொடுத்து கட்சி என்னை சென்னைக்கு அனுப்பி வைத்தது..

Image may contain: one or more people and people sitting

இதுவரையில் நடித்த படங்கள் எவை? அதில்  உங்களுக்கு மிக பிடித்த நீங்கள் நடித்த பாத்திரம் எது? 

தேர்வு செய்து சொல்லுமளவுக்கு நான் படங்களில் நடிக்கவில்லை.. என்னமோ நடக்குது, கள்ளப்படம், படைவீரன், செக்கச்சிவந்த வானம், ராட்சசி இவ்வளவுதான் நான் நடித்த படங்கள்.. இதில் படைவீரன் எனக்கு மிகவும் நிறைவான படம்..

சாதிக் கலவரத்தின் வன்மத்தை சொன்ன படம்.. அதில் மோதலைத் தூண்டிவிடும் முக்கியக் கதாபாத்திரம்.. எனினும் மிகை நடிப்பில்லாமல் செய்ய வாய்ப்பளித்த படம்..

Image may contain: one or more people, stripes and hat

தொலைக்காட்சி தொடர்களை இயக்குகிறீர்கள்.  தொடர் நாடகங்கள் குறித்த விமர்சனங்கள் தொடர்பில் உங்கள் கருத்தென்ன?

இன்றைய தொலைக்காட்சித் தொடர்கள் ஏன் இப்படி இருக்கின்றன என்பதற்கான காரணங்களை ஓரளவு கண்டறியலாம்.. ஆனால் விமர்சனங்களிலிருந்து அவற்றைத் தாங்கிப் பிடிக்கும் தர்க்கரீதியான வாதங்கள் என்னிடமில்லை.

வணக்கம் லண்டனுக்காக பூங்குன்றன். 

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *