ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது


சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் ஈரான் அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. வருகிற ஜூன் மாதம் 30ம் தேதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிகிறது. பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து முடிந்ததை ஒபாமா வரவேற்றுள்ளார். உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி அணுசக்தி திட்டங்களை ஈரான் அரசு தொடங்கியது. இதன் காரணமாக ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் பொருளாதார தடை விதித்தது. அணுசக்தி ஒப்பந்தங்களுக்கும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அணுசக்தி தொடர்பான எவ்வித திட்டங்களும் ஈரானால் மேற்கொள்ள முடியவில்லை. அணுசக்தியை ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என ஈரான் உறுதி அளித்தது.

இதையடுத்து, அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தையை ஈரான் தொடங்கியது. இதுதொடர்பான விதிமுறைகளை வகுப்பதில், ஈரானுக்கும் வல்லரசு நாடுகளுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. இந்நிலையில், அணுசக்தி ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த பேச்சுவார்த்தை நேற்று இறுதிக்கட்டத்தை அடைந்தது. இதையடுத்து, அணுசக்தி ஒப்பந்தம் வருகிற ஜூன் 30ம் தேதி கையெழுத்தாகிறது.

சுமார் 12 ஆண்டுகளுக்கு பிறகு அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதால் ஈரான் அரசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை அடைந்ததற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுவரலாற்று சிறப்புமிக்கது என அவர் கூறியுள்ளார். இந்நிலையில், எக்காரணம் கொண்டும் அணுசக்தி ஒப்பந்த விதிமுறைகளை ஈரான் மீறக்கூடாது என்றும்,  இந்த விஷயத்தை உலக நாடுகள் கவனித்து கொண்டு இருக்கின்றன எனவும் வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *