மீண்டும் பிரதமராகிறார் பிரசண்டா | நேபாளத்தில் இன்று தேர்வு


நேபளாத்தின் புதிய பிரதமராக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டா பதவியேற்கிறார்.

புதிய பிரதமருக்கான வாக்கெடுப்பு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.

மதேசிகள் உள்பட, முக்கிய கட்சிகளின் ஆதரவு இருக்கும் நிலையில், பிரசண்டா புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது. பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற செயலகத்தில் அவர் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். வேறு எவரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

அவருக்கு எதிராக முன்னாள் துணைப் பிரதமர் வாம்தேவ் கெளதம் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டாலும் அவர் அந்தத் தகவலை மறுத்தார்.

பிரசண்டாவின் வேட்புமனுவை நேபாளி காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா முன்மொழிவதாக அறிவித்தார். பிரண்டாவின் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கிருஷ்ண பகதூர் மஹாரா மனுவை வழிமொழிந்தார்.

பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் குறித்த அறிவிக்கையை அவைத்தலைவர் ஓம்சாரி கர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார். புதன்கிழமை காலை 11 மணிக்கு தேர்தல் நடைபெறும்.

நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சித் தலைவர் பிரசண்டாவின் இயற்பெயர் புஷ்பகமல் தாஹால்.

இதற்கு முன்னர் 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2009-ஆம் ஆண்டு மே வரை அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர். இந்தியாவுக்கு எதிரான கடுமையான நிலைப்பாடுள்ளவர்.

மதேசிகள் ஆதரவு: முன்னதாக, மதேசி கட்சிகளின் ஆதரவைப் பெற்றதன் மூலம் பிரசண்டா மீண்டும் பிரதமராவது ஏறக்குறைய உறுதியானது.

நேபாளத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை மதேசிகள் எதிர்த்து வருகின்றனர். அதில் குறிப்பிட்டுள்ள புதிய மாகாணங்கள் வரையறுக்கும் திட்டம், இந்திய வம்சாவளியினரான மதேசிகளின் சமூக – அரசியல் முக்கியத்துவத்தை அடியோடு ஒழித்துவிடும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.

நேபாள மக்கள்தொகையில் 50 சதவீதத்தினர் மதேசிகள். அவர்களின் சமூக – அரசியல் முக்கியத்தும் தொடரும் வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக் கோரி, அப்பிரிவினர் கடந்த பல மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்றல், போராட்டத்தில் பலியானவர்களைத் தியாகிகளாக அறிவித்தல், காயமடைந்த அனைவருக்கும் இலவச சிகிச்சை அளித்தல் தொடர்பாக நேபாள கம்யூனிஸ்ட்-மாவோயிஸ்ட் சென்டர் கட்சி, மதேசி கட்சிகளிடையே செவ்வாய்க்கிழமை உடன்படிக்கை ஏற்பட்டது.

இதையடுத்து, பிரசண்டாவுக்கு அவர்கள் முழு ஆதரவு தெரிவித்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *