விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப் பட்டதாக கிடைத்த தகவலின் பின் பயணிகள் வெளியேற்றம் | நியூயோர்க்


நியூயார்க் நகர விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்து பயணிகள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கென்னடி சர்வதேச விமான நிலையம் உள்ளது. அமெரிக்காவின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான இங்கிருந்து உள்நாட்டிற்கும், வெளிநாடுகளுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான விமான சேவை நடக்கிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் 1–வது முனையத்திலும் அடுத்த அரை மணி நேரத்தில் 8–வது முனையத்திலும் சரமாரியாக துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது.

இதனால் அங்கு விமானங்களில் ஏறுவதற்காக காத்திருந்த பயணிகள் பெரும் பீதியில் உறைந்தனர். அவர்கள் அலறியடித்துக் கொண்டு அங்கும் இங்குமாக ஓடத் தொடங்கினர். அங்கு உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பயணிகளை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர்.

இதற்கிடையே சமூக வளைத்தளங்களில், கென்னடி விமான நிலையத்தின் சம்பந்தப்பட்ட 2 முனையங்களிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் தங்களது இரு கைகளையும் தலைக்கு மேலாக உயர்த்தியபடி அச்சத்துடன் நிற்பது போன்ற புகைப்படங்களும், வீடியோ காட்சிகளும் வெளியானதால் மேலும் பதற்றம் ஏற்பட்டது.

இதுபற்றி 8–வது முனையத்தில் இருந்த பயணி ஜாக் யங் என்பவர், “ஆயுதம் ஏந்திய போலீசார் பயணிகள் அனைவரையும் சோதனைக்கு உட்படுத்தி பின்னர் வெளியேற்றினர்’’ என்று தெரிவித்து பீதியில் உறைந்த பயணிகள் நாற்காலிகளுக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருப்பது போன்ற 10–க்கும் மேலான புகைப்படங்களை டுவிட்டரில் அடுத்தடுத்து வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

என்றபோதிலும் விமான நிலையத்துக்குள் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்பட்டதை விமான நிலைய அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.

அவர்கள் கூறுகையில், “விமான நிலையத்தில் துப்பாக்கி சூடு நடந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1–வது மற்றும் 8–வது முனையங்களில் இருந்த பயணிகள் வெளியேற்றப்பட்டனர். இதில் யாரும் காயம் அடையவில்லை. இப்போது வரை விமான நிலையத்துக்குள் யாரிடமும் துப்பாக்கி இருந்ததாகவோ, துப்பாக்கியால் சுட்டதாகவோ அல்லது சிறிய வகை பீரங்கி குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாகவோ கூறப்படுவதற்கு எந்த ஆதாரமும் இல்லை“ என்று மறுத்தனர்.

நியூயார்க் போலீசின் சிறப்பு நடவடிக்கை பிரிவின் தலைவர் ஹாரி ஜே.வெடின் தனது டுவிட்டர் பதிவில், “பாதிக்கப்பட்ட விமான நிலைய முனையங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு எந்த துப்பாக்கி சூடும் நடந்ததாக தெரியவில்லை’’ என்றார்.

அதே நேரம் விமான நிலைய செய்தி தொடர்பாளர் ஜோ பென்டான்ஜெலோ, ‘‘துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்பட்டதைத் தொடர்ந்து 1–வது முனையப் பகுதிக்கு போலீசார் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். விமான நிலையம் அருகே உள்ள வான்விக் விரைவு நெடுஞ்சாலையின் ஒரு பகுதியும் மூடப்பட்டது. இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை’’ என்றார்.

இப்படி முன்னுக்கு பின் முரணான தகவல்கள் வெளியானதால் விமான நிலையத்துக்குள் என்ன நடந்தது என்பது உடனடியாக தெரியவரவில்லை. மேலும், 2½ மணி நேரத்துக்கு மேலாக இந்த 2 முனையங்களில் இருந்தும் எந்த விமானமும் புறப்படவோ, தரையிறங்கவோ இல்லை. இதனால் அப்பகுதி பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

இரவு 12 மணி அளவில்தான் கென்னடி விமான நிலையத்தின் 1–வது மற்றும் 8–வது முனையங்கள் வழக்கமான செயல்பாட்டுக்கு வந்தன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *