தமது அமைதிப்படை வீரர்களை திரும்ப அழைக்கிறது சாட் அரசு


மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் கடந்த ஆண்டு உள்நாட்டுப் போராளிகளான செலேகா இயக்கத்தினருடன் சேர்ந்து அந்நாட்டு அதிபராக இருந்த பொசைசைப் பதவி இறக்கி மைக்கேல் ஜோடோடிடா ஆட்சியைப் பிடித்தார். ஆனால் அவராலும் இந்த இயக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகவே இந்த ஆண்டு ஜனவரி மாதம் அவரும் பதவி விலகினார்.

தற்போது இடைக்கால அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாடு முஸ்லிம், கிறிஸ்தவ மக்களிடையேயான இனக் கலவரத்தைச் சந்தித்து வருகின்றது. இந்தக் கலவரங்களை அடக்கி அங்கு மீண்டும் அமைதியை நிலைநாட்டும்விதமாக பிரான்ஸ், அண்டை நாடுகளான சாட், கேமரூன் உட்பட சர்வதேசப் படைகளின் வீரர்கள் 6000 பேர் இங்கு முகாமிட்டுள்ளனர். இதில் சாட் வீரர்கள் மட்டும் 850 பேருக்குமேல் இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆனால் சமீபகாலமாக இவர்கள் போராளிகளுக்கு உதவுவதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிறிஸ்தவப் போராளிகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லிம் குழுவினர் அண்டை நாடுகளான சாட் மற்றும் கேமரூனில் சிறிது காலம் முன்பு தஞ்சம் புகுந்தனர். அப்போது மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் நடைபெறும் துன்பங்களுக்கு எல்லாம் சாட் வீரர்களும் ஒரு காரணம் என்ற தகவல் அவர்களால் பரப்பப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. மேலும் சென்ற வருடம் பதவி இறக்கம் செய்யப்பட்ட அதிபர் பொசைசும் தான் பதவியிலிருந்த விரட்டப்பட்டதற்கு சாட் வீரர்களின் மறைமுக ஆதரவு இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த வார இறுதியிலும் ஆப்பிரிக்கக் குடியரசின் தலைநகர் பங்குயில் 24 பேர் இறந்ததற்கு சாட் வீரர்கள் காரணமாகக் கூறப்பட்டனர். ஆனால் தாங்கள் பதில் தாக்குதலில் ஈடுபட்டிருந்ததாகவே அந்த வீரர்கள் தெரிவித்தனர். தங்கள் வீரர்களின் தியாகங்கள் விமர்சிக்கப்படுவதாக சாட்டின் வெளிநாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தங்கள் வீரர்களைத் திரும்பப் பெறுவதான எண்ணத்தையும் வெளியிட்ட சாட் அரசு, தங்களது அறிக்கைகள் தயாராகும்வரை அவர்கள் தொடர்ந்து ஆப்பிரிக்கக் குடியரசில் இருப்பார்கள் என்றும் நேற்று தெரிவித்துள்ளது.

selekaCARLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *