மீள் உருவாக்கத்திற்காக அரியாலையில் புலிகளின் வீடு!!


அரியாலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்புத் தரப்புகளால் தெரிவிக்கப்பட்ட வீட்டின் வளாகத்தில் ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர்.

குறித்த ஆயுதக் கிடங்கு தொடர்பாக அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றின் அனுமதியைப் பெறும் நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றின் அனுமதி கிடைத்ததும் நீதவானின் முன்னிலையில் வீட்டு வளாகத்தில் ஆயுதக் கிடங்கைத் தேடி அகழ்வுப் பணிகள் இடம்பெறும் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரியாலை தபால் கட்டைச் சந்திக்கு அண்மையில் உள்ள குறித்த வீட்டில் இராணுவ முகாம் அமைந்திருந்தது. எனினும் அந்த முகாம் வடக்கு மாகாண சபைத் தேர்தலை அடுத்து அகற்றப்பட்டது.

இந்த நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மீள் உருவாக்க நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு தெய்வீகன், அப்பன் மற்றும் கோபி ஆகிய போராளிகள் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் திகதி வவுனியாவில் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் இந்த வீட்டிலிருந்தே பயங்கரவாத நடவடிக்கைகளை முன்னெடுத்தனர் என்று குறிப்பிட்டு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் தமது கட்டுப்பாட்டுக்கள் வீட்டை வைத்திருந்தனர். தற்போதும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரே அந்த வீட்டை தமது கட்டுப்பாட்டுக்கள் வைத்துள்ளனர்.

இந்த நிலையிலேயே, சம்பந்தப்பட்ட வீட்டில் பெரியளவிலான ஆயுதக் கிடங்கு உள்ளதாக இராணுவத்தினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, சம்பந்தப்பட்ட வீட்டில் பல தடவைகள் ஆயுதக் கிடங்கு தொடர்பாக ஆராய்ந்தபோதும் அதுதொடர்பாக எந்தவொரு ஆயுதமும் கிடைக்கவில்லை என்று பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *