ஒரே பார்வையில் கிளிநொச்சியில் பெரு வெள்ளம்; மக்கள் அவலம்


கிளிநொச்சியில் பெய்து வரும் கன மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இரத்தினபுரம், உருத்திரபுரம், ஆனந்தபுரம், சிவபுரம் உள்ளிட்ட பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
அத்துடன் பன்னங்கண்டி, சிவபுரம், கண்டாவளை, தட்டுவன்கொட்டி, சிவபுரம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தநிலையில் கண்டாவளை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
இதேவேளை முல்லைதீவு தண்ணிமுறிப்புகுள வான்கதவுகள் இரண்டு திறக்கப்பட்டுள்ளது. மேலும் இரணைமடு பகுதியில் உள்ள இரண்டு வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளது.

வள்ளிபுனத்தில் உடைந்தது பாலம்!

பரந்தன் – முல்லைத்தீவு பிரதான வீதியிலுள்ள (ஏ-35) பாலமொன்று உடைந்துள்ளதால் மாற்று பாதையை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வள்ளிபுனம், காளி கோவிலடி பகுதியிலுள்ள பாலமே  இவ்வாறு உடைந்துள்ளது.
இதனால் குறித்த பகுதியூடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக வீதிப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் குறித்த வீதியில் வாகனத்தை செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் மாற்று பாதையை பயன்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியுள்ளார்.

முறிந்து வீழ்ந்த மரம்! பாதிக்கப்பட்ட போக்குவரத்து

வவுனியா – மன்னார் பிரதான வீதியிலுள்ள வேப்பங்குளம் வீதியோரத்தில் இருந்த பெரும் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையினால் போக்குவரத்து பல மணி நேரம் பாதிப்படைந்திருந்தது. இன்று (06) அதிகாலை 4 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து 3 மணித்தியாலயமாக பாதிப்படைந்திருந்த நிலையில் பொலிஸார், பொதுமக்கள் மற்றும்  பயணிகளின் ஒத்துழைப்புடன் வீதியின் போக்குவரத்துக்கு இடையூறாகவிருந்த மரத்தினை வெட்டி, அவ்விடத்திலிருந்து அகற்றி போக்குவரத்தை சீர்செய்துள்ளனர்.

வெள்ளத்தில் மாணவர்கள்; வள்ளத்தில் ஏற்றிய இராணுவம்

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மழையுடனான காலநிலை நிலவி வருகின்றது. குறிப்பாக வடக்கு, கிழக்கில் பெய்து வரும் மழை காரணமாக மக்களின் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் கிளிநொச்சியில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி இந்து கல்லூரி வெள்ள நீரில் மூழ்கியுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சை நடைபெறும் மண்டபமும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கிளிநொச்சியில் மீட்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளதாக ஆதவனின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *