என் கண்ணில் ஒரு தூசு விழாமல் பிரியமாய் பார்த்துக்கொண்டார் லிங்குசாமி! மனுஷ்ய புத்திரன் நெகிழ்ச்சி


அண்மையில், இயக்குனர் லிங்குசாமியின் கவிதைகளை முன்வைத்து ஜெயபாஸ்கரன் எழுதிய கற்றுக்கொடுக்கிறது மரம் புத்தக வெளியீட்டு விழா மதுரையில் நடந்தது. இதில் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர், சு. வெங்கடேசன், இயக்குனர்களான, பாலாஜி சக்திவேல், மற்றும் லிங்குசாமி, கவிஞர் மனுஷ்ய புத்திரன், பேராசிரியர் ஞானசம்பந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வு குறித்து முகப்புத்தகத்தில் எழுதிய மனுஷ்ய புத்திரன், இயக்குனர் லிங்குசாமி கண்ணில் ஒரு தூசு விழாமல் அத்தனை பிரியமாய் பார்த்துக்கொண்டார் என்று நெகிழ்ந்துள்ளார். அவரது பதிவு. 

நேற்று மதுரையில் நண்பர்களுடன் இருந்தேன். இயக்குனர் லிங்குசாமி கண்ணில் ஒரு தூசு விழாமல் அத்தனை பிரியமாய் பார்த்துக்கொண்டார். இத்தனை வாஞ்சையுள்ள ஒரு மனிதனோடு இருந்தது எவ்வளவோ இதமாக இருந்தது. 

இலக்கியம், சினிமா என அவற்றின் வெளிசமான மற்றும் இருண்ட பக்கங்களை இடையறாது பேசிக்கொண்டேயிருந்தோம். சஹ்ருதயர்கள் என்பதை உணர்ந்துகொண்ட நாள்.

நண்பர் ஆத்மார்த்தி காலையில் கிளம்பும்போது ரஷ்ய இலக்கியத்தின் பழைய பதிப்புகள் சிலவற்றை கொண்டுவந்து தந்தார். அலெக்சாந்தர் குப்ரினின் ” செம்மணி வளையல்”, மக்ஸும் கார்க்கியின் ” மூவர்” என. தொலைந்துபோன பொருள்கள் கிணற்றிலிருந்து கிடைத்ததுபோன்ற நிம்மதி. இதையெல்லாம் ஒரு காலத்தில் எத்தனை முறை படித்திருப்பேன். என்னை நானே அப்படித்தான் வார்த்துக்கொண்டேன்

சென்னைக்கு மதியம் வந்துசேர்ந்தேன். வந்ததும் தனிமையுணர்ச்சியின் நோய்மை வாட்டத்தொடங்கிவிட்டது. இனம் புரியாத எரிச்சலும் கோபமும் மனதை ஆக்ரமிக்கிறது. உண்மையில் இந்த நகரம் முழுக்க தனிமையுணர்ச்சி என்ற கொள்ளை நோய் பரவியிருக்கிறது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *