கிளையின் மீதொரு குளம் | ஹேமாவதி


கிளையின் மீதொரு குளம் | ஹேமாவதி

திடீரென
உற்சாகமெடுத்தது மழை
பெருநகர பகலொன்றில்

மின்சார துண்டிப்பால்
இருளில் மூழ்கியிருந்தன
செயலற்ற கணினியும்
ஏழுதளம் கொண்ட வளாகமும்

ஞாயிறு தெரியாத வெளிச்சத்தை
அறைக்குள் ஊடுருவ
மூன்றாம் தளத்தில்
திரைவிலக்கி ஜன்னல் திறக்கையில்

சற்றே வளர்ந்த
அத்திமரத்தின் வெளிர் இலைகள்
களிப்பூட்டியது
தன் பசுமையில்

மொட்டைமாடியின் வெளிகளில் பட்டு
தெறித்துவிழும் மழைத்துளிகள்
தண்ணீர்ப் பூக்கள் போலும்
வெள்ளைப் புற்கள் போலும்
எண்ணி லயித்தது மனம்

கட்டடத்தை தழுவி நிற்கும்
தென்னையின் கீற்றுகள்
உதிர்ந்து கிடந்தன
ஏதோ ஒரு சிற்பம்போல்

தெற்குப் புறத்தில்
ஒரு கட்டடம் போலவே எழும்பியிருந்தது
பெரியதொரு மாமரம்

அதன் பக்கவாட்டில்
பச்சை ஆடையை விலக்கி
தன் அங்கம் தெரிய
குளித்துக்கொண்டிருந்தது
ததும்பியிருந்த வேம்பு

இறகுகள் முழுவதும் விரித்து
ஊடுருவிய ஈரத்தை
தன் அலகால் கோதி
கிளைக்குக் கிளை குதித்து தாவி
பரவசத்தில் நெடுநேரம்
நீராடிக் கொண்டிருந்தன காகங்கள்

மின் ஒளி வந்து
வெகுநேரமாகியிருந்தது
என் அறைக்குள்.

நன்றி – ஹேமாவதிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *