கவிதை | தாய் பாசம் | கயல்விழி


உன் கருவறையில்  – எனை

பத்து மாதங்கள் பாதுகாத்தாய்

உன் கண்ணுக்குள் வைத்து

கலங்காது எனை பராமரித்தாய்

 

தரையில் விழ விடாது –  எனை

ஓடி வந்து ஏந்திக் கொண்டாய்

உன் நெஞ்சில் அனைத்து

பக்குவமாய் வளர்த்தெடுத்தாய்

mother_daughter021

தலை நிமிர்ந்து நான் நடக்க

வடிகாலாய் நீ இருந்தாய்

குழந்தைகளுடன் நாம் வாழ – எம்

குல தெய்வம் வேண்டி நின்றாய்

 

இத்தனையும் எனக்காக செய்த

என் தாயே……..

உனக்காக நான் என்ன செய்தேன்…

 

என் சிறு வயதில் உன்னை

வேதனைப் படுத்திய நாட்களே அதிகம்

அழுது அடம் பிடித்து –

பெற்று கொண்ட விடயமோ பலவிதம்

 

ஆனால் அதன் பின்னணியில் – உன்

விட்டுக் கொடுத்தலையும் தியாகத்தையும்

புரிந்து கொள்ள தவறி விட்டேன் – உன்

பாசத்தை உணராமல் விட்டு விட்டேன்

 

நினைத்து பார்க்கிறேன்…

வலிக்கிறது மனசு

நான் தாயான போது தான்

புரிந்து கொண்டேன்

உன் பாசமும் தியாகமும்

எத்தனை மேலானது என்று….

உன் வலியின் வேதனை

எத்தனை ஆழமானது என்று…

 

வயது முதிர்ந்த இந் நிலையில் – உன்னை

என்னருகில் வைத்திருக்க ஏங்குகிறேன்

என் பணிவிடைகள் மூலம் – உன்னை

என் குழந்தையாய் சீராட்ட துடிக்கிறேன்

3

இந்த பிறப்பில் என் தாயாய்

நீ இருக்கிறாய்  – என்

அடுத்த பிறப்பில் – உன்

தாயாய் நான் பிறக்க வேண்டும் – என்

குழந்தையாய் நீ வரவேண்டும்

 

என் தாயாய் நீ இருந்து –

எனக்கு தந்த பாசம், தியாகம் – இவை

எல்லாவற்றையும் இரட்டிப்பாக்கி

நான் தருவேன் உனக்கு………….

 

– கயல் விழி –3 thoughts on “கவிதை | தாய் பாசம் | கயல்விழி

 1. தாய் மடியின் சுகமும் – அவள் மனசின் ஏக்கமும்
  ஒரு நொடிப்பொழுதில் வந்து போனது ……
  தாயாகும் போதுதான் நம் தாய் மனம் புரியுமோ ?
  அழகான வரிகளைக்கொண்டது இக்கவிதை …
  நன்றி – வந்தியத்தேவன்

 2. கயல்விழியின் கவிதை வரிகள் நீண்ட நேரம் மனதைக் கனக்க வைத்தது
  அவரைப் போல தம் தாயைப் பிரிந்து துடிக்கும் அத்தனை உள்ளங்களினதும் வெளிப்பாடுதான் இந்த தாய் பாசம் என்னும் கவிதை
  ‘குழந்தைகளுடன் நாம் வாழ நம் குல தெய்வம் வேண்டி நின்றாய் ‘
  என்ற வரிகள் ஆத்மாவைத் தொட்டுச் செல்கிறது மிக அழகான அர்த்தமுள்ள கவிதை! பலர் மனங்களின் ஆழத்தில் இருக்கும் நிஜத்தைச் சொல்லுகிறது இது அவரது உள்ளத்து உணர்வு மட்டுமல்ல எத்தனையோ பேரது ஏக்கங்களை தன்னுடாக எடுத்துச் சொன்ன கயல்விழிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்……… அன்புடன் அகல்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *